ஏறாவூர் ஏஎம் றிகாஸ்-
மட்டக்களப்பு - ஏறாவூர் புளினதலாராம விகாரையில் வரலாற்றில் முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட கட்டின பெரஹர ஊர்வலம் 29 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப்பெரஹர ஊர்வலத்தில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருகைதந்திருந்த பெரும்எண்ணிக்கையிலான பௌத்த பக்தர்கள் கலந்துகொண்டனர். அத்துடன் அப்பிரதேச தமிழ் இந்து மக்களும் பங்கேற்றமை சிறப்பம்சமாகும்.
ஏறாவூர் எல்லை வீதியிலிருந்து ஆரம்பமான பெரஹர மட்டக்களப்பு- திருகோணமலை பிரதான வீதி மற்றும் புகையிரத நிலைய வீதி வழியாக சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரத்தைக்கடந்து புளினதலாராம விகாரையை அடைந்தது. அங்கு தொடர்ச்சியாக பௌத்த மத அனுஷ்டானங்கள் நடைபெற்றன.
கடந்தகால அசாதாரண சூழ்நிலையின் காரணமாக ஏறாவூர் புளினதலாராம விகாரையில் இவ்வாறான ஊர்வலங்கள் நடைபெறவில்லை. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சுமுகமான நிலையினையடுத்து அனைத்து இன மக்களும் தங்களது மத அனுஷ்டானங்களைச் செய்யக்கூடிய நிலை உருவாகியள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பெரஹரவினை பொதுமக்கள் வீதியோரங்களில் நின்று பார்வையிட்டனர்.