காரைதீவு நிருபர் சகா-
நேற்று நள்ளிரவு வெளியாகிய (24.10.2017) கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் போட்டி பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதன்படி 2868பேர் சித்திபெற்றுள்ளனர். இந் நிலையில் சித்தியடைந்தவர்களில் 50வீதமானோரே தெரிவாக வாய்ப்புண்டு என்று கூறப்படுகின்றது..நிரப்ப வேண்டிய 1440 வெற்றிடங்களுக்கு 2868பேர் தெரிவாகியிருந்தால் 1428பேரின் நிலை தொடர்ந்து வேலையில்லாப்பட்டதாரிகளின் நிலைதானா? என்ற வினா எழுப்பப்படுகின்றது.
மொத்தமாக 3009 பேர் விண்ணப்பித்த அம்பாறை மாவட்டத்தில் 1296 பட்டதாரிகள் இரண்டு பாடங்களிலும் நாற்பது புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளார்கள்.
மொத்தமாக 1521 பேர் விண்ணப்பித்த திருகோணமலை மாவட்டத்தில் 576 பட்டதாரிகள் இரண்டு பாடங்களிலும் நாற்பது புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளார்கள்.
மொத்தமாக 2350 பேர் விண்ணப்பித்த மட்டக்களப்பு மாவட்டத்தில் 996 பட்டதாரிகள் இரண்டு பாடங்களிலும் நாற்பது புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளார்கள்.
ஆகமொத்தம் 2868 பேர் மூன்று மாவட்டங்களிலும் இரண்டு பாடங்களிலும் நாற்பது புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளார்கள்.
முள்ளிப்பொத்தானையை சேர்ந்த ஜ.ரசீத்கான் மூன்று மாவட்டங்களிலும் உளச்சார்பு இல் அதிக புள்ளிகளை பெற்றுள்ளார்.
அதேபோல அக்கரைப்பற்றை சேர்ந்த கே.இராஜேஸ்வரி பொதுஅறிவுப்பரீட்சையில்மூன்று மாவட்டங்களிலும் அதிக புள்ளிகளை பெற்றுள்ளார்.
அதேபோல ஜ.ரசீத்கான் திருகோணமலை மாவட்டத்தில் அதிக மொத்தப் புள்ளிகளையும் தன்னாமுனையைச் சேர்ந்த எம்.மனோஜினி மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மொத்தப் புள்ளிகளையும்இ அதேபோல அக்கரைப்பற்றை சேர்ந்த கே.இராஜேஸ்வரி அம்பாறை மாவட்டத்தில் அதிகூடிய மொத்தப் புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.
31.07.2017 ஆம் திகதிய தினகரன் பத்திரிகையின் விளம்பரம் மற்றும் கிழக்கு மாகாண சபையின் இணையத்தள விபரங்கள் எதிலும் குறைந்தபட்ச புள்ளிகள் எத்தனை என்பது கூறப்படவில்லை ஆயினும் பொதுவான ஆசிரியர் போட்டிப் பரீட்சைகளுக்கான சுற்றறிக்கையின் படி இரண்டு பாடங்களிலும் குறைந்தது நாற்பது புள்ளிகளே வெட்டுப்புள்ளிகளாகும்.
ஆயினும் இதுபற்றி தெளிவான அறிவுறுத்தல்கள் இல்லை. அந்த முடிவை மாகாண சபை எடுக்கும்.
அதுபோல பரீட்சையில் இரண்டு பாடங்களிலும் நாற்பதுக்கு மேல் எடுத்த பட்டதாரிகள் எல்லோருக்கும் ஆசிரியர் நியமனம் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் இல்லை.
நிரப்ப வேண்டிய 1440 வெற்றிடங்களுக்கு (பாடங்கள் வெவ்வேறு ஆயினும்) 2868 பேர் மூன்று மாவட்டங்களிலும் நாற்பதுக்கு மேல் புள்ளிகள் எடுத்ததால் பலர் நேர்முகப்பரீட்சையில் (சிலவேளை மேலதிக 1428 பேரும்) வாய்ப்புக்களை இழக்க நேரிடலாம். இது வெட்டுப்புள்ளிகளின் இறுதி முடிவில் தங்கியுள்ளது.