வட்டி வாட்டி வைக்க
செட்டி குட்டி ஆள
செத்துப் போனார்கள்-அந்த
முத்துப் பிள்ளைகள்
கந்து வட்டி என்பது
வந்து கட்டி வாட்ட
நொந்து போன அந்த
தந்தை தாய் பாவம்
என்னையா செய்யும்
எண்ணையை ஊற்றி
தீக்குளித்துச் செத்தார்கள்-சின்னப்
பூக்களுடன் சேர்த்து
நெல்லையில் நடந்த அந்தப்
பிள்ளையின் சாவு நமக்கு
சொல்லுகின்ற செய்திகளில்
உள்ளம் நொறுங்குகிறது.
மாட்டைக் காப்பதற்கு
காட்டுகின்ற அக்கறையை
நாட்டைக் காப்பதற்கு
காட்டி ஆண்டிருந்தால்
அறியாத பிஞ்சுகள்
கரியாகி இறக்குமா?
வட்டியில்லா வங்கி முறை
கட்டி எழுப்பியிருந்தால்
சுட்டெரிக்கும் இத் தீயால்
சுட்டிச் செல்லம் சாகுமா
வட்டிக்குக் கடன் வாங்கி
கட்டிடங்கள் கட்டி அதை
கட்டிக் காப்பவரே
கட்டளையை மறக்க வேண்டாம்.
செலுத்துகின்ற வட்டி
கொளுத்திடலாம் உங்களின்
கொழுத்த செல்வங்களை
கொண்ட சொத்துக்களை
இஸ்லாம் தடை செய்த
இந்த வட்டி முறை
எந்தத் தேசத்திலும்
இல்லாது போகட்டும்
இன்னுமொரு பிள்ளை
எரியாது போகட்டும்