ஏ.எஸ்.எம்.ஜாவித்-
இவ்வருடம் யாழ்ப்பாணத்தில் இடம் பெறவிருக்கும் தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பாடசாலை மாணவர்கள் மத்தியில் தேசிய மீலாத் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
மாகாண மட்டப் போட்டிகளை அந்தந்த மாகாணங்களில் நடாத்துவதற்கான பொறுப்புக்களை திணைக்களம் ஒவ்வொரு மாகாணங்களிலும் உள்ள மாகாணக் கல்வித் திணைக்களங்களுக்கு கொடுக்கப்பட்டு முதல் இடத்திற்கு தெரிவு செய்யப்படுபவர்களை திணைக்களத்தால் கொழும்பில் நடாத்தப்படும் தேசியமட்ட இறுதிப் போட்டிக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இந்தவகையில் கொழும்பு, கம்பஹா, களுத்தறை மாவட்டங்களை உள்ளடக்கிய மேல்மாகாணப் போட்டிகளை மேல்மாகாணக் கல்வித் திணைக்களம் 30ஆம் மற்றும் 1ஆம் திகதிகளில் இரண்டுநாள் போட்டிகளை கொழும்பு-12 பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள பாத்திமா முஸ்லிம் மகளீர் கல்லூரியில் மேல்மாகாண கல்விப் பணிமணையின் ஆசிரிய ஆலோசகர் எம்.ஐ.எம். ஹமீடின் வழி நடத்தலில் தமிழ் மொழி மூல பாடசாலைகளின் பணிப்பாளர் ஆர். உதயகுமார் தலைமையில் நடைபெற்;றன.
போட்டிஆரம்பநிகழ்வுகளில் மேல்மாகாண முஸ்லிம் அதிபர்களின் சங்கத்தின் செயலாளர் அதிபர் கே.எம்.எம்.நாளிர், கொழும்பு மாவட்ட முஸ்லிம் அதிபர்களின் சங்கத்தின் தலைவர் எம்.எல்.எம். யூசுப், முஸ்லிம் சமயபண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி நூறுல் ஐன், பாடசாலையின் பொறுப்பாசிரியர் திருமதி ஏ.எம்.எப்.றுமைஸா உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது வயது அடிப்படையில் கட்டுரை, கவிதை, சிறுகதை, பேச்சு, நாடகம், பக்கீர் பைத், கதம்ப நிகழ்வுகள், கிராத், குர்ஆன் மனனம், கதீஸ், அரபு எழுத்தணிக் கலை, ஹஸீதா உள்ளிட்ட போட்டிகளில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களின் முடிவுகளை மாகாண கல்வித் திணைக்களம் உத்தியோக பூர்வமாக குறித்த பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கவுள்ளதுடன் ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் இடத்தைப் பெறுபவர்கள் தேசிய ரீதியில் நடாத்தப்படும் இறுதிப் போட்டிக்கு அழைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.