மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல் மற்றும் புதிதாக ஸ்தாபித்தல் தொடர்பான கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் பெற்றுக் கொள்வதற்கான பத்திரிகை அறிவித்தல் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் காரியாலயத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.
அதற்கமைவாக காத்தான்குடி நகர சபையை பிரித்து மாநகர சபை மற்றும் பிரதேச சபை ஒன்றை நிறுவுதல் தொடர்பாக ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபித்தல் மற்றும் தரமுயர்த்துதல் தொடர்பான குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முன்மொழிவுகளுக்கு மக்களது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் அக்குழு கோரியிருந்தது.
அதனடிப்படையில் காத்தான்குடி நகர சபையை பிரித்து மாநகர சபை மற்றும் பிரதேச சபை ஒன்றை நிறுவுதல் தொடர்பான கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சார்பில் முன்னாள் காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் Jp, முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் றவூப் ஏ மஜீட் மற்றும் ஏ.எல்.ஸெட்.பஹ்மி ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை (24) இத் திட்டங்களுக்கு பொறுப்பான மட்டக்களப்பு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தின் செயலாளர் அவர்களிடமும் கையளித்தனர்.
இதில் காத்தான்குடி மாநகர சபைக்கான புதிய பத்து வட்டாரங்களை கொண்டதான முன்மொழிவும் காத்தான்குடி பிரதேச சபைக்கான புதிய ஒன்பது வட்டாரங்களை கொண்டதான முன்மொழிவும் இவ் உள்ளடக்கத்தில் உள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.