



ஊடக பிரிவு-
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட்டின் முழு முயற்சியினால் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தனவந்தர்களின் உதவியுடன் வறுமைக்க்கோட்டின் கீழ் வாழும் அடையாளங்காணப்பட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மலசல கூடங்களை நிர்மாணித்துக்கொடுப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று 15.10.2017 ஏறாவூரில் இடம்பெற்றது.
அத்துடன் இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான அலிசாஹிர்மௌலானா மற்றும் சல்மான் ஆகயோரும் பங்கேற்றனர்.
இதற்கு முன்னர் கடந்த செப்டம்பர் மாதம் இலங்கைகு விஜயம் செய்த ஐக்கிய அரபு இராச்சிய தனவந்தர்கள் முன்னாள் கிழக்கு முதலமைச்சருடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பல குடும்பங்களை நேரில் சென்று சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை நேரில் கேட்டறிந்தனர்.
இதனடிப்படையில் மக்களின் பிரதான பிரச்சினையாக காணப்பட்ட மலசலகூட வசதியின்மையால் பல்வேறு பட்ட குடும்பங்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றமையை கருத்திற்குகொண்டு மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மலசல கூடங்களை நிர்மாணித்துக்கொடுக்க முன்வந்தனர்.
இதனடிப்படையில் வாழைச்சேனை ,ஏறாவூர் ரிதீதென்னை மற்றும் தமிழ் மக்கள்செறிந்து வாழும் பகுதிகளிலும் இந்த மலசல கூடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.