கலப்புத் தேர்தல் முறையும் ஏமாற்றப்பட்ட முஸ்லிம்களும் - பாகம் 4



இத்தேர்தலில் உள்ள உண்மையான பாதிப்பு என்ன?
------------------------------------------------

தற்போதைய விகிதாசாரத் தேர்தல் முறைக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேர்தல் முறைக்கும் உள்ள ஒற்றுமையும் வேற்றுமையும்
----------------------------------------------
ஒற்றுமை: இரண்டும் நூறு விகிதம் விகிதாசாரம்தான் (100% PR)
வாக்குகளைக் கணிப்பிடுதல், ஒவ்வொரு கட்சிக்கும் உரித்தான ஆசனங்களைக் கணிப்பிடுதல் ஒரே விதம்.

வேற்றுமை: அதில் விருப்பத்தெரிவு வாக்கு, இதில் தொகுதி

அம்பாறை மாவட்டத்தை உதாரணமாக எடுப்போம்

பழைய பாராளுமன்றத் தொகுதிகள் 4, அதில் ஒன்று இரட்டை அங்கத்தவர் தொகுதி

புதிய முறையின்கீழ் 7 தொகுதிகள். பெரும்பாலும் அம்பாறைத் தொகுதி மூன்றாகப் பிரிக்கப்படலாம்.

இப்பொழுது நாம் கட்சியின்/ சு . குழுவின் சின்னத்திற்கு புள்ளடி இடுகின்றோம். புதிய தேர்தலிலும் அதுதான்.

அதன்பின் தற்போது:

ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு கட்சி/ சு. குழு பெற்ற வாக்குகள் மற்றும் மொத்த வாக்குகள் கணிப்பிடப்படும். புதிய தேர்தலிலும் அதுதான்.

அதன்பின்:

மாட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்தவாக்குகள் ஒவ்வொரு தொகுதியின் வாக்குகளைக் கூட்டுவதன் மூலம் கணிப்பின்பிடப்படும். புதிய தேர்தலிலும் அதுதான்.
அதேபோன்று ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு தொகுதியிலும் பெற்ற வாக்குகளைக் கூட்டி மாவட்டத்தில் அக்கட்சிகள் பெற்ற வாக்குகள் கணிப்பிடப்படும். புதிய முறையும் அதுதான்.

அதன்பின்:

மாவட்டத்தில் அளிக்கப்பட்ட செல்லுபடியான மொத்த வாக்குகள் அம்மாவட்டத்திற்குரிய அங்கத்தவர்களின் எண்ணிக்கையால் பிரிக்கப்படும். உதாரணமாக, அம்பாறையில் 14 ஆல் பிரிக்கப்படும். புதிய முறையும் அதுதான்.

அதன்பின்: ஒவ்வொரு கட்சியும் மாவட்டத்தில் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில் அக்கட்சிகளுக்கு எத்தனை ஆசனங்கள் உரித்து என்பது கணிப்பிடப்படும். புதிய முறையும் அதுதான்.

வேற்றுமை:
தற்போதைய முறை: உதாரணமாக ஒரு கட்சிக்கு 5 ஆசனங்கள் உரித்து என்றால் அந்தக்கட்சியின் பட்டியலில் அதிகூடிய விருப்பத்தெரிவு வாக்குகளைப் பெற்ற முதல் 5 பேரும் வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
புதிய முறை: அந்த 5 பேரில் அக்கட்சி உதாரணமாக, மூன்று தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தால் அத்தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளரகள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.
ஏனைய இரு இடங்களுக்கும் கட்சியின் செயலாளர் தோல்வியடைந்த வேட்பாளர்களையோ அல்லது பட்டியலிலுள்ளவர்களின் பெயர்களையோ சிபார்சு செய்வார்.

எனவே, பெறுகின்ற அங்கர்தவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை எந்த மாற்றமுமில்லை. தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்கள் யார் எனும் விடயத்தில்,
தற்போதையமுறை: விருப்பத்தெரிவு வாக்குகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்படுவார்கள்.
புதிய முறை: விருப்பத்தெரிவு வாக்குகள் இல்லை. தொகுதியில் இருந்தும் எஞ்சியது தற்போதைய தேசியப்பட்டியல்போன்று பட்டியலில் இருந்தோ அல்லது தோல்வியடைந்தவர்களிலிருந்தோ தெரிவுசெய்யப் படுவார்கள்.

60;40, 50:50 இந்த மாற்றங்கள் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துகின்றதா?
---------------------------------------------


அம்பாறை மாவட்டத்தில் அங்கத்தவர் 14, தொகுதிகள் 7, இதில் பெரும்பாலும் மூன்று முஸ்லிம் தொகுதிகள். தொகுதி எண்ணிக்கை கூடினாலென்ன, குறைந்தாலென்ன, அந்தந்த கட்சிக்காரர்கள் அந்தந்தக் கட்சிக்குத்தான் வாக்களிக்கப் போகிறார்கள். ( வேட்பாளுக்காக வாக்களிப்பவர்கள் ஒரு சிறிய எண்ணிக்கை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் போகலாம்). பெறும் அங்கத்தவர் எண்ணிக்கை தற்போதைய முறைப்படி மாவட்டத்தில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதால் இந்த 60:40 ஓ அல்லது 50:50 ஓ எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.

அப்படியானால் என்ன பாதிப்பு
-----------------------------
பாதிப்பு கிழக்கிற்கு வெளியிலாகும்.

உதாரணத்திற்கு குருநாகல் மாவட்டத்தை எடுங்கள். அங்கு சுமார் ஒரு லட்சம் முஸ்லிம் வாக்குகள் இருக்கின்றன.

அங்கு தெரிவுசெய்யப்படுகின்ற அங்கத்தவர்களின் எண்ணிக்கை 20 என வைத்துக் கொள்வோம். எனவே தொகுதி 10 ஆகும். ஆனால் ஒரு தொகுதிகூட முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதி உருவாக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாகும்.
அந்தளவு முஸ்லிம்கள் சிதறிவாழ்கிறார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் 10 அல்லது 15 அல்லது 20 விகிதம் முஸ்லிம்கள் வாழலாம். 75 அல்லது 80 விகிதம் சிங்களவர்கள்தான் சகல தொகுதிகளிலும் இருப்பார்கள்.

எனவே, ஐ தே கட்சியோ அல்லது சுதந்திர கட்சியோ வேறு தேசியக்கட்சிகளோ ஒரு முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தாது. ஏனெனில் 75அல்லது 80 விகிதம் சிங்களவர்கள் வாழுகின்ற ஒரு தொகுதியில் முஸ்லிம் ஒருவரை நிறுத்தி அந்தக்கட்சிகளால் வெற்றிபெற முடியுமா? முடியாது.

மறுபுறம் ஒரு முஸ்லிம்கட்சி ஒரு முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தினாலும் வெற்றிபெற முடியாது. அதேநேரம் அங்குள்ள முஸ்லிம்களும் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஏனெனில் தோல்வியடையப்போகின்ற வேட்பாளருக்கு வாக்களித்துவிட்டு அவர்கள் அத்தொகுதியில் நிம்மதியாக வாழமுடியுமா? எனவே யாராவது ஒரு பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு வேட்பாளருக்குத்தான் வாக்களிப்பார்கள்.

அதேநேரம் அந்த முஸ்லிம் வேட்பாளர்கூட பெரிதாக வேலைசெய்ய மாட்டார். ஏனெனில் தோற்போம் என்று தெரிந்துகொண்டு யாரும் பணம் செலவழித்து வேலைசெய்வார்களா?

இறுதியில் அந்தமாவட்டத்தில் தேசியக்கட்சிகளில் இருந்தும் ஒரு அங்கத்தவர் தெரிவுசெய்யப்பட மாட்டார். முஸ்லிம்கட்சிகளிலிருந்தும் தெரிவுசெய்யப்பட மாட்டார். தேசியக்கட்சிகள் புண்ணியத்திற்காக பட்டியலில் இருந்து யாரையாவது நியமித்தால் உண்டு. இல்லையெனில் யாருமில்லை. சொந்தமாக ஒரு முஸ்லிம் பிரதிநிதியை தெரிவுசெய்கின்ற உரிமையை முஸ்லிம்கள் இழக்கின்றார்கள்.

கூட்டமைப்பு ( Alliance) சாத்தியமா?
----------------------------------
தற்போதே, மாகாணசபைத் தேர்தலைப் பொறுத்தவரை, பாராளுமன்றத் தேர்தலைப்போல் பெரிய கட்சிகள் முஸ்லிம் கட்சிகளுடன் பெரிய ஆர்வமாக கூட்டமைப்பை நாடுவதில்லை. புதிய முறையின்கீழ் முஸ்லிம்கள் எப்படியும் தமக்கே வாக்களிப்பார்கள்; முஸ்லிம்கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள்; என்றும் தெரியும்.

எனவே, முஸ்லிம்கட்சிகளுடன் கூட்டமைப்பை ஏற்படுத்தி எதற்காக அவர்களுக்கு பட்டியல் ஆசனம் வழங்க வேண்டும். எனவே, வடகிழக்கிற்கு வெளியே, முஸ்லிம்பெரும்பான்மைத் தொகுதிகளை உருவாக்கினாலேயொழிய ஆசனங்களைப் பெறமுடியாது.

அதாவது பட்டியல் ஆசனங்கள் குதிரைக்கொம்பு. தொகுதிகளில் வெற்றிபெற்றால்தான் உண்டு. மறுவார்த்தைகளில் கூறுவதானால் வடகிழக்கைப் பொறுத்தவரை இது 100 விகிதம் தற்போதைய தேர்தலைல்போன்று விகிதாசாரத் தேர்தல். பாதிப்பு இல்லை. ( வடக்கிற்கு ஒரு சிறிய பாதிப்பு வரலாம். அதனை பின்னர் பார்ப்போம்).

வடகிழக்கிக்கிற்கு வெளியே, நடைமுறையில் கிட்டத்தட்ட 100 விகிதம் பழைய தொகுதிமுறைத் தேர்தலைப் போன்றதே! இப்பொழுது கேள்வி, 100 வீதம் தொகுதிகள் உருவாக்கப்படுமா? தேர்தல் முறையிலே 50 விகிதம்தான் தொகுதி உருவாக்கலாம். முஸ்லிம்களுக்கு எப்படி 100 வீதம் உருவாக்கலாம்?

சரி, 50 வீதமாவது உருவாக்கலாமா? அதுவும் சாத்தியமில்லை, ஏனெனில் முஸ்லிம்கள் சிதறி வாழ்கின்றார்கள். எனவே, கொழும்பு, கண்டி, பேருவளை, சிலவேளை புத்தளம் போன்ற இடங்களில் ஒரு சில தொகுதிகளை உருவாக்கலாம். அதாவது அந்த ஐம்பது வீதத்தில் பாதியளவாவது தொகுதி உருவாக்கலாமா? என்பது கூட நிச்சயமில்லை.

எல்லை நிர்ணயக்குழு
--------------------
இன்று எல்லை நிர்ணயக்குழுவைப் பற்றி பேசுகின்றார்கள். எல்லை நிர்ணயக்குழுவால் என்ன செய்யமுடியும். சிதறிக்கிடக்கின்ற முஸ்லிம்களைக் கொண்டுவந்து ஒரு இடத்தில் குடியேற்றி அந்த இடத்தில் நமக்கு தொகுதிகளை உருவாக்கியா தரமுடியும்? ஆகக்கூடியது முஸ்லிம்கள் செறிவாக வாழுகின்ற இடங்களில் ஓரளவு நியாயமாக தொகுதிகளை உருவாக்கித்தர முடியும். ஆனால் இலங்கையில் வடகிழக்கிற்கு வெளியே சிதறிவாழுகின்ற முஸ்லிம்கள் அதிகமா? செறிந்து வாழுகின்ற முஸ்லிம்கள் அதிகமா? சிதறி வாழுகின்ற முஸ்லிம்கள்தான் அதிகம். எனவே, எங்களால் 25% விகித தொகுதிகளைக்கூட பெற்றுக்கொள்ள முடியாது.

60:40 ஐ 50:50 ஆக்கியது சாதகமா? பாதகமா?
----------------------------------------------
கிழக்கைப் பொறுத்தவரை அது பெரிதாக எதுவித தாக்கத்தையும் செலுத்தாதபோதும் மட்டக்களப்பிலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் 60;40 தான் சாதகமானது. இது தொடர்பாக பின்னர் பார்ப்போம். வடகிழக்கிற்கு வெளியே, தொகுதி கூடும்போது சிலவேளை முஸ்லிம்களுக்கு இன்னும் இரண்டொரு தொகுதிகள் கூடுதலாக உருவாக்கலாம். ஆனால் அதை 50:50 ஆக்கி அந்த சந்தர்ப்பத்தையும் இல்லாமலாக்கியிருக்கின்றார்கள்.

சுருங்கக்கூறின் 60:40 ஐ 50:50 ஆக ஆக்கி முஸ்லிம்களுக்கு தீமை செய்திருக்கின்றார்களே தவிர நன்மை செய்யவில்லை. தீமையைச் செய்துவிட்டு நன்மை செய்ததாக பிரச்சாரம் செய்கின்றார்கள். அந்த நன்மை என்னவென்றுதான் சொல்கின்றார்களில்லை.

இந்த நிலையில் இதற்குரிய தீர்வு என்ன?
தீர்வு இரட்டை வாக்காகும். அதை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

( தொடரும்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -