கலப்புத் தேர்தல் முறையும் ஏமாற்றப்பட்ட முஸ்லிம்களும் - பாகம் 5

இரட்டை வாக்கு இன்றைய பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வாகும்?
-------------------------------------------------

விடயத்திற்குள் செல்லமுன் சில ஆரம்பக் குறிப்புகளைப் பதிவிட விரும்புகிறேன்

குறிப்பு:1 வெட்டுப்புள்ளி: பாராளுமன்றத் தேர்தலில் இருக்கின்ற 5 விகித வெட்டுப்புள்ளியை மாகாணசபைத் தேர்தலிலும் இருப்பதாக எண்ணி இன்னும் சிலர் குழம்புவது புரிகின்றது. தற்போதைய மாகாணசபைத் தேர்தலிலும் வெட்டுப்புள்ளி இல்லை. புதிய தேர்தலிலும் இல்லை.

குறிப்பு:2 சிலர் இத்தேர்தல்முறை கிழக்கில் மீண்டும் ஒரு முஸ்லிம் முதலமைச்சர் வரமுடியாத நிலையை ஏற்படுத்தியிருப்பதாக பிழையாக பிரச்சாரம் செய்கிறார்கள். இது கிழக்கு முஸ்லிம்களைக் குழப்புவதற்காக அரசுக்கு எதிரான சில பெரும்பான்மை அரசியல்வாதிகளால் கட்டிவிடப்பட்ட புரளி. இதை நம்பிக்கொண்டு சிலர் பிழையாக பிரச்சாரம் செய்கின்றார்கள்.

புதிய தேர்தல்முறை கிழக்கில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை; என்றால் அது எவ்வாறு முஸ்லிம் முதலமைச்சர் விடயத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? கிழக்கில் எந்தவொரு சமூகமும் தனித்து முதலமைச்சரை இப்பொழுதும் பெறவில்லை. எதிர்காலத்திலும் பெறமுடியாது. அடுத்த சமூகங்களுடன் இணைந்துதான் பெறமுடியும்.

குறிப்பு: 3 இது மிகவும் முக்கியமான விடயம். குறிப்பாக வடகிழக்கிற்கு வெளியேயுள்ள முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும். அதாவது இத்தேர்தல் முறைக்கு கையுயர்த்தியதற்காக, அனைவரினதும் ஏச்சுப்பேச்சுக்களும் விமர்சனங்களும் முஸ்லிம்கட்சிப் பிரதிநிதிகளை நோக்கியே பிரதானமாக இருக்கின்றது. ( சிலர் பொதுவாக 21 பேரையும் குறிப்பிட்டபோதும்) அது ஏன்?

இந்த 21 பேரில் 12 பேர் முஸ்லிம்கட்சிகளையும் ஏனைய 9 பேர் தேசியக்கட்சிகளையும் பிரதிநிதித்துவப் படுத்துகின்றார்கள். அந்த விமர்சனத்தில் நியாயம் இருக்கின்றது. ஏனெனில் அவர்கள்தான் சுதந்திரமாக பேசக்கூடிய முடிவெடுக்கக் கூடியவர்கள். யார்செய்தாலும் அவர்கள் இந்த துரோகத்தை செய்திருக்கக் கூடாது.

மறுபுறத்தில் இதன் பின்னாலுள்ள யதார்த்தம் என்ன? தனிக்கட்சியில்தான் சுதந்திரம் இருக்கின்றது. முஸ்லிம்களுக்காக சுதந்திரமாக சிந்திக்கவும் செயற்படவும் முடியும். அந்த சுதந்திரம் இருந்தும் ஏன் அடிமையாக செயற்பட்டீர்கள், என்பதுதான் நமது ஆத்திரம். அது நியாமானது.

அதேநேரம் தேசியக்கட்சிளில் இருப்பவர்களுக்கு சுதந்திரமில்லை. அவர்கள் அடிமைகள் என்று தெரிந்துகொண்டு ' நீங்கள் தொடர்ந்தும் அடிமைகளாக இருங்கள்'; என்று வாக்களிக்கின்றோமே! ஏன்?

சுதந்திரம் கொடுக்கப்பட்டவர்கள் அரசியல் அடிமைகளாக செயற்படுவதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதன் பொருள் ' சுதந்திரம் கொடுத்ததற்காக அவர்கள் அரசியல் அடிமைகளாக செயற்படக்கூடாது; என்பதா? முஸ்லிம்கள் மொத்தத்தில் அரசியல் அடிமைகளாக இருக்கக்கூடாது; என்பதா?

இரண்டாவதுதான் எமது நிலைப்பாடு என்றால் சிலருக்கு தேசியக்கட்சிகளில் அரசியல் அடிமைகளாக இருப்பதற்கு நாமாக மனமுவர்ந்து அனுமதி கொடுக்கின்றேமே! ஏன்? வடகிழக்கிற்கு வெளியேயுள்ள முஸ்லிம்கள் குறிப்பாக இதைப்பற்றி சிந்திக்க வேண்டும்.

இன்று நாம் முகம்கொடுக்கின்ற சூழல்கள் தனித்துவ அரசியலின் அவசியத்தை மேலும் வலியுறுத்துகின்றது; பிழை தனித்துவ அரசியலில் அல்ல. மாறாக, அந்த அரசியலுக்கு நாம் தெரிவுசெய்தவர்களில்தான் பிழை. அந்த பிழைக்கு காரணம் நாம். இன்று நமது பிரதிநிதிகள் நம்மைக் காட்டிக்கொடுக்கின்றார்கள்; என்றால் அதற்குரிய முழுக்குக்குற்றத்தையும் சமூகமே ஏற்கவேண்டும். மனிதன் தவறு செய்கின்றவன். கடந்தகாலத்தவறை உணர்ந்து எதிர்காலத்தை செம்மைப்படுத்தி பொருத்தமான பிரதிநிதித்துவங்களைத் தெரிவுசெய்து நமது அரசியல் பயணத்தை முன்னெடுக்க வேண்டும்.

எதற்காகவும் தனித்துவ அரசியல்பயணத்தைத் தண்டித்துவிடாதீர்கள். மாறாக அதனைப் பலப்படுத்துங்கள். அந்தப்பயணத்தின் சாரதிகளை மாற்றுங்கள்.

எல்லாக்கட்சிகளில் இருப்பவர்களும் ஒற்றுமைப் படுவது இன்றைய பிரச்சினைக்கு தீர்வாகுமா?
--------------------------------------------

இன்று எல்லோரும் ஒற்றுமைப்படுங்கள் என்ற கோசம் அவ்வப்போது எழுப்பப்படுகின்றது. இந்தக் கோசம் இன்று நேற்றல்ல, 2008ம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் இருந்து ஒலித்து வருகின்றது. அது இதுவரை சாத்தியப்படவில்லை. சுயநலன்கள் ஒரு பொதுநலப் பயணத்தில் ஒன்றுசேர முடியாது; என்பதே அதன் யதார்த்தம்.

இவர்கள் ஒன்றுசேர்ந்தாலும் நிலைத்து நிற்கப்போவதில்லை. அதற்கு அவர்களது சுயநலன்கள் இடம்கொடுக்கப் போவதில்லை.

===================================
பல பிழைகள் ஒன்றிணைந்து ஒரு சரியை உருவாக்க முடியாது.
===================================
சமூகத்தில் சரியானவர்களே இல்லையா? படித்த சமூகப்பற்றுள்ள இழைய தலைமுறையினர் இல்லையா? சில சமயங்களில் அரசியலுக்கு வரமுதல் சரியாக இருந்தவர்களும் வந்தபின் பிழையாக மாறிவிடுகின்றார்கள்; என்பதிலும் உண்மை இல்லாமலில்லை. அவ்வாறு அரசியலுக்கு வந்தபின்பும் சரியாக இருக்க வேண்டும்; என்று நினைப்பவர்கள்; அதற்காகப் போராடுகின்றவர்கள் அரசியலில் தோற்றுப்போனதுதான் வரலாறாகும்.

இதற்குரிய முழுப்பொறுப்பையும் சமூகமே பாரமெடுக்க வேண்டும். ஏனெனில் அரசியலுக்கு வருகின்ற ஒருவரிடம் கல்வி இருக்கின்றதா?, திறமை இருக்கின்றதா?, நெஞ்சுரம் இருக்கின்றதா? பேச்சாற்றல் இருக்கின்றதா? மொழிவளம் இருக்கின்றதா? நேர்மைத்திறன் இருக்கின்றதா? சமூகத்தின்மீது பற்று இருக்கின்றதா? என்று சமுதாயம் எப்போதாவது பார்த்ததுண்டா?

சமுதாயம் பார்ப்பதெல்லாம் என்ன?
அவர்களிடம் பணம் இருக்கின்றதா? அவர்களிடம் அதிகாரம் இருக்கின்றதா? அமைச்சுப் பதவி இருக்கின்றதா? என்றுதானே சமூகம் பார்க்கின்றது.
எந்தப் பிசாசுடனாவது சேர்ந்து யாரைக்காட்டிக்கொடுத்தாவது, பணத்தையும் பதவியையும் அதிகாரத்தையும் சம்பாதித்துக்கொண்டு வந்தால் அவருக்குப் பின்னால் அணிதிரள்வதற்கு ஒரு கூட்டம் தயாராக இல்லையா? அதன்பின் இவ்வாறு அழுகின்ற ஒரு சூழல் வரும்போது அவர்களை ஏசி என்ன பயன். எனவே சிந்தியுங்கள்.


உள்ளூராட்சி சபையிலும் மாகாணசபையிலும் பாதிக்குமேல் எமது பிரதிநிதித்துவத்தை பறிகொடுக்கப் போகின்றோம். குறிப்பாக, பொலிஸ் அதிகாரம் உட்பட அதிகப்பட்ச அதிகாரத்தைக் கொண்ட மாகாணசபைகளில் எதிர்காலத்தில் பிரதிநித்துவம் இல்லாத சமூகமாக இருக்கப் போகின்றோம்.

பாராளுமன்றத்தேர்தலிலும் இதே நிலை உருவானால் அதன்பின் நமக்கும் ரோகிங்கியர்களுக்கும் வித்தியாசமே இல்லாமல் போகும். 18 கோடி முஸ்லிம்கள் வாழுகின்ற இந்தியாவில் மாட்டிறைச்சி சாப்பிட்டார்கள் அல்லது வைத்திருந்தார்கள்; என்பதற்காக பகிரங்கமாக அடித்தே கொன்றுவிட்டு அதை ஒளிப்பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் தைரியமாக பதிவிடுகின்றார்கள். தட்டிக்கேட்க நாதியில்லை. காரணம் அங்குள்ள தேர்தல் முறையும் மாகாண ( மாநில) ஆட்சி முறையுமாகும். அதே நிலைமை நமக்கும் வரவேண்டுமா? சிந்தியுங்கள்.

ஒரு சமூகத்தின் தலைவிதியை அச்சமூகம் மாற்றிக்கொள்ளாதவரை அச்சமூகத்தின் தலைவிதியை இறைவனும் மாற்றமாட்டான்.


நீளம் கருதி இப்பாலத்தின் பிரதான தலைப்பை அடுத்த தொடருக்கு நகர்த்துவோம், இன்ஷாஅல்லாஹ்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -