மன்னார் மாவட்டத்துக்கு நேற்று (29.09.2017) விஜயம் செய்த அமைச்சர் ஜயவிக்ரம பெரேராவை முசலி பிரதேசத்துக்கு அழைத்துச் சென்ற அமைச்சர் றிஷாத், அங்குள்ள பாரம்பரிய கிராமங்களான கரடிக்குழி, மறிச்சுக்கட்டி, பாலைக்குழி போன்ற பிரதேசங்களில் வாழும் மக்களின் அவல நிலையை தெரியப்படுத்தினார்.
“மறிச்சுக்கட்டியில் உள்ள உப்பாற்றுப் பகுதியில் காலாகாலமாக மீன் பிடித்து வந்த இந்தப் பிரதேசத்து பூர்வீக மக்கள், தற்போது மீன் பிடிப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றன. அதே போன்று இந்தப் பிரதேசத்தில் அவர்களுக்குச் சொந்தமான பாரம்பரிய காணிகளில் விவசாயம் செய்யவும் அனுமதி மறுக்கப்படுகின்றது.
வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கும் வன பரிபாலன திணைக்களத்துக்கும் இந்தப் பிரதேசங்கள், வர்த்தமானி பிரகடனங்கள் மூலம் உரித்தாக்கப்பட்டுள்ளதாக கூறியே இந்த அநியாயத்தை அதிகாரிகள் தெடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பிரதேசம் இயற்கையில் நீர் வளம் குறைந்தது. எனவே இந்த மக்கள் விவசாயத்தை முழுமையாக நம்பி வாழ முடியாத சூழ் நிலையில் முன்னர் இந்த உப்பாற்றிலே கடற் தொழிலை மேற்கொண்டு தமது வாழ்வாதாரத்தை தேடினர்.
கால் நூற்றாண்டு காலமாக இடம் பெயர்ந்திருந்த மக்கள் மீண்டும் இந்த பிரதேசத்தில் மீழ் குடியேற்றங்களை மேற்கொண்டு வாழ்க்கை நடாத்தும் போது அவர்களுக்கான தொழில்களை மேற்கொள்வதில் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்;” என்று அமைச்சர் றிஷாத் குறிப்பிட்டார்.
“முசலிப் பிரதேசத்திலே தமிழர்கள், முஸ்லிம்கள் மட்டும் வாழவில்லை. சிங்கள மக்கள் வாழும் சிங்கள கம்மான என்ற இடமும் உண்டு. அந்த மக்களுக்கும் இதே பிரச்சினையே. அவர்களுக்கும் நாம் வீடுகளைக் கட்டி அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருக்கின்றோம். நீங்கள் இந்தப் பிரதேசத்தில் காணும் வீடுகள் அரசாங்கம் அமைத்துக் கொடுத்தவை என எண்ணி விடாதீர்கள். கட்டார் நாட்டின் நிறுவனங்களின் உதவியுடன் நாம் மேற்கொண்ட முயற்சியினால் கட்டிக் கொடுக்கப்பட்டவையே இந்த வீடுகள்” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மீள் குடியேறியுள்ள மக்களின் இவ்வாறான பிரச்சினைகளை அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடமும் நான் தெரியப்படுத்தியிருக்கின்றேன். எனவே இந்த பிரச்சினைகளுடன் தொடர்புடைய அமைச்சர் என்ற வகையில் நீங்கள் இவற்றுக்கு தீர்வு பெற்றுக் கொடுத்து இவர்கள் நிம்மதியாக வாழ வழி வகுக்க வேண்டும் எனவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
இவற்றை தெரிந்து கொண்ட அமைச்சர் இது தொடர்பில் உயர் அதிகாரிகளை அழைத்துப் பேசி உரிய தீர்வுகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இவற்றை தெரிந்து கொண்ட அமைச்சர் இது தொடர்பில் உயர் அதிகாரிகளை அழைத்துப் பேசி உரிய தீர்வுகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.