அகமட் எஸ். முகைடீன்-
சாய்ந்தமருது டொப் ஜெ டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் பிரதான அனுசரணையில் மருதமுனை எவரெடி விளையாட்டுக்கழகம் நடாத்தும் எவரெடி வெற்றிக்கிண்ண மின்னொலி உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு மருதமுனை மசூர் மௌலான விளையாட்டரங்கில் இன்று (13) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
எவரெடி விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளருமான எம்.ஐ.எம். உவைஸ் தலைமையில் நடைபெற்ற இவ் ஆரம்ப போட்டி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ், கௌரவ அதிதிகளாக சாய்ந்தமருது டொப் ஜெ டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஏ.எல்.எம். ஜபீர், முன்னாள் கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்களான ஏ.ஆர். அமீர், எம்.எஸ். உமர் அலி, அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் ஏ.எம். இப்றாஹிம், மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் ரி. காந்தன் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
16 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றும் இச்சுற்றுப்போட்டியின் ஆரம்ப போட்டியில் சவளைக்கடை அமீர் அலி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டுக் கழகத்தினர் விளையாடினர்.
இவ் ஆரம்ப போட்டியில் முதல் பாதியில் 3 கோல்களையும் இறுதிப் பாதியில் 3 கோல்களையும் புகுத்தி 6:0 என்ற கோல் கணக்கில் மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றது.
மருதமுனை மசூர் மௌலான விளையாட்டு மைதானத்தில் இரவுநேர விளையாட்டுப்போட்டிகளை நடத்தும்வகையில் நிரந்தர மின்னொலி கம்பங்களை அமைத்துத் தருவதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் இதன்போது உரையாற்றுகையில் வாக்குறுதியளித்தார்.
