எம்.வை.அமீர்-
தனியான உள்ளுராட்சிசபை கோரிக்கையை முன்வைத்து பல்வேறு போராட்ட வியூகங்களை வகுத்து போராடிவரும் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல், தலைமையிலான சாய்ந்தமருதின் பொது அமைப்புக்கள் மற்றும் வர்த்தக சங்கம் கடந்த 30 ஆம் திகதிமுதல் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதிவரை பூரண கடையடைப்புப் போராட்டத்தை ஆரம்பித்து நடைமுறைப்படுத்தி வருகின்றது.
போராட்டத்தின் இரண்டாம் நாளான 31 ஆம் திகதி கடையடைப்புப் போராட்டத்துக்கு மேலதிகமாக இறுக்கமான வீதிமறியல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு மாலை ஆறு மணியுடன் வீதி மறியல் போராட்டத்தை முடிவுறுத்தி திட்டமிட்டுள்ள போராட்டத்தின் இறுதி நாளான நவம்பர் முதலாம் நாள் புதிய வடிவில் மிகுந்த இறுக்கமாக நடாத்த திட்டமிட்டு வருகின்றது.
பள்ளிவாசலின் முற்றலில் கூடியுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உள்ளுராட்சிசபையை வலியுறுத்தும் வகையிலும் சட்ட ரீதியானதும் மார்க்க அடிப்படையிலுமான தொடரான சொற்பொழிவுகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை சம்மந்தப்பட்ட உயர் மட்டங்களுடன் தொடர்புகளும் மேற்கொள்ளப்பட்டும் வருவதாக செய்திகள் வருகின்றன.
வீதிமறியல் போராட்டத்தை நிறுத்துமாறு பொலிசார் பாரிய அழுத்தத்தையும் நீதிமன்றம் தடை உத்தரவையும் பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.