சத்தார் எம் ஜாவித்-
இந்த நாட்டின் வன்முறைக் கலாசாரத்தின் காரணமாக சொந்தப் பூமியில் இருந்து துரத்தப்பட்டு அகதிகள் என்ற வடுக்களுடன் காணப்படும் ஒரு சமுகமாக வடமாகாண முஸ்லிம்கள் காணப்படுகின்றனர். இந்த மக்களின் துன்பியல் நிறைந்த அவல அகதி வாழ்வுக்கு இம்மாதத்துடன் 27 வருடங்களை கடந்து 28வது வருடத்திற்குள் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருந்து வருகின்றனர் எனலாம்.
இவ்வாறு தமது 27வருட அவலங்களில் ஓரங்கட்டப்பட்ட ஒரு சமுகமாக வடமாகாண முஸ்லிம்கள் இந்த தேசிய நல்லிணக்க அரசாங்கத்தினாலும் பார்க்கப்படுவது பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் ஒரு வகையான சோர்வு நிலைமைகளை ஏற்படுத்தியிருப்பதுடன் அவர்களின் இயல்பு வாழ்வியலும் வீழ்ச்சி நிலைமைகளுக்குள் சென்று கொண்டிருப்பதனையே அவதானிக்க முடிகின்றது.
இந்த நாட்டின் பயங்கரவாதச் செயற்பாடுகள் 1980ஆம் ஆண்டு காலத்திலிருந்து ஆரம்பித்து அது 1983ஆம் ஆண்டு காலத்திலிருந்து அரச படைகளுக்கும் ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்களுக்கும் இடையிலான சிறிய போராட்டமாக ஆரம்பித்து அது நாளடைவில் பெரிதாகி அது வடகிழக்கை ஒரு யுத்த சூணியப்பகுதியாக ஆக்கி அந்த மக்கள் நிம்மதியாக வாழ முடியாத ஒரு துர்ப்பாக்கிய காலமாக அந்தக் காலம் காணப்பட்டது.
இவ்வாறானதொரு காலத்தில் வடகிழக்கில் பல தமிழ் இயக்கங்களின் தோற்றம் வெகுவாகக் காணப்பட்டதுடன் அந்தந்த இயக்கங்கள் தத்தமது இயக்கங்களை வழுப்படுத்துத்தும் வகையிலும் அரசுக்கு எதிராக போராடுவதற்கும் ஆண்கள், பெண்கள் என இளைஞர்கள் பலர் பலவந்தமாக ஆயுதப் போராட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவ்வாறு தமிழ் இளைஞர்களுடன் கணிசமானளவு முஸ்லிம் இளைஞர்களும் இழுத்துச் செல்லப்பட்டனர் இவர்களுடன் விரல்லிட்டு எண்ணக்கூடிய சிலர் அந்த ஆயுதப் போராட்டத்தில் ஆர்வங்கொண்டு சேர்ந்ததையும் நாம் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இயக்கங்களாக தமழீழ விடுதலைப்புலிகள் (எல்.ரி.ரி) இயக்கம், டெலோ, புலொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் போன்ற பெயர்களுடன் இவை அக்காலத்தில் உருவாக்கப்பட்டு அரச படைகளுக்கு எதிராக போராடியதுடன் தமக்கு எதிரான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களைக்கூட கொன்று குவித்ததுடன் தமது தேவைகளுக்கு உதவாத பல ஆயிரக்கணக்கான தனவந்தர்களையும், கல்விமான்களையும், சமயத் தலைவர்களையும்கூட விட்டு வைக்காது கடத்தியும் பலிவாங்கிய வரலாறுகளை என்றும் மறக்கவோ அல்லது மறுக்கவோ முடியாது. அந்தளவிற்கு பாரிய துன்பியல் சம்பவங்கள் நடந்தேறின என்றே கூறலாம்.
குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் விரும்பியோ, விரும்பாமலோ பல நூற்றுக் கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் அந்த இயக்கத்தின் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினர். இதன் காரணமாக இந்த இயக்கங்களின் ஆரம்ப காலங்களில் முஸ்லிம் சமுகமும் விரும்பியோ அல்லது விரும்பாமலோ அவர்களுக்கு சார்பாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தமும் இருந்து வந்தது. காரணம் வடக்கில் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் காணப்பட்டதால் அந்த மக்களில் பெருமளவானவர்கள் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவானவர்களாக அந்த இயக்கத்தின் வள்ர்ச்சிக்கும், தேவைக்கும் ஒத்துழைப்பு வழங்கினர். இருந்தாலும் முஸ்லிம் சமுகம் இந்த நாட்டைப் பிரித்துக் கேட்கும் எந்தவித செயற்பாடுகளிலும் ஈடுபட்ட அல்லது அதற்காக முன்னின்ற வரலாறுகளோ இல்லை என்றே கூறலாம்.
இவ்வாறு தமிழ் இயக்கங்களின் யுத்த ஆதிக்கம் வழுப்பெற்று அவர்கள் வடகிழக்கை தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு வடகிழக்கை ஒரு யுத்த வலயமாக மாற்றி எந்த நேரமும் குண்டுத் தாக்குதல்களுக்கும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கும் மலிவில்லாத காலமாகவே அக்காலம் உருவாக்கப்பட்டதுடன்; மக்கள் வெளியில் இறங்கினால் திரும்பி உயிரோடு வருவோமா? அல்லது வீட்டில் இருந்தாலும் உயிரோடு இருப்போமா? என்ற பாரிய அச்ச நிலையிலே வாழ்ந்து வந்தனர்.
இவ்வாறானதொரு ஆபத்தான காலகட்டத்தில் இருக்கும் போதுதான் விடுதலைப் புலிகளின் ஒருதலைப் பட்சமான செயற்பாட்டின் காரணமாக 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் (இதே போன்தொரு காலத்தில்) வடமாகாணத்தில் இருந்தும் கிழக்கு மாகாணத்தில் ஒருசில பிரதேசங்களில் இருந்தும் எந்த விதமான முன்னறிவித்தல்களும், கால அவகாசங்களும் இன்றி முஸ்லிம்கள் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டனர். இவ்வாறான நிலையில் விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் எஞ்சியிருந்த முஸ்லிம் இளைஞர்களும் அவர்களது இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டு வடமாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் இருந்து அவர்களும் வெளியேற்றப்பட்டனர்.
எந்த விதமான குற்றமும் இழைக்காத இந்த முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் உடுத்திய ஆடைகளுடன் எந்த விதமான பொருட்களையும் எடுத்துச் செல்வதற்குக்கூட அனுமதிக்காது வெளியேற்றியமை முழு முஸ்லிம் சமுகமும் வரலாற்றில் என்றும் அனுபவித்திராத பாரிய இழப்பாகவும், இன்று வரை அகதிகள் என்ற அந்த யுத்த வடுக்களுடன் தமது துன்பியலை அனுபவித்து வருவதுடன் இந்தச் சமுகத்தின் அவல நிலைமைகளையும், துன்பங்களையும் கண்டு கொள்ளாத சர்வதேசமும், இலங்கை அரசும் அந்த மக்களுக்கு துரோகமிழைத்த சம்பவங்களாகவே பாதிக்கப்பட்ட அந்தச் சமுகம் இன்று வரை கண்டு கொண்டுள்ளது.
இவ்வாறு 1990ஆம் ஆண்டு வடமாகாண முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் முற்றாக வெளியேற்றிய காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சியாகும். அந்தக் காலத்தில் மிகவும் பலமானதொரு அரசாங்கமாக பர்ணமித்த ஐக்கிய தேசியக் கட்சியின் காலத்தில் வடமாகாணத்திலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களை உரிய முறையில் பாதுகாக்கும் விடயத்தில் அந்த அரசு அவ்வளவு அக்கறை காட்ட வில்லை. குறிப்பாக இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல முஸ்லிம் பிரதேசங்களை அவர்கள் பாதுகாத்திருக்கலாம், அந்தப்பகுதியில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றாமல் தடுத்திருக்கலாம் ஆனால் அப்போதைய பாதுகாப்புத் தரப்பினரும், அரசாங்கமும் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் விடயத்தில் அவர்கள் வெளியேறட்டும் என்ற மனோ நிலையிலேயே இருந்தனரே தவிர எதுவித தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்க வில்லை என்று அந்த மக்கள் இன்று வரை குற்றஞ்சுமத்திய வன்னமே இருக்கின்றனர்.
இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்களின் விலை மதிக்க முடியாதளவு சொத்துக்களும், உடமைகளும் விடுதலைப் புலிகளால் சூறையாடப்பட்டதுடன் அவர்களின் ஆயிரக்கணக்கான பள்ளிவாசல்கள், பாடசாலைகள், சமுக நிறுவனங்கள், வர்த்க ஸ்தாபனங்கள், தொழிற்சாலைகள், வீடுகள் அனைத்துமே இன்று உடைக்கப்பட நிலையில் அடையாளங்கான முடியாதளவு சேதத்திற்குள்ளாகி இருப்பதுடன் அவற்றை மீளப் பெற்றுக் கொள்ள முடியாதளவு வடமாகாண முஸ்லிம்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றனர்.
குறிப்பாக இலட்சக் கணக்கான விவசாய நிலங்களை இழந்துள்ளதுடன் அவற்றிலிருந்து பெறப்படும் வருமானங்கள் இல்லாது பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் படைத்தரப்பினராலும், தனிப்பட்டவர்களினாலும் அபகரிக்கப்பட்டு அவற்றை தற்போதைய நிலையில் பெற்றுக் கொள்ள முடியாதளவு இருப்பதுடன் அடையாளங் காணப்பட்ட இடங்களைக்கூட அபகரித்தவர்கள் வழங்காது சண்டித்தனங்கள் காட்டும் ஒரு கவலைக்குரிய விடயமாகவும் இருக்கின்றது.
யுத்த வெற்றி கிட்டி தற்போது 8வருடங்கள் கடந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியுடனான இந்த தேசிய நல்லிணக்க அரசாங்கம் ஆட்சிக்கு வந்து தற்போது 2வருடங்களும் 9 மாதங்களுமாகின்ற போதிலும் வடக்கிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்கள் விடயத்தில் வாய்வீச்சுச் செயற்பாடுகள் மட்டுமே இருக்கின்றதே தவிர பயனுள்ள எந்தவிதச் செயற்பாடுகளையும் வடமாகாண முஸ்லிம்கள் கண்டு கொள்ள வில்லை.
விரும்பியோ அல்லது விரும்பாமலோ வடக்கு முஸ்லிம்கள் மீள் குடியேற்றத்திற்குச் சென்றால் அங்கு அவர்கள் தமது சொந்த இருப்பிடங்களைக்கூட பெற்றுக் கொள்ள முடியாதளவு பல்வேறுபட்ட பாரிய பிரச்சினைகளுக்கும், இடர்களுக்கும் முகங்கொடுக்க வேண்டியுள்ளதாக அங்கு சென்று மீண்டும் அகதி வாழ்விற்கு திரும்பியுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக வடக்கில் அரவணைக்கக்கூடிய வடமாகாண சபையும் அதன் அரசியல் வாதிகளும் இவர்களைச் சார்ந்த அரச அலுவலகங்களில் உள்ள ஒருசில அரச அதிகாரிகளும் முஸ்லிம்களின் மீள் குடியேற்ற விடயத்தில் முற்றிலும் தடையாகவே இருக்கின்றனர். சொந்த இடத்தைக்கூட அடாத்தாக பிடிக்கின்றார்கள், அரச காணிகளைப் பிடிக்கின்றார்கள் என்ற கோணத்தில் கதைகளைக்கட்டி மக்கள் மத்தியில் பொய்ப்பிரச்சாரங்களையும் மேற்கொண்டு தமிழ், முஸ்லிம் முறுகல் நிலைமைகளைக்கூட ஏற்படுத்தி வருகின்றமையெல்லாம் அந்த பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஒருவகையாக சகப்புணர்வுகளையும், முரண்பாட்டு நிலைமைகளையும் ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக வடமாகாண சபை என்பது அந்த மாகாணத்தில் உள்ள சகல மக்களுக்கும் பொறுப்புக்கூற வேண்டிய ஒரு சபையாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பால் உருவாக்கப்பட்ட இந்த வடமாகாண சபை ஆட்சிக்கு வந்து இன்னும் சில மாதங்களில் நிறைவடைய இருக்கின்ற நிலையில் வடமாகாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட முஸ்லிம் மக்களுக்கு எதனையுமே கண்டு கொள்ளுமளவிற்கு வடமாகாண சபை செய்ய வில்லை. அந்த மக்களிடத்தில் கேட்டால் முஸ்லிம் மக்களுக்கு எத்தனை சதவீதம் செய்துள்ளார்கள் என்பதனைப் பட்டியலிட்டுக் காட்டும்படி கேட்குமாறு தெரிவிக்கின்றனர். அந்தளவிற்கு முஸ்லிம் சமுகம் கோபமடையும் வகையில் வடமாகாண சபையும் பாரபட்சம் காட்டி முஸ்லிம் மக்களை ஓரங்கட்டிய வருகின்றமை மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.
இதேபோல் சர்வதேச சமுகமும் முஸ்லிம்கள் விடயத்தில் அக்கறை செலுத்தவும் இல்லை இதுவும் ஒரு பாரதூரமான விடயமாகவே இருப்பதுடன் அவர்கள் விடயத்தில் அரசாங்கமாவது உரிய முறையில் பங்களிப்புக்களைச் செய்ய வேண்டும் என்ற காட்டமான கருத்துக்களைக் கூட சர்வதேசம் தெரிவிக்க வில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் பிரதி நிதிகள், ஏனைய சர்வதேச நாடுகளின் அரச பிரதிநிதிகள் எனப் பலர் இலங்கைக்கு அடிக்கடி வந்து வடக்கிற்குச் சென்று வருவார்கள் ஆனால் வடக்க முஸ்லிம் மக்களை சந்திக்கவோ அல்லது அவர்களின் அவலங்கைக் கேட்டறியவோ முனைவதில்லை. அதற்கு வடக்கு அரசியல் வாதிகள் சந்தர்ப்பங்களும் வழங்குவதுமில்லை.
இவ்வாறு வடமாகாண பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் சுமார் 27 வருடங்களாக தமது பூர்வீகங்களை இழந்து மாற்றான் மண்ணில் அகதி என்ற பட்டத்துடன் அடிப்படை வசதிகள் இன்றி 5 தொடக்கம் 10 பேர்ச் காணிக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்களுடன் தமது வாழ்வியலை கொண்டு செல்லும் ஒரு கவலைக்கிடமான நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். தமது பல ஆயிரக் கணக்கான சொந்த பூமியை இழந்துள்ள இந்த மக்களின் பூர்வீகத்தை பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பும், கடப்பாடும் இருக்கின்ற நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான இங்குள்ள ஒருசில இனவாத சக்திகளின் பொய்யான பிரச்சாரங்களுக்கு துணைபோய் இந்த மக்களின் மீள் குடியேற்றத்தில் அரசு பாராமுகமாக இருப்பது சமாதான விரும்பிகள் விடயத்தில் விஷனத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
1990ஆம் ஆண்டு துரத்தப்பட்ட மக்களை இன்முகத்துடன் வரவேற்ற ஒரு முக்கிய மாவட்டமாக நாம் புத்தளம் மாவட்டத்தைக் குறிப்பிடலாம். வடமாகாண மக்கள் எங்குபோவதென்று தட்டுத் தடுமாறிய காடுகளுக்குள்ளாகவும், கடல் வழியாகவும் தப்பி வந்த போது இந்த மக்களை வரவேற்று தங்கவைத்து பெரும் பங்காற்றிய விடயம் வடமாகாணத்தில் இருந்து விரட்டப்பட்ட எந்தவொரு பிரஜையாலும் இலகுவில் மறந்துவிட முடியாது. அந்தளவிற்கு அந்த மக்களின் இருப்புக்கு உத்தரவாதமளித்து அவர்கைள பாதுகாத்தனர். இதேபோன்று அனுராதபுரம், குறுநாகல், கொழும்பு, பாணந்துறை, நீர்கொழும்பு, போன்ற பகுதி மக்களும் வடமாகாண முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களாகும்.
இவ்வாறு அடைக்கலம் பெற்ற இடத்தில்கூட மன்னார் மாவட்டத்தின் மூர்வீதி மக்கள் புத்தளம் நகருக்கு அண்மையில் உள்ள நிந்தணி எனும் கிராமத்தில் தமது சொந்தப் பணத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட காணித்துண்டுகள் பெற்று வருமாணக் குறைவு காரணமாக அவ்விடத்தில் வீடுகட்ட முடியாது காணி சும்மா இருந்த வேளையில் அந்தக் காணிகளைக்கூட ஒருசில காடையர்கள் சண்டித்தனமாக கையகப்படுத்தியுள்ள துர்ப்பாக்கிய நிலைமைகளும் காணப்படுகின்றன.
இவ்வாறு நாட்டின் பலபாகங்களிலும் சின்னாபின்னமாக சென்றுள்ள மக்களில் கணிசமான ஒருசிறு தொகையினரைத் தவிர பெருமளவான மக்கள் இன்றுவரை அரசாங்கத்தால் கண்டு கொள்ளப்படாத மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் இந்த தொடர் அகதி வாழ்விற்கு முஸ்லிம் சமுகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருசில முஸ்லிம் அரசியல் தலைமைகளும்கூட பொறுப்பாளிகள் என அந்த மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.
1990ஆம் ஆண்டில் வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களின் நலன்களில் அதீத அக்கறை செலுத்தியவர்களாக மறைந்த முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான எம்.எச்.எம். அஷ்ரப், மறைந்த முன்னாள் அமைச்சர்களான ஏ.எச்.எம்.அஸ்வர், நூறுதீன் மசூர் உள்ளிட்டவர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் அக்காலத்தில் அரசியல் பேசாது பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தியமையும் அவர்கள் விடயத்தில் தொடராக கவனஞ் செலுத்தி வந்துள்ளமையையும் நாம் இங்கு சுட்டிக்காட்டலாம்.
தற்போதை இலங்கையின் பாராளுமன்றத்தில் சுமார் 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் அவர்களில் பலர் கையாலாகாத தன்மை படைத்தவர்களாகவே இருக்கின்றனர் என புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர். காரணம் இந்த 21 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து நியாயமான முறையில் பாதிக்கப்பட்ட வடமாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்ற விடயத்தில் அவர்களின் நலன் கருதி குரல் கொடுத்தால் நிச்சயமாக முஸ்லிம் சமுகம் தற்போது அனுபவித்து வரும் துன்பங்கள், கஷ்டங்களில் இருந்து விடுபடுவதற்கு வழிவகுக்கும் எனலாம்.
ஆனால் இந்த 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் ஒற்றுமையில்லாத் தன்மைகளின் ஒரு அங்கமாகவும் இந்த வடமாகாண முஸ்லிம்களின் அவல நிலைக்கு காரணம் என்றும் கூறலாம். சரியான நேரத்தில் சரியான முறையில் காய்களை நகர்த்தினால் எதனையும் சாதிக்காமல் இருக்க முடியாது. தமிழ் சமுகத்தினைப் பொருத்தவரை அவர்களின் அவல நிலை இன்று சர்வதேசம் வரை வேறூன்றி அந்த மக்களின் நலன்களுக்காக அடிக்கடி குரல்கள் எழுப்பப்படுவதுடன் சர்வதேசத்திற்கும் பலமான அழுத்தங்களையும் அவர்களின் சமுக ஆர்வளர்களும், செயற்பாட்டாளர்களும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் எனலாம். ஆனால் ஒருசில அரசியல் தலைமைகளைத் தவிர ஏனையவர்கள் வடமாகாண முஸ்லிம்களின் விடயங்களில் அக்கறை செலுத்துவதை கண்டு கொள்ள முடியாதுள்ளது. ஆனால் ஒற்றுமை இல்லாத நிலைமைகள் முஸ்லிம் சமுகத்திற்குள் காணப்படாதிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகவே நோக்க வேண்டியுள்ளது.
முஸ்லிம் சமுகத்தின் பிரச்சினைகள் சரியான முறையில் வெளிக் கொண்டு வரப்படாத நிலைமைகள்தான் இந்தச் சமுகத்தின் பின்னடைவுக்கும், அவர்களின் அகதி வாழ்விற்கு வித்திட்டுள்ளது எனலாம். ஒரு சமுகத்தின் அவலங்கள் நீண்டகாலமாக செல்லும் இந்த விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இனியும் ஒன்றுபட்டு சிந்திக்கா விட்டால் அதற்கான முழுப்பொறுப்புக்களையும் முஸ்லிம் தலைமைகளே பொறுப்பேற்க வேண்டும் என பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர். காரணம் தற்போதைய அரசிலும் பல முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இருப்பதால் அவர்கள் முஸ்லிம் சமுகத்தின் அவலத்திற்கு பொறுப்பானவர்கள் என்பதே ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கருத்துக்களாகும்.
இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் விடுதலைப் புலிகளால் விரட்டப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் உள்நாட்டிலேயே சுமார் 27 வருடங்கள் அகதிகளாக வாழ்வதும் அவர்கள் மீள்குடியேற்றப்படாத நிலைமைகளும் இந்த நாட்டின் ஜனநாயக ஆட்சியில் சந்தேகங் கொள்ளச் செய்துள்ளது. காரணம் யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் 8 வருடங்கள் கடந்த நிலையிலும் இந்த மக்களின் நலன்கள் விடயத்தில் கண்டு கொள்ளாது அரசியல் விடயங்கள் உள்ளிட்ட ஏனைய விடயங்களில் ஆர்வங் கொண்டுள்ளமை எல்லாம் இந்த மக்களுக்கு அவர்கள் செய்யும் துரோகமாகவே நோக்க வேண்டியுள்ளது.
எனவே துரத்தப்பட்ட இந்த மக்களின் 27 வருடங்களை தொடர விட்டு மீண்டும், மீண்டும் துரோகத்தனங்களை செய்யாது வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்த்து அந்த மக்களின் பூரணமான மீள்குடியேற்றத்தை சரியான முறையில் இனங்கண்டு செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் இலங்கை அரசுக்கும், அதன் ஆட்சியாளர்களுக்கும் இருக்கின்றது என்பதனை அவர்கள் மறந்துவிடாது புரையோடியுள்ள இந்த மக்களின் பிரச்சினைகளை உடநடியாக தீர்க்க வேண்டும் என்பதே அவலப்படும் முஸ்லிம்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.