அப்துல்சலாம் யாசீம்-
சிங்கப்பூர் -சுர்பானா நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் கிழக்கு மாகாண ஆளுனருக்கிடையிலான விஷேட கலந்துரையாடல் இன்று (04) கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தலைமையில் நடைபெற்றது.
திருகோணமலையை அபிவிருத்தி செய்வதற்காக பாரிய அபிவிருத்தி திட்டத்தின் சாரம்சங்களையும் அத்திட்டத்தை தயாரிக்கும் வரையறையை தௌிவு படுத்தும் விதத்திலேயே இச்சந்திப்பு இடம் பெற்றது.
யுத்தத்தினால் பாதிக்கப்ட்ட திருகோணமலை மாவட்டத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தி இலங்கையின் முக்கிய வர்த்தக மையமாக மாற்றுவதன் மூலம் சமூக பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவின் வழிகாட்டலின் கீழ் சிங்கப்பூர் சுர்பானா நிறுவனம் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்ட வரைவொன்றினை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.
இத்திட்டத்தினை 2018ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிறைவு செய்யவுள்ளதாகவும் சிங்கப்பூர் சுர்பானா நிறுவனத்தின் அதிகாரியொருவர் கிழக்கு மாகாண ஆளுனரிடம் தெரிவித்தார்.
இத்திட்டத்தில் போக்குவரத்து-நீர்வசதிகள்-மின்சாரம் மற்றும் உயர் கல்வி வசதிகள் மேம்படுத்துவதற்குறிய உபாயங்கள் ஆராயப்பட்டது.
இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம சிங்கப்பூர் சுர்பான நிறுவன பிரதிநிதிகளிடம் திருகோணமலை மாவட்டத்தில் இயற்கை வளங்களோ அல்லது கலை கலாச்சார விழுமியங்களுக்கோ பாதிப்பு ஏற்படாத விதத்தில் இத்திட்டம் அமுல்படுத்த வேண்டுமெனவும் இத்திட்டத்தின் பலாபலன்கள் இம்மாவட்டத்தில் வாழும் சகல இன மக்களிடையே பகிரப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.