வாழைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கறுவாக்கேணி பொலிஸ் நிலைய சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை புதிதாக அமைக்கப்படும் பஸ் தரிப்பிடம் தொடர்பில் இரு சமூகங்களுக்குமிடையில் இடம்பெற்ற போராட்டம் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற தடை உத்தரவிற்கமைய ஏழு மணித்தியாலமாக இடம்பெற்ற போராட்டம் முடிவுக்கு வரப்பட்டது.
இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியை தமிழ், முஸ்லிம் இரு சமூகத்தினரும் ஏழு மணி நேரமாக மறித்து போராட்டத்தினை மேற்கொண்டு வந்தனர். இதன் காரணமாக மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் வீதிப் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது.
கறுவாக்கேணி பொலிஸ்; நிலைய சந்தியில் புதிதாக பஸ் தரிப்பிடம் அமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பன்முகப்படுத்தப்பட்ட இரண்டு இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் மூலம் அதற்கான அடிக்கல்லினை நேற்று வியாழக்கிழமை நாட்டி வைத்தார்.
வெள்ளிக்கிழமை பஸ் தரிப்பிடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டதை எதிர்த்து இது தங்களுக்குரிய முச்சக்கர வண்டி நிறுத்துமிடம் என்று கூறி முஸ்லிம் முச்சக்கர வண்டி அமைப்பினர் அடிக்கல் நாட்டிய இடத்தை மூடி அதன் மேல் முச்சக்கர வண்டியினை தரித்து நிறுத்தி வைத்திருந்த நிலையில் தமிழ், முஸ்லிம் சகோதரர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இரு இனங்களுக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் தமிழ் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்நிலையில் வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் த.தயாரத்ன தலைமையில் வாழைச்சேனை, கல்குடா பகுதியில் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு இனமுறுகளை தடுத்து வந்தனர்.
குறித்த இடத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்- எனது பன்முக நிதியில் அமைக்கப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் உள்ள பஸ் தரிப்பிடத்தை முஸ்லிம் சகோதரர்கள் தடுத்த நிலையால் இரு இனங்களுக்குமிடையில் இனமுறுகல் நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இப்பிரச்சனை தீர்ப்பதற்கு வாழைச்சேனை பொலிஸாரின் உதவியை நாடுவதுடன்;, அவர்கள் இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவை கோரியுள்ளதாக தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸார் புதிதாக அமைக்கப்படும் பஸ் தரிப்பிடத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கான தடை உத்தரவை கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் எதிர்வரும் திங்கட்கிழமை வரை கட்டுமான வேலைகளை நிறுத்துமாறு தடை உத்தரவு வழங்கியதற்கிணங்க இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.