தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வதன் ஊடாகவே பிரச்சினையத் தீர்க்க முடியும். இதற்காக எடுக்கும் முயற்சிகளை அடிப்படைவாதிகள் யாராவது குழப்பினால் அதற்கான முழு பொறுப்பையும் அவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமைச்சரவை இணை பேச்சாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
தமிழ் மக்களை நசுக்கிவைக்க முற்பட்டால் அதற்கு தமிழ் மக்கள் பதில் வழங்கும் நிலை ஏற்படும். அடிப்படை வாதத்திற்குள் சென்று இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிப்பதானது மேலும் மோசமான இனவாதத்தையே தோற்றுவிக்கும் என்றும் கூறினார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அரசியலமைப்பு சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது வழிநடத்தல் குழுவின் அறிக்கை மாத்திரமே. இதில் உள்ள விடயங்களுக்கு எதிராகவே மகாசங்கத்தினர் உட்பட பலர் கருத்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். இது அரசியலமைப்பு வரைபு அல்ல. கலந்துரையாடலுக்கான யோசனை மாத்திரமே. பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைகளை ஒன்றிணைத்தே அரசியலமைப்புக்கான வரைபு தயாரிக்கப்பட வேண்டும்.
புதிய அரசியலமைப்பு தேவையில்லையென எவரும் கூறமுடியும். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டுள்ளோம். அதிகாரப் பகிர்வில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. மாகாண சபைகளுக்கும், மத்திய அரசாங்கத்துக்கும் இடையில் அதிகாரங்களைப் பகிர்வதில் பிரச்சினைகள் இருக்கின்றன. அதிகாரப் பகிர்வு தொடர்பில் தமிழர்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ அல்லது சிங்களவர்களுக்கோ ஏதாவது பிரச்சினை இருந்தால் அவற்றைத் தீர்த்துக் கொண்டு நாட்டை முன்கொண்டு செல்லவேண்டும்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் மத்தியில் சிலர் அடிப்படைவாத செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர். புலிகளின் ஆலோசகர்களாக இருந்தவர்கள் இதில் பங்கெடுத்திருப்பதுடன், இவர்களிடம் சில அரசியல் வாதிகளும் சிக்குண்டுள்ளனர். அதேபோல, தமிழ் மக்கள் மத்தியில் முற்போக்காகச் சிந்திக்கக் கூடிய பலரும் இருக்கின்றனர். ஐ.தே.க, சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி, ஹெல உறுமய என பல கட்சிகள் ஒன்றிணைந்து அரசியலமைப்பு மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இன்னமும் இறுதி வரைபு தயாரிக்கப்படவும் இல்லை. இறுதி வரைபு தயாரிக்கப்பட்ட பின்னரே அரசியலமைப்பு ஒற்றையாட்சியைக் கொண்டதாக இருக்க வேண்டுமா, பௌத்த மதத்தைக் கொண்ட நாடாக இருக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க முடியும்.
எனினும், இவற்றை பயன்படுத்தி சில இனவாதிகள் குழப்புவதற்கு முயற்சிக்கின்றனர். இதனைவிட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வழிகள் இருந்தால் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். தமிழ் மக்களுடன் இருந்து பேசி தீர்வொன்றைக் காண்பதற்கு இதுவே கிடைத்திருக்கும் இறுதிச் சந்தர்ப்பமாகும். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாட்டை முன்கொண்டு செல்வதா அல்லது தமிழ் மக்கள் இதற்கு எதிராக காண்பிக்கும் மாற்று வழிகளுக்கு இடமளிப்பதா என்பதை தீர்மானிக்க வேண்டும்.
தமிழர்களுக்கு எதனையும் கொடுக்கத் தேவையில்லை அவர்களுக்குப் பிரச்சினை இல்லையென்று சிலர் கூறுகின்றனர். எனினும் அவர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் பிரச்சினை உள்ளது. இலங்கையை ஒரு நாடாக வைத்துக் கொண்டு அதற்குள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கே நாம் பார்க்கின்றோம். இதுவே சிறந்த யோசனை. இதற்கு அவர்களும் இணக்கியுள்ளனர் என்றார்.
இப்பிரச்சினையை இந்த நேரத்தில் தீர்ப்பதா அல்லது தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் அவநம்பிக்கையை ஏற்படுத்தி எல்.ரி.ரி.ஈ அமைப்பைச் சேர்ந்த அடிப்படைவாதிகள் தமிழ் மக்களில் உள்ள முற்போக்காக சிந்திக்கும், ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் குழுவினர்களை அழித்து, மீண்டும் யாழ்ப்பாணத்தில் அடிப்படைவாதத்தை ஏற்படுத்தி நாட்டில் மீண்டும் தீயை ஏற்படுத்த வேண்டுமா என்பதையே கேட்கவேண்டியுள்ளது.
மாநாயக்க தேரர்களை சந்தித்த ஜனாதிபதி பல விடயங்கள் பற்றி விளக்கமளித்துள்ளார். புதிய அரசியலமைப்புக்கான அரசியலமைப்பு வரைபை தயாரிக்கும் போது அவர்களுடன் சென்று கலந்துரையாட முடியும். அவர்களின் ஒத்துழைப்பு அவசியம். அரசியலமைப்பை தயாரிக்கும் போது நாம் அனைவரும் சென்று அவர்களுடன் கலந்துரையாடுவோம். ஆனால் தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ளது அரசியலமைப்பு வரைபு அல்ல.
எனினும், அடிப்படைவாதிகள் சிலர் கோஷம் எழுப்பும்போது அவர்கள் பௌத்த சங்கத்தினரிடம் சென்று கேட்கின்றனர் ஏன் நீங்கள் இதுபற்றி கருத்துத் தெரிவிக்கவில்லையென. இதனைத் தொடர்ந்து அவர்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வதன் ஊடாகவே பிரச்சினையைத் தீர்க்க முடியும். இதனைவிட வேறு மாற்றுவழி எதுவும் எமக்குப் புரியவில்லை. இதனை குழப்பினால் இதற்கான பொறுப்பை அடிப்படைவாதிகளே பொறுப்பேற்க வேண்டும். நாட்டை முன்னேற்றுவதற்காகவே அரசியலமைப்பு தயாரிக்கப்படுவது. நாட்டை மீண்டும் பாதாளத்துக்குள் தள்ளுவதற்காக அரசியலமைப்பு தயாரிக்கப்படுவதில்லை.
தமிழ் மக்கள் வெளிநாடுகளில் சென்று சிங்களவர்கள் தீர்வு எதனையும் தருகின்றார்கள் இல்லையெனக் கூறி அடிப்படைவாத பிரசாரங்களை மேற்கொள்ளும் நிலைக்கே தள்ள முயற்சிக்கின்றனர். அவ்வாறான நிலைக்குச் செல்ல நாம் தயாராகவில்லை என்றும் கூறினார்.
thinakaran