அனா-
தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இருக்கின்ற எல்லை ரீதியான தகராறுகள், காணி ரீதியான பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்திற்கு பிரதியமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைக்கப்பட்ட வகுப்பறை கட்டடத்தை பார்வையிட்டதுடன், பாடசாலை அபிவிருத்திகள் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு நேற்று மாலை பாடசாலையில் இடம்பெற்ற போது உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லை ரீதியான தகராறுகள், காணி ரீதியான பிரச்சனைகள் இல்லை என்றால் யாரும் தேர்தலில் களமிறங்க தேவையில்லை என்று நான் நினைக்கின்றேன். நான் வழிகாட்டலுக்காகவே அரசியலுக்கு வந்தவன்.
கட்டடங்களை கட்டி பெயரும் புகழும் எடுக்க வேண்டிய விடயம் அல்ல. ஏதோவொரு காரியங்களை காட்டி உங்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக அல்ல. எண்ணங்கள் தூய்மையாக இருந்தால் விடயங்கள் எல்லாம் சிறப்பாக இருக்கும்.
இலக்கு இல்லாத கல்வியாக மாணவர்கள் இருக்கக் கூடாது. மாணவர்களை கல்வியில் முன்னேற்ற வேண்டும் என்ற அடிப்படையிலே நான் அரசியலுக்கு வந்தவன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருப்பவர்களில் ஒரு சிலரிடத்தில் தெளிவு இல்லை என்று சொன்னால் போராட்டம், அரசியல், பேச்சிலும், உண்மையிலும் வெற்றியளிக்க வில்லை என்பது தான் என்னுடைய கருத்தாக உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளவர்கள் அனைவரும் கல்வி கற்றவர்களாக மாற்றப்படுவோமாக இருந்தால் எங்களுக்குள் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் கிடையாது என்றார்.
பாடசாலை அதிபர் முஹைதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் எஸ்.லத்தீப், பிரதேச செயலாளர் எஸ்.றமீஸா, கணக்காளர் எஸ்.நௌபி, திட்டப் பணிப்பாளர் எஸ்.சிவலிங்கம், சூறா சபை தலைவர் எஸ்.தௌபீக் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.