பைஷல் இஸ்மாயில் –
மழைகாலம் என்பதால் கொங்றீட் வீதி அமைக்கும் வேலைகளை மிகத் துரிதமாக முன்னெடுக்குமாறு வேண்டி ஒப்பந்தக்காரர்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதம அமைப்பாளர் ஏ.பி.அன்வர்டீன் பணிப்புரை விடுத்தார்.
கடந்த வாரம் ஆரம்பித்து வைத்த வீதிகளுக்கு கொங்றீட் இடும் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த வேலைகள பார்வையிடுவதற்காக இன்று (31) விஜயம் ஒன்றை மேற்கொண்டு பார்வையிட்டபோதே அவர் இப் பணிப்புரையினை விடுத்தார்.
இதன்போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
அக்கரைப்பற்று பிரதேசத்தில் அரசியல் அதிகாரங்களுடன் இருந்த அரசியல்வாதிகள் அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி விடயங்களில் கவனயீனமாக இருந்துவிட்டார்கள். இதனால் அக்கரைப்பற்று பிரதேசம் அபிவிருத்தி என்ற விடயங்களில் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது.
இதனால் அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள பல வீதிகள் கவனிப்பாரற்றுக் கிடந்தது. இதனை மாற்றியமைத்துத் தருமாறு மக்கள் என்னிடம் விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாக இந்த வீதிகளை கொங்றீட் வீதிகளாக மாற்றி அமைத்து வருகின்றேன்.
அத்துடன் இன்னும் பல வீதிகளை கொங்றீட் வீதிகளாக மாற்றியமைத்து தருமாறு மக்கள் என்னிடம் பல கோரிக்கைகளை முன் வைத்தும் வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளுக்கமைவாக அனைத்து வீதிகளும் கொங்றீட் வீதிகளாக மாற்றியமைத்துக் கொடுக்கப்படும் என்றார்.