இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் இன்று காலை 9மணியிலிருந்து பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாடுகளுக்காக 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி 225 உறுப்பினர்களையும் உள்ளடக்கிய பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டது.
அதன் பின்னர் பிரதமர் தலைமையிலான 21 உறுப்பினர்கள் உள்ளடங்கிய வழிநடத்தல்குழு உருவாக்கப்பட்டது, தற்போதைய அரசியல் யாப்பின் முதலாவது மற்றும் இரண்டாவது அத்தியாயம் தொடர்பில் கலந்துரையாடல், நாட்டின் தன்மை, இறையாண்மை, மதம், அரசாங்கத்தின் கட்டமைப்பு, தேர்தல் சீர்திருத்தங்கள், அதிகாரப் பகிர்வுக்கான கோட்பாடுகள், காணி உள்ளிட்ட விடயங்களை இந்த குழு கையாண்டது.
அதேநேரம் அதற்கு மேலதிகமாக அடிப்படை உரிமைகள் நீதித்துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிதி, பொதுச் சேவை , மத்திய அரசாங்கத்துக்கும் - மாகாண சபைகளுக்கும் இடையிலான உறவு ஆகிய விடயங்களை கையாள்வதற்காக உபகுழுக்களும் நியமிக்கப்பட்டிருந்தன. அந்த உபகுழுக்கள் தமது அறிக்கைகளை வழிநடத்தல் குழவிடத்தில் கையளித்தன.
அவ்வறிக்கைகளுடன், பிரதமரால் கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட பிறிதொரு உபகுழு அறிக்கை ஆகியவற்றையும் பொது மக்கள் கருத்தறியும் குழவின் அறிக்கைகள், பரிந்துரைகளையும் பெற்றுக்கொண்ட வழிநடத்தல் குழு நீண்ட ஆராய்வுகளுக்கு மத்தியில் பொதுவான இணக்கப்பாட்டை எட்டிய விடயங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தனிப்பட்ட நிலைப்பாடகள் ஆகியவற்றை தௌிவாக குறிப்பிடும் வகையில் கடந்த செப்ரெம்பர் 21ஆம் திகதி அரசியலமைப்புச் சபையில் இடைக்கால அறிக்கையை முன்வைத்திருந்தது.
குறித்த இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம் இன்று திங்கட்கிழமை காலை 10.30இற்கு ஆரம்பமாகவுள்ளது. இவ்விவாதம் மாலை 6.30 வரையில் நடைபெறவுள்ளது. இதேபோன்று நாளை செவ்வாய்கிழமை, மற்றும் நாளை மறுதினம் புதன் கிழமையும் விவாதங்கள் இடம்பெறவுள்ளன. ஏனினும் இந்த விவாதத்தின் இறுதியில் இடைக்கால அறிக்கை மீதான வாக்கெடுப்பு நடைபெறமாட்டாது.
ஆனால் விவாதத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களினது நிலைப்பாடுகள், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும கட்சிகளின் நிலைப்பாடுகள் ஆகிய விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படவுள்ளன.
அதனையடுத்து அவ்விடயங்கள் தொடர்பாகன அரசியலமைப்பு பேரவையின் தலைவர் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் கவனத்தில் கொள்ளப்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் கலந்துரையாடப்பட்டு இணக்கப்பாடு காணப்படும் விடயங்கள், இணக்கப்பாடு காணப்படாத விடயங்கள் குறித்த கலந்துரையாடல் ஆரம்பிக்கப்படும். அச்சமயத்தில் பொதுமக்கள், சமயத்தலைவர்கள், புத்திஜீவிகள், சிவில் சமூகத்தினர் உள்ளிட்ட பல்வெறு தரப்பினரினதும் கருத்துக்களும் கேட்டறியப்படவுள்ளது.
அதன்பின்னரே புதிய அரசியலமைப்புக்கான வரைவு தயாரிப்பு குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வழிநடத்தல் குழு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகி்ன்றது.
அவசர கூட்டங்களும் தௌிவு படுத்தல்களும் இதேவேளை இடைக்கால அறிக்கை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அலரிமாளிகையில் கலந்துரையாடியதோடு கடந்த வாரத்தில் இரண்டு தடவைகள் ஐ.தே.க உறுப்பினர்களுக்கான இடைக்கால அறிக்கை குறித்த கருத்தங்களும் இடம்பெற்றிருந்தன.
அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நேற்றும் நேற்று முன்தினமும் இருநாள் கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்திருந்ததோடு உறுப்பினர்கள் விவாதத்தில்கலந்து கொண்டு நடந்து கொள்ளவேண்டிய முறைமை தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
கூட்டு எதிர்க்கட்சியும் நேற்று இரவு வழமையான தனது வாராந்த சந்திப்பினை மேற்கொண்டிருந்த போது இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம் குறித்தே அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டதோடு மட்டுமல்லாது இடைக்கால அறிக்கையில் சமஷ்டிக்கான சூட்சும விடயங்கள் தொடர்பாகவும் தௌிவு படுத்தப்பட்டதாக தெரியவருகின்றது.
தொடரும் எதிர்ப்பு
இதேவேளை தற்போதைய இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்டின் தன்மை, அதிகாரங்கள் பகிரப்படுதல், அரசியலமைப்பு நீதிமன்றம், பாராளுமன்றத்திற்கான அதிகாரங்களை வலுப்படுத்தல், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து முன்னா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உட்பட அவரது அணியில் உள்ள 52உறுப்பினர்களும் கடுமையான எதிர்ப்புக்களை வௌியிட்டு வருகின்றனர்.
குறிப்பாக தென்னிலங்கை உள்ளிட்ட நாட்டில் பெரும்பான்மை இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் பல்வேறு பிரசாரங்களையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.குறிப்பாக இடைக்கால அறிக்கை உட்பட புதிய அரசியலமைப்பொன்று ஏற்படுத்தப்பட்டால் நாடு துண்டாடப்படும், சமஷ்டி வழங்கப்படும் என்றும் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் புதிய அரசியலமைப்பு செயற்பாடுகளை கண்டிக்கும் வகையில் இன்றையதினமும் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் கண்டன ஆாப்பாட்டமொன்றை காலை 9மணி முதல் மேற்கொள்ளவுள்ளனர். இதில் கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலதரப்பட்ட தரப்பினரும் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.
தே.சு.மு. பங்கேற்காது
ஏற்கனவே புதிய அரசியலமைப்பு செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்த தேசிய சுதந்திர முன்னணி அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தது. ஆதன் பிரகாரம் அக்கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச உட்பட ஐந்து உறுப்பினர்கள் அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலகும் அறிவிப்பை எழுத்து மூலமாக சபாநாயகர் கரு ஜயசூரியவிடத்தில் கையளித்திருந்தனர். இந்நிலையில் அந்த ஐந்து உறுப்பினர்களும் இன்றைய விவாதத்திலும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முரண்பாடான கருத்துக்கள் எதிரொலிக்கும்
வௌியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையின் பிரகாரம் அரசியல் கட்சிகளுக்கிடையில் பல்வேறு முரண்பாடான கருத்துக்கள் காணப்படுகின்றன. குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கும், மற்றும் நாட்டின் தன்மை குறித்து ஏனைய கட்சிகளிலிருந்து மாறுபட்ட நிலைமையில் உள்ளது.
அதேநேரம் மற்றொரு பெரும்பான்மை தேசிய கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தனது நிலைப்பாட்டினை பகிரங்கப்படுத்தாத நிலையில் இருந்தாலும் பிரதமருக்கான அதிகாரத்தினை வலுப்படுத்தி பாராளுமன்ற ஆட்சிமுறைமையை மையப்படுத்தியும் நாட்டின் தன்மை தற்போதைய இடைக்கால அறிக்கையில் முன்மொழியப்பட்டவாறே இருக்கும் என்றும் வலியுறுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது கட்சியின் நிலைப்பாட்டினை இடைக்கால அறிக்கையில் வௌிப்படுத்தியிருந்தாலும் தற்போதைய இடைக்கால அறிக்கையில் உள்ளட விடயங்கள் தொடர்பில் அனைத்து தரப்பினரும் பொது இணக்கப்பாட்டிற்கு வரும் பட்சத்தில் தாம் அதனை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. ஏனினும் இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்துள்ள கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப். இடைக்கால அறிக்கை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை ஜே.வி.பி சமஉரிமையை மையப்படுத்திய கருத்துக்களை முன்வைக்கவுள்ளதோடு தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கையான சமஷ்டி, வடகிழக்கு இணைப்பை நிச்சயமாக நிராகரிக்கும் என்றும் அதிகாரங்கள் குவிந்திருப்பதற்கு எதிராக குரல்கொடுக்கும் எனவும் கூறபப்டுகின்றது.
கூட்டாவும்,தனியாவும் முன்மொழிவுகளைச் செய்துள்ள தமிழ்முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகியனவும் தமது நிலைப்பாடுகளை இறுக்கமாக வௌிப்படுத்தவுள்ளதாக தெரியவருகின்றது.
இவ்வாறு பலதரப்பட்ட கருத்துமொதல்கள் நடைபெறும் களமாக பாரர்ளுமன்ற தளம் இன்றிலிருந்து அடுத்து வரும் இருதினங்களும் இருக்கப்போகின்றது. இதில் கூட்டு விவாவத்தினை சுமகமாக முன்னெடுப்பதற்கு இடமளிப்பார்களா என்பதும் மிகப்பெரும் கேள்வியாகவுள்ளது.(viirakeesari)