அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“ சாய்ந்தமருது மக்களின் தனி பிரதேச சபைக் கோரிக்கை வலுத்து வருகின்றது. அம்மக்கள் இரண்டாவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமையும் ஹர்த்தால் அனுஷ்டிக்கின்றனர். நோன்பு நோற்று துஆ பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டுள்ளனர். சாய்ந்தமருது மக்களுக்கு தேர்தல் காலங்களில் பொய் வாக்குறுதிகளை வழங்கியவர்களே இன்றைய நிலைக்கு காரணமானவர்கள். அவர்களே இதற்குப் பொறுப்புக் கூறவும் வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் தலைமையில் ஏற்கனவே பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இதுவரை எவராலும் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வினைப் பெற்றுத் தருமாறு சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் எம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கமைய இந்த விடயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை கொண்டு சென்றுள்ளேன்.
இதேவேளை, கல்முனை மாநகர சபையை 4 உள்ளுராட்சி சபைகளாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை கல்முனை மக்களால் முன்வைக்கப்படுகின்றது. இதை சிலர் அரசியல் கருவியாக பயன்படுத்த முனைகிறார்கள். இருதரப்புக்குக்கும் பிரச்சினைகள் உள்ளன. அவற்றை சுமூகமான கலந்துரையாடல்கள் மூலமே தீர்வொன்றுக்கு வர முடியும். மாறாக ஒருவர் இன்னொருவரை சாடி, ஏட்டுக்குப் போட்டியாக ஆர்ப்பாட்டம் செய்து அறிக்கை விடுவதால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.
இந்த விடயத்தில் மத்தியஸ்தம் வகித்து சமூகத்தில் பிளவு ஏற்படாமல் தவிர்க்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு எமக்குள்ளது. ஜனாதிபதியின் கவனத்துக்கு இந்த விவகாரத்தை கொண்டு செல்வதன் ஊடாக வெகுவிரைவில் இரு தரப்பையும் இணைத்துக் கொண்டு ஜனாதிபதியுடன் கலந்துரையாடலொன்றை ஏற்பாடு செய்யவுள்ளேன்.” –என்றார்.