சாய்ந்தமருது வைத்தியசாலையை தரமுயர்த்தும் விடயத்தில் பைஸல் காசிம் முரண்பாடு; ஷூரா சபை அறிக்கை

சாய்ந்தமருது வைத்தியசாலையை தரமுயர்த்தல் தொடர்பாக சுகாதார பிரதி அமைச்சர் பைஸல் காசிம் தெரிவித்துள்ள கருத்துக்கள் முரண்பாடானவை என சாய்ந்தமருது ஷூரா சபையின் தலைவர் டொக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் இருந்து மூன்று கிலோ மீட்டர் கிட்டிய தூரத்தில் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை இருப்பதனால் அதனை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்த முடியாது என்று சுகாதார பிரதி அமைச்சர் பைஸல் காசிம் தெரிவித்ததாக வெளிவந்த பத்திரிகைச் செய்திகள் தொடர்பாக எமது சாய்ந்தமருது ஷூரா சபை சில விடயங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

1952 ஆம் ஆண்டில் சாய்ந்தமருதில் மத்திய மருந்தகம் திறக்கப்பட்டது. இம்மருந்தகம் 1950 களில் இப்பிரந்தியத்திலேயே மிகப் பிரபலமாக விளங்கியது. பின்னர் 1979 ஆம் ஆண்டில் இங்கு மகப்பேற்று மருத்துவமனை ஸ்தாபிக்கப்பட்டது. கலவரச் சூழலிலும் இப்பிராந்தியத்திலே இங்குதான் அதிக மகப்பேறு இடம்பெற்றது. 1982 ஆம் ஆண்டில் இங்கு நோயாளர் விடுதிகள் அமைக்கப்பட்டு இவ்வைத்தியசாலை சுற்றயற்கூறாக தரம் உயர்த்தப்பட்டு- பின்னர் 1990 களில் மாவட்ட வைத்திய சாலையாக தரம் உயர்த்தப்பட்டது.

இவ்வளவு அபிவிருத்தியும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையிலிருந்து மூன்று கி.மீ. கிட்டிய தொலைவுக்குள் இருந்த சாய்ந்தமருதில்தான் நடைபெற்றன.

அதேவேளை சாய்ந்தமருது வைத்தியசாலையின் வளர்ச்சியையும் அதன் சேவையினையும் கண்ணுற்ற கல்முனைக்குடி மக்கள் தங்கள் ஊரிலும் ஒரு மகப்பேற்று மருத்துவமனை வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர். இதன் பயனாக 1988 ஆம் ஆண்டில் கல்முனைக்குடியில் ஒரு மகப்பேற்று மருத்துவமனை திறக்கப்பட்து. அதுவே தற்போதய அஷ;ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையாகும்.

இம்மருத்துவமனை சாய்ந்தமருது வைத்தியசாலைக்கும் கல்முனை வடக்கு வைத்தியசாலைக்கும் இடையில் மிகக் கிட்டிய துரத்தில் இருந்தபோதும் யாரும் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தினால் முற்றாக அழிவடைந்த சாய்ந்தமருது வைத்தியசாலையை மீளக்கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றபோது சாய்ந்தமருதில் வைத்தியசாலை ஒன்று அவசியமில்லை என்ற கோசம் எழும்பியது. அத்துடன் புதிய கட்டுமானங்களைத் தடுப்பதற்குப் பல சதி முயற்சிகள் நடைபெற்றன. அதேவேளை, சாய்ந்தமருது வைத்தியசாலையின் சேதமடைந்த கட்டடங்களை சுகாதார திணைக்களத்தின் வேறு தேவைகளுக்கு பாவிக்கவும் அந்த காணியில் வேறு கட்டடங்கள் கட்டுவதிலும் முனைப்புக் காட்டப்பட்டது.

இப்படியான சூழ்ச்சிகளுக்கு மத்தியில் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா அவர்களின் பங்களிப்பின் மூலமே தற்போதைய வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டது. இவ்வாறு கட்டட தொகுதிகள் அமைக்கப்பட்டதன் பின்னர் வைத்தியசாலையை சிறந்த முறையில் நடத்துவதற்கு அரசியல் தலைமைகளும் சுகாதார திணைக்களமும் ஒத்துழைக்கவில்லை. மாறாக இங்குள்ள வளங்களைப் பங்குபோடுவதிலேயே குறியாக இருந்தனர்.

இந்நிலையில் இவ்வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாகத் தரம் உயர்த்த வைத்தியசாலை அபிவிருத்தி சபை முயற்சியெடுத்து- 2011 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண அமைச்சரவையின் அனுமதியும் பெறப்பட்டது. ஆயினும் அந்த அமைச்சரவை தீர்மானம் இதுவரை அமுல் நடத்தப்படவில்லை. குறைந்தபட்சம் பிரதேச வைத்தியசாலை "A" தரத்திற்காவது உயர்த்தப்படவில்லை என்பது வேதனையான விடயம்.

அதேவேளை இதனுடன் கிழக்கு மாகாண அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்ட வேறுபல வைத்தியசாலைகள் தற்போது ஆதார வைத்தியசாலைகளாக தரமுயர்த்தப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றன.

எவ்வாறாயினும் சாய்ந்தமருது வைத்தியசாலையின் அபிவிருத்திக்கான மாற்று ஒழுங்காக இவ்வைத்தியசாலையில் கண், சிறுவர், மகப்பேறு, விபத்து, முறிவு போன்றவற்றுள் ஏதாவது ஒரு விஷேட வைத்தியப்பிரிவை ஏற்படுத்துவது தொடர்பாக வைத்தியசாலை அபிவிருத்தி சபையும் ஊரின பல முக்கியஸ்தர்களும் இணக்கமாக இருந்தனர். எனினும் இதனை வேறு வைத்தியசாலையின் ஒரு உப பிரிவாக மாற்றி இங்குள்ள வளங்களை பங்குபோடுவதில் மட்டும் அக்கறை காட்டும் செயற்பாடுகளுக்கு உடன்பட இவ்வூர் மக்கள் தயாரில்லை.

எனவே எதிர்காலத்தில் சாய்ந்தமருது வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய உளப்பூர்வமாக விரும்பும் அரசியல் தலைமைகள் மேற்படி விடயங்களைக் கவனத்தில் கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க முன்வர வேண்டும்" என்று சாய்ந்தமருது ஷூரா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -