அம்பாறை மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளார்-அமாரா ஸஹ்லா



எஸ்.அஷ்ரப்கான்-

ரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் மாணவி எம்.ஜே. அமாரா ஸஹ்லா (191- புள்ளிகள்) அம்பாறை மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளார்.

இவர் கல்முனை நகர மண்டப வீதியைச் சேர்ந்த மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்களான எஸ்.எச்.எம்.ஜர்மின், ஏ.நஸ்வின் ஆகியோருடைய சிரேஷ்ட புதல்வியாவார்.

அம்பாறை மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் (தமிழ் மொழி மூலம்) மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ள இம்மாணவி ஒரு விஞ்ஞானியாக வருவதே தனது எதிர்கால இலட்சியமாக கொண்டுள்ளார்.

இம்மாணவி எம்.ஜே. அமாரா ஸஹ்லா பின்வருமாறு குறிப்பிடுகின்றார்,

நான் இவ்வாறு புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை புரிவதற்கு அருள்பாலித்த படைத்தவனுக்கு முதலில் நன்றி கூறுகின்றேன். அடுத்ததாக எனது பெற்றோர் எனக்கு வழங்கிய அறிவுரைகள் ஒத்துழைப்புக்கள்தான் என்னை இவ்வாறு வெற்றிபெற வைத்துள்ளது. குறிப்பாக எனது தாய் எனக்கு ஒரு நண்பியாக இருந்து என்னை வழிப்படுத்தினார். அதுபோல் எனக்கு கற்றுத்தந்த பாடசாலை ஆசிரியர்களும் என்மீது அதிக அக்கறை காட்டினார்கள். இவர்கள் அனைவரும் உட்பட அதிபர் அவர்களுக்கும் நான் நன்றிகளை கூறுகின்றேன்.

எதிர்காலத்தில் ஒரு விஞ்ஞானியாக வர வேண்டும் என்பதே எனது இலட்சியமாகும். நான் ஒரு டாக்டராகவோ அல்லது சுகாதாரத்துறை சார்ந்த உயர்பதவிக்கோ வருவற்கு விரும்பவில்லை என்றும் கூறியதோடு அதற்கான காரணமாக தனது பெற்றோர்கள் முழு நேரமாக ஓய்வில்லாமல் சேவை செய்கின்ற ஒரு தொழிலில் இருக்கின்றார்கள். அதனால்தான் நான் மாற்றுத் துறை ஒன்றில் முன்னேறி நாட்டுக்கு சேவை செய்கின்ற ஒரு விஞ்ஞானியாக வருவதற்கு ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார்.

அமாரா ஸஹ்லாவின் தந்தை எஸ்.எச்.எம். ஜர்மின் குறிப்பிடும்போது,

எனது பிள்ளை புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடம்பெற்றிருக்கிறார். இதற்கு முதல் படைத்தவனுக்கு நாம் நன்றி கூறுகின்றோம். அடுத்தது எனது மனைவியின் முயற்சியும் முக்கிய காரணம். அதுபோல் கற்பித்த ஆசிரியர்களையும் மற்றும் வழிநடாத்திய அதிபரையும் மறக்க முடியாது.

எங்கள் பிள்ளைக்கு புலமைப்பரிசில் பரீட்சை படிப்பு என்பதற்காக நாங்கள் எவ்வித வற்புறுத்தல்களையும் செய்யவில்லை. எனது பிள்ளையை சுதந்திரமாக விட்டிருந்தோம். பிள்ளையின் விருப்பப்படியே தானாக பல்வேறு கல்வி, பொது அறிவு விடயங்களை தேடி ஆராய்ந்தார். தானாகவே படிக்கின்ற சுயமுயற்சி எனது மகளிடம் காணப்பட்டது. குறிப்பாக எனது மனைவி பிள்ளையை தட்டிக்கொடுத்தது மாத்திரம்தான். அவர் தானாகவே இயங்கினார். சுற்றாடலுடன் தொடர்புபட்ட மற்றும் பல்வேறு விடயங்களை பாட்டு, கவிதை போன்ற வடிவில் மனனமிட்டு வைத்துக்கொள்வார். அதுபோல் ஒவ்வொரு நாளும் இரவு வேளையில் ஓரிரு மணித்தியாலங்கள் மட்டுமே படிப்பார். இரவு 9 மணியளவில் துாங்கிவிடுவார். மீண்டும் அதிகாலையில் எழுந்து ஒரு மணித்தியாலம் படிக்கும் வழக்கம் எனது மகளிடம் இருந்தது.

மேலதிகமாக பாடசாலைக்குச் செல்வதற்கு ஆயத்தமாகும்போதே பத்திரிகைக் கண்ணோட்டத்தை தவறாமல் பார்ப்பார். அதுபோல் சுற்றிவரும் பூமி போன்ற கல்வி மற்றும் பொது அறிவு தொடர்பான நிகழ்ச்சிகளை தவறாமல் பார்ப்பார். அது தவிர தனியார் கல்வி என்று ஒன்றைத்தவிர வேறு எங்கும் செல்லவுமில்லை. அதற்காக அதிக அக்கறை எடுக்கவுமில்லை. குறிப்பாக ஒரு விடயத்தை நான் இங்கு குறிப்பிட வேண்டும். எனது மகளுக்கு விளங்காத தெளிவில்லாத சில விடயங்களை வெண் பலகையில் எழுதி தனது கற்கும் அறையினில் காட்சிப்படுத்தி எனது மனைவி வைப்பார். அதனை அன்றாடம் காண்கின்றபோது குறித்த விடயம் மகளுக்கு விளங்குவதாக கூறுவார். இவ்வாறு தனது அதிக விருப்புடனேதான் அவர் கல்வி கற்றார். அத்துடன் சித்திரம் வரைதல், கைப்பணி பொருட்கள் செய்தல் போன்ற இதர செயற்பாடுகளிலும் அதிக ஆர்முள்ளவர் எனது மகள்.

பெற்றோர்களாகிய நாங்கள் எங்கள் மகளுக்கு ஒரு ஏணியாகவே செயற்பட்டோம். தட்டிக் கொடுத்தோம். அதிக பிரயத்தனம் நாம் எடுக்கவில்லை. ஆனால் சிறந்த அடித்தளம் ஒன்றை ஆரம்பத்திலேயே ஏற்படுத்த வேண்டும் என்பதில் கவனமாகவும், பிள்ளையின் விருப்பத்துடனும் செயற்பட்டோம். இதனுாடாக இந்த வெற்றியை அடைய முடிந்தது.

அதுபோல் இறுதியாக என்போன்ற பெற்றோருக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தாலும் சரி, அதற்கான புள்ளிகளை விட குறைந்திருந்தாலும் தங்களது பிள்ளைகள் வெற்றியாளர்களே என்ற மனோநிலையை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

ஒரு பிள்ளையை இன்னொரு பிள்ளையுடன் ஒப்பிட வேண்டாம். பிள்ளைகளுக்கும் அந்த மனோநிலையை ஏற்படுத்துங்கள். பிள்ளைகளை அளவிடுவதற்கு இப்புலமைப்பரிசில் பரீட்சை மட்டும் ஒரு அளவுகோலல்ல. இதைவிட சிறந்த க.பொ.த சாஃதரம், கா.பொ.த உஃதரம் போன்ற துறைகளில் அவர்கள் பிரகாசிக்க வழியை ஏற்படுத்துங்கள். ஒவ்வொரு பிள்ளைக்கும் ஏதோ ஒரு துறையில் சிறந்தவர்களாக இருப்பர். அதனை இனங்கண்டு அவர்களுக்கு ஏற்றாற்போல் வழியை காட்டிவிடுங்கள்.

புலமைப்பரிசில் பரீட்சையில் பின்னடைந்த ஒரு பிள்ளை இந்த சவாலுக்கு முகம் கொடுத்துள்ளதே அதுவே பெரிய வெற்றிதான். இதுபோன்ற பல்வேறு சவால்களை அந்த பிள்ளைகள் சிறப்பாக எதிர்கொள்வதற்கான அடித்தளத்தை பெற்றோர்களாகிய நாங்கள் ஏற்படுத்த வேண்டும். பரீட்சையில் குறைந்த எந்த பிள்ளையையும் நாம் குறைவாக மதிப்பிடாமல் தட்டிக்கொடுக்க வேண்டும். ஊக்குவிக்க வேண்டும் என்பதே எனது மேலான ஆலோசனையாகும் என்றும் கூறுகிறார்.

கல்முனைக் கல்வி வலயத்தின் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் இம்முறை 22 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -