முர்சித் வாழைச்சேனை-
பாசிக்குடா பிரதேசத்தில் இருந்து வாழைச்சேனை நோக்கி வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களில் முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் வலப் பக்கமாக திரும்புவதற்கு முற்பட்ட வேளையில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இதனுடன் மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்துச் சம்பவத்தில் கிண்ணையடி நாகதம்பிரான் ஆலய வீதியைச் சேர்ந்த செல்வக்குமார் புவிதன் (வயது 18) என்பவர் உயிரிழந்துள்ளதுடன், மரணித்தவர் பயணித்த மோட்டர் சைக்கிளை செலுத்தி வந்த சுங்கான்கேணி வம்மியடி வீதியைச் சேர்ந்த யோகராசா கிரிசாந்தன் (வயது 19), மற்றைய மோட்டார் சைக்கிளில் வந்த பிறைந்துறையைச் சேர்ந்த மீன் வியாபாரி எம்.நவாஸ் ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
மரணமடைந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.