வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் கே.சுகிர்தரன் என்பவர் மூவரால் தாக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
கிண்ணையடி துறையடி வீதியில் மீள்குடியேற்ற வீட்டுத்தில் தாயொருவருக்கு வழங்கப்பட்ட வீட்டின் தாய் மரணமடைந்துள்ளதால் அந்த வீட்டினை மரமடைந்தவரின் பிள்ளைகள் இருவர் தங்களுக்கு வேண்டுமென தனித்தனியே உரிமை கோரிய நிலையில் இவர்களது பிரச்சனைகளை தீர்ப்பதற்கு கிராம சேவை அதிகாரியுடன் அபிவிருத்தி உத்தியோகத்தரும் சென்ற வேளை தாக்கப்பட்டுள்ளனர்.
மரணமடைந்த தாயின் மகனும், பேரனும், மற்றுமொரு உறவினருமாக மூன்று பேர் சேர்ந்து தாக்குதல் நடாத்தியதில் குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.