எம்.ரீ. ஹைதர் அலி-
பிள்ளைகளினுடைய கல்வி, ஒழுக்கம், திறன் என்பனவற்றினை வளப்படுத்துவதற்காக அர்ப்பணிப்போடு செயலாற்றக்கூடியவர்கள் ஆசிரியர்களாவர். அவர்களினுடைய வழிகாட்டுதல் ஒவ்வொரு மாணவர்களின் வாழ்விலும் மிகவும் இன்றியமையாததாகும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா ஷிபா பவுண்டேஷனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
மட்/மம/பூநொச்சிமுனை இக்றாஃ வித்தியாலயம் ஏற்பாடு செய்த சர்வதேச சிறுவர் மற்றும் ஆசிரியர் தின விழாக்கள் 2017.10.06ஆந்திகதி கல்லூரியின் முதல்வர் ரசூல் அவர்களின் தலைமையில் பூநொச்சிமுனை கடற்கரை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நொச்சிமுனை இக்றாஃ வித்தியாலயத்தின் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா ஷிபா பவுண்டேஷனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
மேலும் எமது சிறார்களுக்கு கல்வியினை மாத்திரமன்றி மார்க்க விழுமியங்களையும் கற்றுக்கொடுப்பதற்கு ஆசிரியர்களோடு பெற்றோர்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துத் தரப்பினர்களும் துணைநின்று செயலாற்ற முன்வர வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் சிறுவர்களின் பாதுக்கப்புக்காக எமது நாடு உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பல விஷேட சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் தொடர்ச்சியாக பல இடங்களில் சிறுவர் உரிமைகள் மீறப்பட்டும், அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் இடம்பெற்றுமே வருகின்றது.
எனவே இவ்வாறான விடயங்களை தடுத்து நிறுத்துவதற்கு சட்டத்தினூடாக மாத்திரமன்றி சமூகத்தினையும் உரிய விதத்தில் விழிப்பூட்ட வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது என தனது உரையில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா ஷிபா பவுண்டேஷனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.