ஏறாவூர் ஏஎம் றிகாஸ்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டத்தையும் சமூக நல்லுறவையும் சீர்குலைக்கும் வகையில் செயற்படுவோருக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ஜாகொட ஆராச்சி சகல பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிகளுக்கும் 31.10.2017 உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்தசில நாட்களாக முஸ்லிம் வர்த்தகர்களுக்கெதிராக போலி முகநூல்கள் மூலமாகவும் நேரடியாகவும் தமிழ்- முஸ்லிம் நல்லுறவைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்களில் சிலர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்- முஸ்லிம் நல்லுறவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் கடந்தசில நாட்களாக இடம்பெற்றுவரும் சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் இன்று உயர்மட்ட மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர, உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஆகிய பொலிஸ் அதிகாரிகளுடன் ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் மௌலவி எம்எல் அப்துல் வாஜித் மற்றும் வர்த்தகர்கள் சமூக முக்கியஸ்தர்கள் எனப் பலரும் இங்கு பிரசன்னமாயிருந்தனர்.
இங்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாகொட ஆராச்சி கருத்துத் தெரிவிக்கையில்--மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் முஸ்லிம் பிரதேசங்களுக்கும் முஸ்லிம்கள் தமிழ் பிரதேசங்களுக்கும் வியாபார நடவடிக்கைகளுக்காக வழக்கம்போல சென்றுவருவதை நிறுத்தக்கூடாது. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை பொலிஸார் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை தமிழ் வியாபாரிகளும் முஸ்லிம் வர்தகர்களும் பரஸ்பரம் வெளிப்பிரதேச சந்தைகளுக்குச் செல்வதை நிலைமை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வரும்வரை தவிர்த்துக்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளதாக வர்த்தகர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.
அவ்வாறு இருக்கக்கூடாது. தொடர்தேர்ச்சியாக வர்த்தக நடவடிக்கைள் நடைபெறவேண்டும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாகொட ஆராச்சி கேட்டுக்கொண்டார்.