இடைக்கால அறிக்கையும் முஸ்லிம்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியும்- பாகம் 4

வை எல் எஸ் ஹமீட்-

பேய்தானாம் ஆனால் பேய் என்று சொல்லக் கூடாதாம்
--------------------------------------------

தற்போதைய அரசியல்யாப்பில் இலங்கையை ஒரு "ஒற்றையாட்சி" நாடாக குறிப்பிடப்பட்டுள்ளதை நீக்கிவிட்டு, புதிய யாப்பபில் " ஒருமித்த நாடு" என குறிப்பிடப்பட வேண்டும்; என இடைக்கால அறிக்கை கூறுகின்றது. ஆனால் இலங்கை ஒற்றையாட்சித் தத்துவம் உள்ள நாடுதான்; அதில் மாற்றமில்லை; என்று அரசு கூறுகின்றது. அதாவது ' பதம்'தான் மாறுகிறதே தவிர ' பொருள்' மாறவில்லை; என்கிறார்கள்.

இதற்கான காரணம் , " ஒற்றையாட்சி" என்ற என்ற சொல்லைப் பார்த்து தமிழ் மக்கள் பயப்படுகிறார்கள்; என்பதாகும் என்று இடைக்கால அறிக்கை கூறுகின்றது. அதாவது தமிழ் மக்களைப் பொறுத்தவரை அது ' பேய் தானாம்' ஆனால் ' ஆனால் ' பேய்' என்று சொல்லமாட்டார்களாம். அப்படியானால் தமிழ் மக்கள் குழந்தைகள் எனவே அவர்களை இலகுவாக ஏமாற்றலாம்; என்கின்றதா? அரசு. அவ்வாறாயின் தமிழ்த்தலைவர்களும் குழந்தைகள்தானா? அல்லது அவர்களும் சேர்ந்து தமிழர்களை ஏமாற்றுகின்றார்களா? என்ற கேள்வி இங்கு எழுகின்றது.

சிங்களப் பதம்

--------------
தற்போதைய அரசியலமைப்பில் ஒற்றையாட்சியைக் குறிக்கும் பதமாக பாவிக்கப்படுகின்ற " ஏகிய ராஜ்ய" என்ற பதமானது மாற்றப்படவில்லை. ஏனெனில் சிங்களவர்களுக்கு "சமஷ்டி" என்ற பதத்தைக் கேட்டால் பயமாமாம்; என்று இடைக்கால அறிக்கை கூறுகின்றது. ஆனால் அதன் பொருள் மாற்றப்பட்டுள்ளது. ( அதற்கு பின்னர் வருவோம்)

ஆங்கிலப் பதம்
---------------
ஆங்கிலத்தில் தற்போதிருக்கின்ற " unitary State" என்ற பதமும் நீக்கப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் பிரித்தானியா ஒற்றையாட்சி நாடாக இருந்தும் அங்கு ஸ்கொட்லாந்து மற்றும் வடஅயர்லாந்து பிரிந்து செல்லக்கூடிய நிலை இருக்கிறதாம்; எனவே, unitary State என்ற சொல் இலங்கைக்குப் பொருத்தமில்லையாம். (இதற்கும் பின்னர் வருவோம்). எனவே, புதிய யாப்பில் ஆங்கிலப் பிரதியிலும் " ஏக்கிய ராஜ்ய / ஒருமித்த நாடு" என்ற சொல்லே பாவிக்கப்பட வேண்டும்; என்று பிரேரிக்கப்பட்டுள்ளது. " ஏக்கிய ராஜ்ய" என்பதன் ஆங்கிலப் பொருள் " unitary state " என்பதுதானே. அப்படியானால் ஏன் அதைப்போட முடியாது. இது சர்வதேச சமூகத்தை ஏமாற்றவா?

Unitary State என்ற ஆங்கிலப் பதத்தைப் போடாவிட்டால் நீங்கள் நினைக்கின்ற கருத்தைக் குறிக்கின்ற ஒரு ஆங்கில சொல்லை ஏன் போடவில்லை? ஏன் ஆங்கில மொழியில் சொற்களுக்கு பஞ்சமா? 'ஏக்கிய ராஜ்ய' என்ற சிங்கள சொல்லை ஆங்கிலப் பிரதியில் போட்டு, புதிய பொருளை ஆங்கிலத்தில் போடுகின்றார்கள். ' ஏக்கிய ராஜ்ய' என்ற சிங்கள சொல்லுக்கு புதிய வியாக்கியானம் கொடுக்க முடியுமென்றால் unitary state என்ற ஆங்கிப் பதத்தை எழுதி அதே புதிய அர்தத்தை ஆங்கிலத்தில் கொடுக்கலாமே? ஏன் கொடுக்கவில்லை. ஏனெனில் சர்வதேச சமூகத்திற்கு ஆங்கிலம் தெரியும். ஏமாற்ற முடியாது. ஆனால் சிங்கள மொழிக்கு சொந்தக்காரனான ஒரே நாடு இலங்கை. அது ஒரு சிங்கள சொல்லுக்கு இதுதான் பொருள் என்று உத்தியோகபூர்வமாக வரையறை செய்தால் சர்வதேச சமூகம் நம்பிவிடும்; என்ற எதிர்பார்ப்பா? இதற்குள் இருக்கின்ற மர்மம் என்ன?


அதாவது முட்டை என்ற தமிழ் சொல் சிங்களத்தில் பி( b) த்தற என்றும் ஆங்கிலத்தில் egg என்றும் அழைக்கப்படும். இப்பொழுது முட்டை என்ற சொல்லை நீக்கிவிட்டு ( மஞ்சள், வெள்ளைக்) கருவின் கூட்டு என்று தமிழிலும் பித்தற என்றே சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் குறிப்பிடப் போகின்றார்கள். பித்தற என்ற சொல் ( மஞ்சள், வெள்ளைக்) கருவின் கூட்டை சிறப்பாக குறிப்பிடுகின்றதாம். பிரித்தானியாவில் egg என்ற சொல் மாற்றத்திற்குட்பட்டிருக்கின்றதாம். கொஞ்சம் மஞ்சள் கருவும் வெள்ளைக் கருவும் வெளியேறக் கூடிய வாய்ப்பிருக்கிறதாம். எனவே இலங்கையில் egg என்ற சொல் பொருத்தமில்லையாம். அதனால் 'பித்தற' என்ற சொல்லை ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் எழுத வேண்டுமாம். தமிழில் ( மஞ்சள், வெள்ளைக்) கருவின் கூட்டு என்று எழுத வேண்டுமாம். யாரை ஏமாற்ற இந்த அரசு முயற்சிக்கின்றது.

இதில் முஸ்லிம்கள் எங்கே இருக்கின்றார்கள் ?
---------------------------------------------
சமஷ்டியால் நேரடியாக பாதிக்கப்படப் போகின்றவர்கள் முஸ்லிம்கள். ஆனால் அவர்களைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. சிங்களவர்களையும் தமிழர்களையும் பற்றித்தான் பேசப்படுகிறது. முஸ்லிமகளுக்காக பேசுவதற்கு யார் இருக்கின்றார். சிலர் கூறுகின்றார்கள், " முஸ்லிம்களுக்கு ஏதாவது நடந்தால் முஸ்லிம் நாட்டுத் தலைவர்கள் எதுவும் செய்யமாட்டார்களாம்". அது எல்லோருக்கும் தெரிந்தவிடயம்தான். ஆனால் அதையும் தெரிந்துகொண்டுதானே, முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தைப் பறித்து முஸ்லிம்களை அரசியல் அனாதையாக்குகின்ற சட்டமூலத்திற்கு வாக்களித்தீர்கள். நாளை முஸ்லிம்கள் இதன் விளைவை அனுபவிக்கும்போது முஸ்லிம்நாட்டுத் தலைவர்களும் வரமாட்டார்ரகள், நீங்களும் வீராவேச அறிக்கை விடுவதைத்தவிர ஒன்றும் செய்யமாட்டீர்கள்.

உங்களுக்கு திராணியிருந்தால், சமூக அக்கறை இருந்தால் இந்த சட்டத்தை மாற்றி இரட்டை வாக்கை அறிமுகப்படுத்த அல்லது பழைய முறையிலேயே தேர்தலை நடாத்த போராட முடியுமா? இது என்ன மாற்றமுடியாத சட்டமா? இதைப்பற்றி ஒரு வார்த்தைதானும் பேசுகிறீர்களா?
அரசுக்கு இருந்த தேவை தேர்தலை ஒத்திப்போடுவது, அதைத்தான் அரசு சாதித்துவிட்டதே! இப்பொழுதாவது இந்தச் சட்டத்தை திருத்தும்படி கூறமுடியாதா? இதைச் செய்யாமல் அடுத்த தேர்தலில் எந்த முகத்துடன் வந்து வீரவசனம் பேசப்போகிறீர்கள்?

ஒருமித்த நாடு

--------------
நாங்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். ' ஒருமித்த' என்பதன் பொருளென்ன? ' ஒருமித்த' என்றால் 'ஒன்றுபட்ட' என்று பொருள். ஒருமித்துக் குரல் கொடுப்போம்; என்றால் ஒன்றுபட்டுக் குரல் கொடுப்போம்; என்பதாகும். எனவே, ஒருமிப்பதற்கு அல்லது ஒன்று படுவதற்கு ஒன்றுக்கு மேற்பட்டவை இருக்க வேண்டுமே? ஒன்றுதான் இருந்தால் 'ஒருமித்த' என்ற சொல்லுக்கு இடமில்லையே!

தமிழ்த் தரப்பினர் தாங்கள் ஒரு காலத்தில் தனிநாடாக இருந்தோம். தமிழ் மன்னர்கள் தமிழ் மண்ணை ஆட்சி செய்தார்கள். ஐரோப்பியர்கள்தான் எல்லோரையும் ஒரே நாடாக்கினார்கள். எனவே நாங்கள் வெவ்வேறான நாடாக இருந்துதான் ஒன்று சேர்ந்தோம்; என்பதை அங்கீகரியுங்கள், என்கிறார்கள். இதுபோன்றதொரு கோரிக்கை அன்று சோல்பரி ஆணைக்குழுவிடமும் முன்வைக்கப்பட்டது. ஆனால் அதனை பிரித்தானியா ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை இன்று இந்த நல்லாட்சி அரசு மறைமுகமாக ஏற்றுக்கொள்கின்றதா? அவ்வாறாயின் இதற்குப் பின்னால் இருக்கின்ற நிகழ்ச்சி நிரல் என்ன? எந்த சக்தியின் அழுத்தத்தில் இவ்வாறு செய்யப்படுகின்றது? இது integrative Federalism இத்திற்கான முன்னேற்பாடா?

சமஷ்டியில் இரு பிரதான வகை இருக்கின்றது. (1) devolutionary Federalism- இது ஒரே நாட்டிற்குள் சமஷ்டித் தன்மையைக் கொண்டுவருவது. (2) integrative Federalism- இது முன்பு தனிநாடுகளாக இருந்தவை ஒன்று சேர்ந்து சமஷ்டி உருவாக்குவது. இது தொடர்பாக விரிவான விளக்கம் எனது அரசியலமைப்புச்சட்ட மாற்றம் என்ற தொடர்கட்டுரையில் இன்ஷாஅல்லாஹ் எதிர்பாருங்கள்.

எனவே, இந்த இடைக்கால அறிக்கைக்குள் பல ஆழமான அம்சங்கள் பொதிந்து கிடக்கின்றன. அடுத்த தொடரில் ' ஏக்கிய ராஜ்ய/ ஒருமித்த நாடு' என்பதற்கு வழங்கப்பட்டிருக்கின்ற வியாக்கியானத்தைப் பார்ப்போம், இன்ஷாஅல்லாஹ்.

( தொடரும்)

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -