கம்பஹா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது, 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கம்பஹா தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் முதித்த புஸ்ஸெல்ல மற்றும் கம்பஹா தலைமையக பிரதான பொலிஸ் பரீட்சகர் லக்ஷ்மன் பண்டார ஆகியோரின் ஆலோசனையின் பேரில், கம்பஹா குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் இத்திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.
இச்சுற்றி வளைப்பின்போது, கம்பஹா மாவட்டத்திற்கு பாரியளவில் ஹெரோயின் போதைப் பொருள் விநியோகித்து வரும் இருவரையும், இவர்களிடமிருந்து போதைப்பொருளை விற்பனைக்காக வாங்கிச் செல்லும் 25 பேரையும் கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்திலிருந்து கைது செய்யப்பட்டுள்ள இந்த 27 பேரும், கம்பஹா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.