மக்கள் காங்கிரஸ் சமூக அபிலாஷைகளை முன்னிறுத்தியே செயற்படுகின்றது. புத்திஜீவிகளுடனான கலந்துரையாடலில் அமைச்சர் ரிஷாட்

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் குறுகிய காலத்தில் வளர்ந்த சிறிய கட்சியாக இருந்தபோதும் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்யக் கூடிய வகையில் உச்சளவிலான விடயங்களை இடைக்கால அறிக்கையில் உள்ளீர்ப்பு செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம், அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை, பாராளுமன்ற தேர்தல் முறைமைகள், எல்லை நிர்ணய ஆணைக்குழு தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மேற்கொண்ட மேற்கொள்ள உத்தேசித்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில், சூரா கவுன்சில், புத்தி ஜீவிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் ஆகியோருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கலந்துரையாடியபோதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது,

நாங்கள் தூர நோக்குடனும், சமூக சிந்தனையுடனும் சமூகத்தை பாதுகாக்கும் விடயங்களை இடைக்கால அறிக்கையில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம். கட்சித் தலைவன் என்ற வகையில், அரசியலமைப்பு வழிப்படுத்தல் குழுவின் ஓர் உறுப்பினராக நான் இருப்பதால், இவ்வாறு சில விடயங்களை உள்ளீர்ப்பு செய்ய முடிந்தது.

மனோகணேசன் தலைமயிலான கட்சி, டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி, முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய சிறுபான்மைக் கட்சிகளுடன் எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து மேற்கொண்ட ஒருமித்த நிலைப்பாடுகளைக் கொண்ட விடயங்களை உள்ளடக்கி, வழிப்படுத்தல் குழுவிற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தோம். இதனை விட எமது சமூகத்தைப் பாதிக்கும் சில விடயங்களை நிவர்த்திப்பதற்காக தனியாகவும் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தோம். அதுவும் இடைக்கால அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது. வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டும் என்பதில் எமது கட்சி தெளிவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. நாங்கள் வழங்கிய தனியான ஆவணத்திலும் அது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ் தரப்புக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கோருவது அவர்களின் விருப்பம். எனினும், இவ்விரு மாகாணங்களும் இணைக்கப்படுவதை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கின்றது. தமிழர்களின் தாயக கோட்பாட்டுக்கான தியாகங்கள் விலைமதிக்க முடியாதவை. இந்தத் தியாகங்களை முஸ்லிம்கள் மலினப்படுத்தவில்லை.

ஆனால், வடக்கு, கிழக்கு இணைப்பில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் அமுங்கிப்போகும் அபாயமுள்ளது. இந்நிலையில் இவ்விரு மாகாணங்களும் இணைக்கப்பட்டு காணி, பொலிஸ் அதிகாரங்களும் வழங்கப்பட்டால் நிலைமைகள் இன்னும் மோசமாகும்.

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை. புலிகளின் சிந்தனையில் வளரும் அரசியல்வாதிகள் சிலரின் போக்குகள் வடக்கு முஸ்லிம்களை மேலும் அச்சத்துக்குள்ளாக்கியுள்ளது. இணைப்புக்கு ஆதரவளித்தால் பேரினவாதிகளின் நெருக்குதலுக்கு தென்,மேல் மாகாணங்களிலுள்ள முஸ்லிம்கள் அகப்படும் அபாயமுள்ளது. நிலைமைகளை நேரில் அனுபவிப்பவர்கள் என்பதால் வடக்கு, கிழக்கு இணைப்பை எதிர்க்கிறோம்.

கிழக்கின் மூவின மக்களின் பிரதிநிதிகளும் இணைந்து மாகாண நிர்வாகத்தை கொண்டு செல்கின்றனர். வடக்கு,கிழக்கை இணைத்தால் இவ்வொற்றுமை இல்லாது போகும். தமிழ் பெரும்பான்மை வாதத்தை பலப்படுத்தும் பின்னணியிலே இக்கோரிக்கை எழுகிறது.

பிரதேச காணிப் பிரச்சினைகளை மத்திய அரசாங்கத்தின் காணி அமைச்சரிடம் சென்று தீர்த்துக் கொள்வதனூடாக மாகாண நிர்வாகங்களின் மோதல்களை தவிர்க்க முடியும்.

மாகாண சபைகள் திருத்தச் சட்டமூலத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வாக்களித்தமை பற்றி பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. அவசர அவசரமாக ஜனநாயக நடைமுறைகளை மீறி கொண்டுவரப்பட்ட இந்த திருத்த சட்டமூலத்தை எதிர்ப்பதில் நாங்கள் உறுதியாக இருந்த போதும், அரசாங்கத்திடமும், பிரதமரிடமும் எங்களை துரோகிகளாகக் காட்டி எங்களை அரசிலிருந்து தனிமைப் படுத்தவும், ஓரங்கட்டவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் எமது கட்சியைச் சார்ந்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்காது போனாலும், 152 என்ற பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இதனாலேயே நாம் வேறு வழியின்றி ஆதரிக்கும் முடிவை எடுக்க நேரிட்டது.

பசில் ராஜபக்ஷவுடன் இரகசிய பேரம் பேசி அரசாங்கத்தைக் கவிழ்க்க நாம் முயற்சிப்பதாக பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி பாராளுமன்றத்தில் அமைச்சர்கள், எம்.பிக்கள் மத்தியிலும் இந்தப் புரளியைக் கிளப்பி எம்மை தூரமாக்கும் முயற்சி இடம்பெற்றது. இந்த இக்கட்டான நிலையில் எமது பிரயத்தனத்தினால் இறுதி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் சில சமூக பாதுகாப்பு விடயங்களில் இணக்கம் காணப்பட்டு உச்சக்கட்ட நன்மைகளை பெற்றுக்கொள்ள முடிந்தது. காட்டிக் கொடுப்பதிலிருந்தும், கருவறுப்பதிலிரிருந்தும் தப்பிக்கவும் சட்டமூலம் நிறைவேற்றப் படுவதற்கான புறச்சூழல் அரசுக்கு சார்பாக இருந்ததனால் எதிர்த்துப் பலனில்லை என்ற முடிவுக்கு நாம் வர நேர்ந்தது.

அரசாங்கம் கொண்டுவந்த இருபதாவது திருத்தம் உச்ச நீதி மன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில், தேர்தலுக்கு முகம் கொடுக்க அஞ்சியிருந்த அரசாங்கத்துக்கு, ஏற்கனவே பெண்களின் பிரதிநிதித்துவத்தை முப்பது சதவீதமாக அதிகரிப்பது தொடர்பில் கொண்டுவர முடிவு செய்யப்பட்டிருந்த சட்டமூலம் ஒன்றில் மேலும் முப்பது தாள்கள் வரை புகுத்தி, இந்த புதிய மாகாண தேர்தல் திருத்தத்தை அரசு கொண்டு வந்தது. பாராளுமன்ற நடைமுறைகளையும், விதிமுறைகளையும் கருத்திற்கெடுக்காமல், கட்சித் தலைவர்களுக்குக் கூட தெரியப்படுத்தாமல் பாராளுமன்றக் குழுநிலையில் இந்த திருத்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டு சட்டமாக நிறைவேற்ற அரசாங்கம் முயற்சி செய்தது. வாக்களிப்புக்கு முந்தைய நாளே எமக்கு இந்த விடயம் தெரிய வந்தபோது, சிறுபான்மை மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துமென்ற அச்சம் ஏற்பட்டதால் அதனைத் தடுப்பதற்காக, நான் மேற்கொண்ட பிரயத்தனங்களை விலாவாரியாகக் கூறமுடியாது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்பு கொண்டு, இது தொடர்பில் எடுத்துரைத்தேன்.

ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தியுடன் தொடர்பு கொண்டு முஸ்லிம் எம்.பிக்களையும், சமூகநல நிறுவனங்களையும் ஒன்றுகூட்டச் செய்து சமூகம் சார்ந்த முடிவுகளை மேற்கொள்ள வழிவகுத்தோம்.

வாக்களிப்பு தினத்தன்று பாராளுமன்றத்தில் காலை தொடக்கம் வாக்கெடுப்பு இடம்பெறும் இறுதி நேரம் வரை நாம் மேற்கொண்ட முயற்சிகளை அங்கிருந்த பிரதமர், சிறுபான்மை அமைச்சர்கள், சிறுபான்மைக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நன்கறிவார்கள். மனச்சாட்சிக்கு விரோதமில்லாது சமூகத்தை எவ்வாறாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற தூய்மையான நோக்கில் நாங்கள் மேற்கொண்ட பகீரத முயற்சிகளை இறைவன் நன்கறிவான்.

சட்டமூலம் இனி நிறைவேற்றப்படத்தான் போகின்றதென்ற துரதிஷ்ட நிலை வந்தபோது இறுதி நேரத்தில் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை 3/2 பெரும்பான்மையினால் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற கட்டாயத்தையும், அது தவறும் தவறும் பட்சத்தில் பிரதமரின் தலைமையில் சபாநாயகரினால் நியமிக்கப்படும் சிறுபான்மை பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஐவர் கொண்ட குழுவின் நியாயமான முடிவுகளின் படி செயற்பட வேண்டும் என்ற விடயத்தையும் வலியுறுத்தி பிரதமரை இணங்க வைத்தோம். அதுமட்டுமின்றி முஸ்லிம், மலையக மக்களுக்கு இந்தச் சட்டத்தினால் பாதிப்பு ஏற்படுவதற்கு இடமளிக்கமாட்டாது என பிரதமர் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக கூறுவதற்கான அழுத்தங்களையும் நாம் பிரயோகித்தோம். இவ்வாறு அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு அமைச்சர் விரிவாகப் பதிலளித்ததோடு, சமூக நல விடயங்களில் முஸ்லிம் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய புத்திஜீவிகள் குழுவொன்று அமைக்கப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் சமூகம் சார்ந்த நலன்கள் பாதிப்படையும் போது, அதனை நிவர்த்தி செய்ய இந்தக் குழுவின் மூலம் உறுதியான முடிவுகளை மேற்கொள்ள வழிவகுக்க முடியும் எனவும் கூறினார்.

18 ஆவது திருத்தம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு விளக்கமளித்த அமைச்சர், 18 ஆவது திருத்தத்துக்கு நாங்கள் வாக்களித்தமையால் சமூகத்துக்கு எத்தகைய பாதிப்பு ஏற்பட்டது? என வினவினார். வெறுமனே ஒருசிலர் எழுதுவதை தூக்கிப் பிடித்துக்கொண்டு பேசுவது ஆரோக்கியமானதல்ல எனக் குறிப்பிட்டார். யுத்தத்தை வெற்றி கண்டு, நாட்டில் நிம்மதியை ஏற்படுத்தித் தந்த நாட்டுத் தலைவர் ஒருவர் மூன்றாவது முறையாகவும் ஆட்சி செய்ய விரும்புவதாக எங்களிடம் கோரும் போது அவருக்கு நாங்கள் ஆதரவளிப்பதில் என்ன தவறு இருக்கின்றது? 18 ஆவது திருத்தத்தின் மூலம் அவரைப் போட்டியிட வழிவகுத்துக் கொடுத்தது போல, அவர் சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைத்ததனால் வீட்டுக்கும் அனுப்பினோம்.

எனவே, 18 ஆவது திருத்தத்தில் நாங்கள் முஸ்லிம் சமூகத்துக்கு துரோகம் இழைத்து விட்டதாகக் கூறுவதில் என்ன அர்த்தம் இருக்கின்றது? என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

இந்தக் கலந்துரையாடலில் மக்கள் காங்கிரஸின் தவிசாளர், பிரதியமைச்சர் அமீர் அலி, கட்சியின் அரசியல் விவகார, சட்டப் பணிப்பாளர் ருஸ்தி ஹபீப் ஆகியோரும் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் திருத்தங்கள் தொடர்பில் விளக்கமாக விபரித்தனர். செயலாளர் நாயகம் சுபைர்டீன், எம்.பிக்களான நவவி, மஹ்ரூப் ஆகியோர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -