அகமட் எஸ். முகைடீன்-
விளையாட்டுத்துறை அமைச்சின் 290 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அம்பாறையில் அமைக்கப்படும் அம்பாறை மாவட்ட விளையாட்டுத் தொகுதியின் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஒப்பந்தகார நிறுவனத்திற்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் பணிப்புரைவிடுத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டு டிசம்பர் மாதம் நடுப்பகுதியளவில் திறந்துவைக்கப்படவுள்ள குறித்த மாவட்ட விளையாட்டுத் தொகுதியின் வேலைத்திட்டத்தை பார்வையிடுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் பிரதி தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையிலான அமைச்சின் உயர்மட்டக் குழு இன்று (28) சனிக்கிழமை நேரடிவிஜயம் செய்தபோது மேற்படி பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்விஜயத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயாணி விஜேவிக்ரம, விளையாட்டுத்துறை அமைச்சரின் செயலாளர் சம்பத் திசானாயக்க, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பி. வணிகசிங்க, அம்பாறை மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் சாமந்த விஜேசேகர, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், விளையாட்டுத்துறை அமைச்சின் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
அம்பாறை மாவட்ட விளையாட்டு தொகுதியில் அமையப்பெறும் உள்ளக விளையாட்டரங்கு, நீச்சல் தடாகம் மற்றும் பிரதான பார்வையாளர் அரங்கு உள்ளிட்ட மைதான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பார்வையிட்டு அவ்வேலைத்திட்டங்கள் எவ்வாறு பூரணப்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் அமைச்சின் தொழில்நுட்ப பிரிவினால் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் இதன்போது உகன திஸ்ஸபுர வித்தியாலய 14 வயதிற்குட்பட்ட மற்றும் 15 வயதிற்குட்பட்ட கரப்பந்தாட்ட பெண்கள் அணியினருக்கு கரப்பந்தாட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இப்பாடசாலையின் 14 வயதிற்குட்பட்ட கரப்பந்தாட்ட பெண்கள் அணியினர் பாடசாலைகளுக்கிடையிலான டி.எஸ்.ஐ. சுபர்ஸ்போர்ட்ஸ் சம்பியானாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.