சமூக, அரசியல் பரப்பில் பன்முகப்பார்வையினைக் கொண்டிருந்த மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ;ரப் இலங்கை முஸ்லிம்களை அரசியல் ரீதியாக ஒன்றிணைப்பதில் வெற்றி கண்டிருந்தார். அவ்வெற்றிக்கு பங்காற்றும் மிகப்பெரும் சமூக, அரசியல் இயக்கமாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசினை அவர் வளர்த்தெடுத்தார். ஒன்று திரண்ட மக்கள் திரட்சியின் ஊடாக தேசிய அரசியலைத் தீர்மானிக்கின்ற மக்கள் சக்தியாக தனது கட்சியினை அவர் மாற்றியமைத்தார். இதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்தை வெளிக்கொண்டுவர அவர் எடுத்த முயற்சிகள் போற்றத்தக்கவை.
இலங்கையில் இன மோதல் வியாபித்திருந்தவேளையில் அம்மோதல் சிங்கள - தமிழ் சமூகங்களுக்கிடையிலானது என்றே விவாதிக்கப்பட்டது. அப்போதெல்லாம் இலங்கை இன மோதல் சிங்கள - தமிழ் - முஸ்லிம் ஆகிய மூன்று தேசியங்களை உள்ளடக்கிய 'முப்பரிமாண மோதல்' என்று அஷ;ரப் வாதிட்டார். இதன் மூலம் தனது சமூகத்தின் எதிர்கால இருப்பினைப் பாதுகாக்கும் முயற்சியில் அவர் மும்முரமாக ஈடுபட்டார்.
இத்தகையதொரு விரிந்த பார்வையில் சமூக அசைவியக்கத்தினை மர்ஹூம் கலாநிதி எம்.எச்.எம்.அஷ;ரப் அவர்கள் உருவகித்துக் கொண்டதன் வெளிப்பாடுதான் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உதயமாகும். இப்பல்கலைக்கழக உருவாக்கத்தின் மூலம் அவர் கண்ட கனவுகள் படிப்படியாக நடந்தேறிவருவது எமக்கு மிகுந்த மன மகிழ்ச்சியினைத் தருகின்றது. எனினும் ஒரு பல்கலைக்கழகம் என்றவகையில் இப்பல்கலைக்கழகம் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்கள் நிறையவே இருக்கின்றன.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உருவாக்கம் பெற்றபோது அதற்குப் பின்னால் இருந்தது போன்ற சமூக, அரசியல் தலைமைத்துவத்தினை இன்று காணமுடியாதுள்ளது. இன்று முஸ்லிம்களின் தலைமைத்துவம் பிளவுபடுத்தப்பட்டு, பிராந்திய தலைமைத்துவ வாதத்திற்குள் அது வலிந்து இழுக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய அரசியலில் நாம் பெறவேண்டிய பங்கினை இழக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பில் முஸ்லிம்களின் நிலை, சமூக அரசியல் பிரதிநிதித்துவத்தினைத் தக்கவைத்துக்கொள்ளுதல், அதிகாரப் பகிர்வில் முஸ்லிம்களின் வகிபங்கு போன்ற பல்வேறு விடயங்களில் இன்றைய முஸ்லிம் தலைமைத்துவங்கள் தெளிவற்ற நிலையிலேயே உள்ளன. அரசியலமைப்புக்கான 18வது திருத்தம், 20வது திருத்தச் சட்டம் என்பவற்றில் எமது தலைவர்கள் இழைத்திருக்கும் வரலாற்றுத் தவறுகள் இதனையே புலப்படுத்துகின்றன.
எனவேதான் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்தின மக்களும் நிம்மதிப் பெருமூச்சுடன் வாழத்தக்க அரசியலை எமது சமூக, அரசியல் தலைமைத்துவங்கள் முன்னிறுத்திச் செயற்பட வேண்டும். சமூக விடயங்களில் ஒன்றுபட்டு எமது தனித்துவத்தினையும் நலன்களையும் பெற்றுக்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும். பிராந்திய அரசியல் அதிகாரச் சிந்தனையினைக் கைவிட்டு தேசிய அரசியலில் முஸ்லிம்களின் வகிபங்கினை மீள் நிலைநிறுத்த வேண்டும். அதற்கான புலமைசார் தளத்தினை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும் என்பதே எமது அவா.
(இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபகர் தினத்தினையொட்டி அப்பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான சங்கத்தினால் வெளியிடப்பட்ட செய்தி)