பிரபா கணேசனின் கருத்தானது சிறுபான்மை இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் விசமக்கருத்தாகும் -ஷிப்லி பாறுக்

முன்னாள் பிரதியமைச்சரும், ஜனநாயக மக்கள் காங்கிரசின் தலைவருமான பிரபா கணேசன் அவர்கள் சிறுபான்மை மக்களுக்கு மத்தியில் பிளவினை ஏற்படுத்த முயல்வதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா ஷிபா பவுண்டேஷனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரோஹிங்யா அகதிகளின் மூலமாக இந்நாட்டில் முஸ்லிம்களின் விகிதாசாரத்தை அதிகரிக்க முயற்சிப்பதாக முன்னாள் பிரதியமைச்சரும், ஜனநாயக மக்கள் காங்கிரசின் தலைவருமான பிரபா கணேசன் அவர்கள் அண்மையில் வெளியிட்ட கருத்திற்கு தனது எதிர்ப்பினை தெரிவித்து வெளியிட்ட அறிக்கையிலேயே முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

மேலும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

தமது உடைமைகள், உறவுகளை இழந்து நிர்க்கதியாக இந்நாட்டிற்கு வந்திருக்கக்கூடிய அகதிகள் தொடர்பில் இன, மத, மொழி ரீதியான பாகுபாடுகளை மறந்து மனித நேயத்தினை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் சிறுபான்மை சமூகம் ஒன்றினை பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்பு வாய்ந்த அரசியல் தலைவர் ஒருவர் இத்தகைய சிறுபிள்ளைத்தனமான கருத்தினை வெளியிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

கடந்த கால யுத்தத்தின் போது இந்நாட்டிலுள்ள தமிழ் மக்களுக்கு இத்தகைய ஒரு நிலை ஏற்பட்ட போது இலங்கையிலிருந்து அகதிகளாக வெளியேறிச் சென்ற தமிழ் மக்களுக்கு உலகிலுள்ள அனைத்து நாடுகளும் அடைக்கலமளித்திருந்தது.

தற்போதுவரை உலகின் பல்வேறு நாடுகளில் இந்நாட்டு தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்ந்து வருவதோடு பல்வேறு உயர் பதவிகளையும் வகித்து வருகின்றனர்.

அந்த நாட்டு அரசாங்கங்கள் அன்று இவ்வாறு இன ரீதியாக சிந்திக்கவில்லை. மாறாக நிர்க்கதியான தமிழ் அகதிகளுக்கு அடைக்கலமளித்ததன் மூலம் தமது மனிதாபிமானத்தினை நிரூபித்திருந்தனர்.

இவ்வாறான பாதிக்கப்பட்ட சிறுபான்மை சமூகம் ஒன்றில் பிறந்த ஒருவர் இத்தகைய இன ரீதியான கருத்தினை வெளியிடுவதானது மிகவும் வேதனைக்குரியதாகும்.

அதுமாத்திரமல்லாது இந்நாட்டில் முஸ்லிம்கள் அளப்பரிய சேவையினை ஆற்றியிருக்கின்றார்கள். குறிப்பாக யுத்த காலத்தில் அவர்கள் ஆற்றிய சேவையினை யாராலும் மறக்க முடியாது.

இருந்தபோதிலும் பயங்கரவாத காலகட்டத்தின் போது ஒரு கட்டத்தில் வட, கிழக்கிலிருந்து முஸ்லிம்களை இனச் சுத்திகரிப்பு செய்வதற்கு முயற்சிக்கப்பட்டதோடு அதிகளவான உயிர்கள் மற்றும் பொருளாதார சேதங்களையும் முஸ்லிம்கள் சந்தித்திருந்தனர்.

அப்போதெல்லாம் வாய்மூடியிருந்த இத்தகைய அரசியல்வாதிகள் தற்போது வெறுமெனே 31 ரோஹிங்கிய அகதிகள் இலங்கைக்கு வருகைதந்தமை விகிதாசார அதிகரிப்புக்கு வழிவகுக்கின்றது என்று அபாண்டமாக கூறுவதானது ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

மேலும் இங்கு வந்திருக்கக்கூடிய அகதிகளை பொறுப்பேற்றிருப்பது UNHCR ஆகும். இவ்வமைப்பானது ஒரு போதும் அகதிகளுக்கு புகலிடம் ஏற்படுத்திக்கொடுப்பதில்லை. மாறாக அவர்களை உரிய முறையில் பராமரித்து அவர்களின் சொந்த நாட்டிற்கு மீளக் கொண்டுபோய் சேர்ப்பதே அவர்களின் கடமையாகும்.

இவ்வாறான விடயங்களை சரிவர புரிந்துகொள்ளாமல் இத்தகைய கருத்துக்களை வெளியிடுவதனூடாக இரு சிறுபான்மை சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதனை தவித்துக்கொள்ள வேண்டும்.

இந்த நாட்டின் சிறுபான்மை சமூகங்கள் ஒன்றிணைந்து நல்லாட்சி அரசாங்கம் ஒன்றினை ஏற்படுத்தி தற்போது சுமூகமான நிலை ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் சிறுபான்மை சமூகங்கள் சுதந்திரமான முறையில் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று காய் நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் இத்தகைய கருத்துக்களை வெளியிடுவதானது இரண்டு சிறுபான்மை சமூகங்களையும் பிரிக்கின்ற ஒரு நடவடிக்கையாகவே நாங்கள் பார்க்கின்றோம் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா ஷிபா பவுண்டேஷனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -