-------------------------------------------------
கலப்புத் தேர்தல் நடைபெறுகின்ற நாடுகளில் குறிப்பாக ஜேர்மனி, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இரட்டை வாக்கே அமுலில் இருக்கின்றது. இரட்டை வாக்கு வழங்காதிருப்பது வாக்குரிமையையும் அதன் விளைவாக மக்களின் இறைமையையும் மீறுவதாகும். அரசியலமைப்பு சரத்து மூன்றின்படி பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு இருப்பதுபோல் இலங்கைப் பாராளுமன்றத்திற்கு சொந்தமான சட்டவாக்க அதிகாரம் கிடையாது.
அதிகாரம் மக்களுடையது. அதில் சட்டவாக்க அதிகாரத்தை குறித்த சில கட்டுப்பாட்டுடன் பாராளுமன்றத்திற்கு அரசியலமைப்பினூடாக மக்கள் வழங்கி இருக்கின்றார்கள். பாராளுமன்றம் ஒரு நம்பிக்கை சபை ( trustee) மாத்திரம்தான். ( The legislative power of the people is exercised by Parliament in trust for the people). எனவே மக்களின் வாக்குரிமையை பாராளுமன்றம் மக்களின் அனுமதி இல்லாமல் பறித்திருக்கின்றது. இந்த சட்டமூலம் முழுக்க முழுக்க அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது.
முன்னாள் பிரதம நீதியரசரின் வழக்கு மிகவும் பலமான அடிப்படையைக் கொண்டது. இருக்கின்ற ஒரேயொரு பிரச்சினை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை ( அது அரசியலமைப்பிற்கு முரணாக இருந்தாலும்) நீதிமன்றில் கேள்விக்குட்படுத்துவதை அரசியலமைப்பு தடைசெய்திருக்கின்றது. எனவே நீதிமன்றம் இந்த வழக்கில் என்ன தீர்ப்பைத் தரப்போகின்றது; என்று பொறுத்திருந்து பார்ப்போம், இன்ஷாஅல்லாஹ்.
இரட்டை வாக்கு
----------------
பாகம் இரண்டில் நியூசிலாந்தில் இரட்டை வாக்கு எவ்வாறு செயற்படுகின்றது; என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது. தயவுசெய்து அதை மீண்டும் வாசித்துக் கொள்ளவும்.
இங்கு உதாரணத்திற்கு மீண்டும் குருநாகல் மாவட்டத்தை எடுப்போம். தெரிவுசெய்யப்படும் அங்கத்தவர்களின் எண்ணிக்கை 20 என்றும் எனவே தொகுதிகள் 10 என்றும் வைத்துக்கொள்வோம். இப்பொழுது ஒருவருக்கு இரு வாக்கு. ஒன்று கட்சிக்கு அடுத்தது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருக்கு.
சகல தொகுதிகளிலிலும் 20 விகிதத்திற்கும் குறைவாக முஸ்லிம்கள் இருக்கின்றார்கள்; எனவும் கொள்வோம். ஏன்கனவே, 4ம் பாகத்தில் குறிப்பிட்டதுபோல் அங்குள்ள முஸ்லிம்கள் வேட்பாளருக்குரிய வாக்கை வெற்றிபெற முடியாத முஸ்லிம் வேட்பாளருக்கு அளிக்கமாட்டார்கள். மாறாக வெற்றிபெற சாத்தியமான தேசியக்கட்சியொன்றில் போட்டியிடுகின்ற ஒரு பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளருக்கே வாக்களிப்பார்கள். ஏனெனில் அவர்கள் அந்தப் பிரதேசத்தில் நிம்மதியாக வாழவேண்டும். தற்பொழுதே முஸ்லிம்கட்சிகளுக்கு வாக்களிக்க அஞ்சுகின்றார்கள்.
தொகுதி வேட்பாளருக்கு கட்சி வாக்கைவிட தொகுதி வாக்குத்தான் முக்கியம். அதுதான் அவரது வெற்றியைத் தீர்மானிப்பது. இரட்டை வாக்கானால் தொகுதி வாக்கை முஸ்லிம் அல்லாத ஒருவருக்கு அளித்துவிட்டு கட்சி வாக்கை ஓரு முஸ்லிம் கட்சிக்கு அளிக்கலாம். அந்தக்கட்சி இவ்வாறு மாவட்டம் முழுவதும் சேகரிக்கின்ற வாக்குகளுக்கு பட்டியலில் இருந்து சில அங்கத்தவர்களைப் பெறலாம்.
அதேநேரம் தேசியக்கட்சிகளும் முஸ்லிம்களின் விகிதாசாரம் குறைவான காரணத்தால் தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தாவிட்டாலும் பட்டியலில் முஸ்லிம் வேட்பாளர்களைப் பெயரிட்டு முஸ்லிம் வாக்குகளைக் கவருவதற்காக முன்கூட்டியே வாக்குறுதி கொடுத்து அவர்களைத் தெரிவு செய்யலாம்.
எனவே, முஸ்லிம் கட்சிகளில் இருந்து சில ஆசனங்களும் தேசியக்கட்சிகளில் இருந்து சில ஆசனங்களும் கிடைக்கலாம். இன்னும் சொல்லப்போனால் இன்று மூன்று மாகணங்களில் ( ஊவா, சப்ரகமுவ, தெற்கு) ஒரு அங்கத்தவர்கூட எங்களுக்கு இல்லை. ஆனாலும் கணிசமான முஸ்லிம் வாக்குகள் இருக்கின்றன.
உதாரணமாக, பதுளை மாவட்டத்தில் சுமார் 35000 முஸ்லிம் வாக்குகள் இருந்தும் ஒரு அங்கத்தவர் இல்லை. காரணம் அங்குள்ள சிங்கள மக்களுடன் இணைந்து வாழவேண்டிய தேவையைக் கருத்திற்கொண்டு தேசியக்கட்சிகளுக்கே வாக்களிக்கின்றார்கள். அவர்களால் விருப்பத் தெரிவு வாக்கில் அடுத்த சமூகத்தவர்களுடன் போட்டியிட முடியாத நிலை.
முஸ்லிம் கட்சிகளில் இலகுவாகப் பிரதிநிதித்துவத்தைப் பெறலாம், ஆனாலும் மேற்சொன்ன காரணங்களுக்காக தேசியக்கட்சிகளுக்கே வாக்களித்து தங்களுக்கு உரித்தான ஆசனங்களைத் தற்போதும் இழந்துகொண்டிருக்கின்றார்கள்.
இது இரட்டை வாக்காகும்போது, வேட்பாளருக்கு வாக்களித்து இன உறவைப் பேணுகின்ற அதேவேளை கட்சிவாக்கின் மூலம் ஆசனங்களையும் பெற முடியும்.
தேசியக்கட்சிகளுடன் சிறிய கட்சிகள் கூட்டமைப்பு
-------------------------------------------------
இப்பொழுது தேசியக்கட்சிகள் சிறுபான்மைக் கட்சிகளுடன் கூட்டமைப்பு வைக்கவேண்டிய கட்டாய நிலை ஏற்படும். சிறுபான்மைக் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டு கட்சி வாக்கைப் பிரித்தால் மாவட்டத்தில் பெறுகின்ற மொத்த ஆசனங்களில் அது தாக்கத்தை ஏற்படுத்தும். மாறாக, ஒற்றை வாக்கானால் சிறுபான்மைக் கட்சிகளால் வாக்குகளைப் பிரிக்க முடியாது; என்று தெரியும். எனவே பெரிய கட்சிகள் கூட்டமைப்பை நாடாது.
எனவ ஒற்றை வாக்கானால் வடகிழக்கிற்கு வெளியே உருவாக்கப்படுகின்ற ஒரு சில தொகுதிகளைத் தவிர வேறு எங்கும் ஆசனம் பெற முடியாது. இரட்டை வாக்கானால் எங்களுக்குரிய அதிகப்பட்ச ஆசனங்களைப் பெறுவதோடு இதுவரை எங்களால் பெறமுடியாமல்போன மேற்குறிப்பிட்ட மூன்று மாகாணங்களில்கூட சிலவேளை ஆசனம் பெறக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.
ஏன் இவர்கள் இரட்டை வாக்கைக் கேட்கவில்லை
----------------------------------------------
இவர்கள் நாலு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தோம். போராடினோம். 60 ஐ 50 ஆகக் குறைத்தோம்; என்றெல்லாம் கூறுகின்றார்களே! ஏன் இவர்கள் இரட்டை வாக்கைக் கேட்கவில்லை. இடைக்கால அறிக்கையில் பாராளுமன்றத் தேர்தலுக்கு இரட்டை வாக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. அவ்வாறாயின் இதுவும் அதே கலப்புமுறைத் தேர்தல்தானே! ஏன் கேட்கவில்லை. கேட்டிருந்தால் பாராளுமன்றத் தேர்தலுக்கே உடன்பட்டவர்கள் இதற்கு மறுத்திருப்பார்களா? அவ்வாறு மறுத்திருந்தாலும் விட்டிருக்கலாமா? ஏன் கேட்கவில்லை.
இத்தேர்தல்முறை அரசியல் யாப்பு சரத்து மூன்றில் குறிப்பிடப்பட்ட இறைமையின் ஓர் அங்கமான வாக்குரிமையை மீறுகின்றது. ஏனெனில் ஒருவருக்கு தொகுதியில் போட்டியிடுகின்ற வேட்பாளருக்கு அளிப்பதற்காகத்தான் தொகுதி வாக்கு வழங்கப்படுகிறது. அவருடைய தெரிவு வேட்பாளரே தவிர கட்சியல்ல. ஒருவர் தான் விரும்பாத கட்சியாக இருந்தாலும் அந்த வேட்பாளருக்காக வாக்களிக்கலாம். அந்த வாக்கை அந்த வேட்பாளருக்கான வாக்காக எடுத்து அவரைத் தெரிவுசெய்கின்ற அதேவேளை, அந்தக்கட்சிக்குரிய வாக்காகவும் எடுத்து மேலதிக அங்கத்தவர்களை பட்டியலிலிருந்தும் அக்கட்சி பெறுகிறது. இது மக்களின் இறைமையை மீறும் செயலாகும்.
முஸ்லிம் பிரதிநிதிகள் இரட்டை வாக்கைக் கோரவேண்டும்
------------------------------------------
தவறு நடந்து விட்டது. எல்லை நிர்ணயக்குழு விடயத்தில் கவனமாக இருப்போம்; என்பது உண்மையில் இன்னும் ஆத்திரத்தை ஏற்படுத்துகின்றது. எல்லை நிரணயக்குழுவால் எத்தனை தொகுதிகளை உருவாக்கித்தர முடியும். எல்லை நிரணயக்குழு முக்கியமென்பது வேறுவிடயம். ஆனால் தற்போதைய பிரச்சினைக்குத் தீர்வு எல்லை நிர்ணயக்குழு அல்ல. மாறாக இந்த சட்டத்தைத் திருத்தி இரட்டை வாக்கை அறிமுகம் செய்தல்.
இது சாதிக்க முடியததல்ல. அரசாங்கத்திற்கு இருந்ததேவை தேர்தலை ஒத்திப்போடுவது. அதை சாதித்துவிட்டதுதானே! இந்த இரட்டை வாக்கை பாராளுமன்றத் தேர்தலுக்கு ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்தானே!
எனவே மாகாணசபைத் தேர்தலுக்கு அறிமுகப்படுத்தவதில் என்ன பிரச்சினை? எனவே 21 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுசேருங்கள். அரசிடம் பேசுங்கள். அரசு உடன்படாவிட்டால் இந்த அரசில் இருக்க முடியாது.
இந்த சட்டமூலத்துக்கு வாக்களித்ததை விமர்சிக்கும் சகோதர்ர்களே! இந்த நிமிடத்தில் இருந்து இந்த இரட்டை வாக்கிற்கான அழுத்தங்களைக் கொடுக்க உங்கள் பேனாமுனை எழுதட்டும்.
ஏதோ தவறு நடந்துவிட்டது; என்று ஓரத்தில் அமர்ந்துகொண்டு அழுவதற்கு நாம் ஒன்றும் ஊமைச் சமூகம் அல்ல. எழுதுங்கள்! எங்கள் வாக்குரிமையை மீண்டும் பெறும்வரை எழுதுங்கள்!!
உலமாக்களே பேசுங்கள்! பறிகொடுத்த உரிமையை மீண்டும் மீட்டுத்தரும்வரை பேசுங்கள்!!
இளைஞர்களே! முழங்குங்கள்!! இழந்த வாக்குரிமையை இழுத்துவரச் செய்யுங்கள்!!!
இந்த விடயத்தில் ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் ஸ்தாபனங்கள் களத்தில் இறங்குங்கள்! செய்யவேண்டியதை செய்யுங்கள்!!
முஸ்லிம்களுக்கு உரித்தான ஒரு ஆசனத்தைக்கூட நாம் விட்டுக்கொடுக்க முடியாது. இந்த ஒற்றை வாக்கின்மூலம் நம்மைப் பிரதிநிதித்துவம் இல்லாத சமூகமாக மாற்றமுனைந்த இந்த அரசின் வஞ்சகத்தனத்தை முறியடிப்போம்!!! இன்ஷாஅல்லாஹ்
#வை.எல்.எஸ்.ஹமீட்
#yls.hameed
#@இம்போட்மிரர்
#இம்போட்
#அரசியல்
#அறிக்கை
#தேர்தல்
#சட்டம்
#முஸ்லீம்கள்