இலங்கை தமிழர்களின் விரோதியாக மாறிய இந்திய அமைதிப்படை...!

இந்திய அமைதிப்படை இலங்கை தமிழர்களின் விரோதியாக மாறியது எப்படி?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அமல்படுத்தவும், தமிழ் ஈழப் போராளிக்குழுக்களின் ஆயுதங்களைக் களையவும், இலங்கைக்கு அனுப்பப்பட்ட, இந்திய அமைதி காப்புப் படை ( ஐ.பி.கே.எஃப்) அங்கு பின்னர் மோதல்களில் சிக்கியது. இந்திய ராணுவம் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இலங்கை சென்ற பிபிசி செய்தியாளர் வினீத் கரே, இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங் உடன் இணைந்து அன்றைய நினைவலைகளை மீட்டெடுக்கிறார்.
''இந்த இடத்திற்கு திரும்பிவருவேன் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை'' என்று கூறுகிறார் மேஜர் ஜென்ரல் ஷியோனன் சிங்.
யாழ்ப்பாணம் பலாலி விமான தளத்தில் இலங்கை அதிகாரிகள் தொலைவில் இருந்து எங்களை கண்காணித்த நிலையில், அங்கு பரந்து விரிந்திருக்கும் பசுமையான நிலப்பரப்பை கண்களை சுழற்றி அங்கும் இங்குமாக பார்த்தபடி இதைச் சொல்கிறார் மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங்.
ஆழ்ந்து சிந்திப்பதற்கும், நினைவுகூர்வதற்குமான நேரம்
Image captionஆழ்ந்து சிந்திப்பதற்கும், நினைவுகூர்வதற்குமான நேரம்
1987 ஜூலையில் பெரிய விமானங்கள் மூலம் இந்திய அமைதிகாக்கும் படையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் இலங்கையில் வந்து இறங்கிய இடம் அது. வேலியிடப்பட்ட இடத்தை பார்த்த அவர், ''இந்த இடம் இப்போது மிகவும் மாறிவிட்டது, நுழைவாயில்கள் புதிதாக இருக்கின்றன, புதிய கட்டடங்கள், முள் கம்பி வேலிகள் என இடமே மாறிவிட்டது'' என்கிறார்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை ஆயுதங்களை கைவிடச் செய்து, நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்காக இந்திய அமைதிப்படை (The Indian Peace keeping Force (IPKF)) அனுப்பப்பட்டது.
ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam, சுருக்கமாக LTTE) உடன் ஏற்பட்ட மோதலில் அமைதிப்படையைச் சேர்ந்த ஏறக்குறைய 1,200 பேர் உயிரிழந்தனர்.
1987-ல் ஷியோனன் சிங் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது அவர் ராணுவ மேஜராக இருந்தார்படத்தின் காப்புரிமைSURENDER SANGWAN
Image caption1987-ல் ஷியோனன் சிங் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது அவர் ராணுவ மேஜராக இருந்தார்
உயிரிழந்த இந்திய அமைதிகாக்கும் படையினரை சிறப்பிக்கும் வகையில் விமானதளத்தில் நினைவுச்சின்னம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவிய காலகட்டத்தில் மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங் அங்கு 32 மாதங்கள் பணிபுரிந்தார்.
"நாங்கள் இங்கு தரையிறங்கியபின், தாக்குதல்களை நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்று நினைத்து இலங்கை ராணுவத்தினர் தங்கள் ஆயுதங்களை கைவிட்டார்கள். இலங்கை ராணுவத்தினருடன் கைகுலுக்கிய நாங்கள், அமைதி காக்க வந்திருக்கிறோம் என்று தெரிவித்தோம்" என்று தாங்கள் சொன்னதை மேஜர் ஜெனரல் சிங் நினைவுகூர்கிறார்.
எதுபோன்ற ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை என்பதோடு, இலங்கைக்கு புதிதான எங்களுக்கு வழிகாட்டுவதற்கு வரைபடங்களோ, மேம்பட்ட உளவுத்துறை தகவல்களோ கொடுக்கப்படவில்லை என்கிறார் அவர்.
இந்திய ராணுவத்தை நம்பிய தமிழர்கள்
என்.பென்னேஷ்வரன் 1987ஆம் ஆண்டு அங்குள்ள பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார்.
"இந்திய அமைதிகாக்கும் படை வந்தபோது, அவர்கள் தங்களை காப்பாற்றுவார்கள் என்று நினைத்த இலங்கை தமிழர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இலங்கை ராணுவத்திடமிருந்து தாங்கள் விடுவிக்கப்பட்டதாக மக்கள் உணர்ந்தனர்."
இலங்கையின் வடக்குப் பகுதியில் வசித்த சிறுபான்மை தமிழ் சமூகத்தினர், பெரும்பான்மை சிங்கள சமுதாயத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக உணர்ந்தார்கள். இலங்கையின் ஆட்சிமொழி சிங்களம் மட்டுமே என்ற சட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்றியது. இது, தமிழ் சமூகத்தினரின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதுடன், அரசுத் துறையில் பணிபுரிந்த தமிழ் மக்களின் நிலையையும் கேள்விக்குறிக்கு உள்ளாக்கியது.
தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்தன. 1983-ஆம் ஆண்டில் மூன்றாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரமான கலகத்தை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
தமிழர்
Image captionஇந்திய ராணுவம் தங்களை 'காப்பாற்றும்' என்பதே தமிழ் மக்களின் ஆரம்பகால நம்பிக்கையாக இருந்தது
சுதந்திரமான அரசு வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கனவுக்கு ஆதரவு கொடுக்கும் பெருமளவிலான தமிழ் மக்கள் இருந்த இந்தியாவில் இலங்கையின் உள்நாட்டு யுத்தம், எச்சரிக்கை மணியை ஒலித்தது.
இதன் அடிப்படையில்தான், இந்திய வீரர்களை இலங்கைக்கு அனுப்பும் ஒப்பந்தம், அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனேவுக்கும் இடையில் உருவானது.
சிறிய நாடான இலங்கையின் உள்ளூர் விவகாரத்தில் அண்டையில் உள்ள பெரிய நாடு தலையிடுவதை இலங்கை அரசின் நிர்வாகத்தில் உள்ளவர்கள் உட்பட பல சிங்களர்கள் விரும்பவில்லை.
`இந்திய ராணுவத்தைவிட நவீன ஆயுதங்களுடன் புலிகள்'
இந்திய ராணுவத்தினர் இலங்கை வந்தபிறகு, இலங்கையின் வடக்குப் பகுதியில் இருந்த இலங்கை ராணுவத்தினர் படிப்படியாக வெளியேற்றப்பட்டு, அங்கு இந்திய வீரர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
தங்கள் படையினரால் தமிழர்களுக்கு உதவமுடியும் என்றே இந்திய அமைதிகாக்கும் படையினர் கருதினார்கள். அங்கு சண்டையில் ஈடுபடுவோம் என்று யாரும் கற்பனைகூட செய்ததில்லை.
மலிவான வெளிநாட்டு மின்னணு பொருட்களை இலங்கையில் வாங்கலாம் என்ற நினைப்புடன் இந்திய ராணுவத்தினர் அங்கு சென்றதாகவும் கூறப்படுவதுண்டு.
"எங்கள் ராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவு உட்பட பல பிரிவுகள் வெடிபொருட்கள் இல்லாமலேயே தரையிறங்கினார்கள். அமைதி முயற்சிக்கு அது தேவையில்லை என்று அவர்கள் நினைத்தார்கள்" என்று ஷியோனான் சிங் கூறினார்.
ஆரம்பகட்டத்தில் இந்திய அமைதிப்படைக்கும் எல்.டி.டி.ஈக்கும் இடையிலான உறவு சுமுகமாகவே இருந்தது. இந்தியா, விடுதலை புலிகள் அமைப்புக்கு பல ஆண்டுகள் பயிற்சியும் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்திய முகமைகளால் பயிற்சியளிக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் பலர் எங்களுக்கு தெரிந்தவர்களாகவே இருந்தார்கள். அவர்கள் எங்கள் ராணுவ சாவடிகளுக்கு வந்து செல்வதும் வழக்கமாக இருந்தது. அதுவே பிறகு எங்களுக்கு எதிரான தாக்குதலை நடத்த அவர்களுக்கு சாதகமாகிப்போனது.
இந்தியாவில் கிடைக்காத மின்சாதன பொருட்களை இலங்கையில் இந்திய சிப்பாய்கள் வாங்கியதாகவும் கதைகள் உலவுகின்றனபடத்தின் காப்புரிமைSURENDER SANGWAN
Image captionஇந்தியாவில் கிடைக்காத மின்சாதன பொருட்களை இலங்கையில் இந்திய சிப்பாய்கள் வாங்கியதாகவும் கதைகள் உலவுகின்றன
விடுதலைப் புலிகள் அமைப்பினரிடம் உயர்தர தொழில்நுட்பங்கள் பொருந்திய ஆயுதங்களும், தகவல் தொடர்பு சாதனங்களும் இருந்தன.
"அவர்களுடைய ஆயுதங்கள் உயர்தரமானவை. எங்கள் ஆயுதங்களை பார்த்து அவர்கள் சிரிக்கக்கூடாது என்பதற்காக மறைத்துவைப்போம். எங்கள் வானொலி தொடர்புகள் 10-15 கி.மீ. தொலைவு என்ற வரம்புக்குள் இருந்தநிலையில், அவர்களுடையதோ 40-45 கி.மீ. தொலைவுக்கு இருந்தது" என்கிறார் ஷியோனான் சிங்.
போராக உருமாறியது
விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட மறுத்ததும் விஷயங்கள் விபரீதமாகி, 1987 அக்டோபரில் இந்திய அமைதிகாக்கும் படையினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் கொரில்லாப் போராக படிப்படியாக அதிகரித்தது. விடுதலைப்புலிகள் அமைப்பு, தாங்கள் வலுவாக இருந்த யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் முயற்சியை தொடங்கியது.
இந்திய அமைதிகாக்கும் படையினர் தங்கியிருந்த பலாலி விமான நிலைய தலைமையகத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மைதானத்தில் மோதல் ஆரம்பித்தது.
மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங்
Image captionதனது சக வீரர்கள் பலரை இழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் சென்றார் மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங்
பிறகு ஷியோனான் சிங்கும், அவரது ஆட்களும் தாக்குதல் நடத்தி வரும் படையினருக்காக இடத்தை காலி செய்ய வேண்டியிருந்தது
இன்று இந்த மைதானம் பரந்த பச்சை புல்வெளிகளுடனும் பல்வேறு விளையாட்டு வசதிகளுக்கான வசதிகளையும் கொண்டிருக்கிறது.
"முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் அடர்ந்த புதர்கள் மற்றும் மரங்கள் கொண்ட காட்டுப்பகுதியாக காணப்பட்டது. இங்கு ஒரு மரம் இருந்தது என்று குறிப்பாக சொல்கிறார் ஷியோனன் சிங்.
இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தப்போவதை முன்னதாகவே தெரிந்து கொண்ட விடுதலைப்புலிகள் மூன்று புறங்களில் இருந்து தாக்குதல் நடத்தினார்கள்.
"அந்த கட்டடத்தின் தண்ணீர்த் தொட்டிக்கு பின்புறம் இருந்து எங்களை சுடத் தொடங்கினார்கள் என்று அந்த குறிப்பிட்ட கட்டடத்தையும் தொலைவில் இருந்து சுட்டிக்காட்டுகிறார் ஷியோனன் சிங்
இந்திய படைகளின் எண்ணிக்கை அதிகரித்தபோது, எல்.டி.டி.ஈயின் தாக்குதலும் தீவிரமடைந்தது.
மேஜர் சிங்கும் அவரது படையினரும் அருகிலுள்ள இடங்களுக்கு நகர்ந்தார்கள். வீடுகளில் நுழைந்த அவர்கள் அங்கு குடியிருந்தவர்களை அறைகளில் பூட்டி வைத்துவிட்டு, அங்கிருந்தே தாக்குதலுக்கு தயாரானார்கள்.
ஐ.பி.கே.எஃப்படத்தின் காப்புரிமைSURENDER SANGWAN
Image captionதங்களிடம் போதுமான ஆயுதங்கள் இல்லை, புலிகள் சக்தி வாய்ந்தவர்கள் என்பதை ஐ.பி.கே.எஃப் உணர்ந்தது
அதற்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடர்ந்த சண்டையில் ஐ.பி.கே.எஃப், தனது 36 வீரர்களை இழந்தது.
"எங்கள் தரப்பில் முதலில் கொல்லப்பட்டவர் லக்ஷ்மி சந்த். ஹெலிகாப்டரில் இருந்து இலங்கை ராணுவம் எங்களுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தியது. நாங்கள் இருந்த வீட்டின்மீது விழுந்த ஒரு வெடிகுண்டால் உமேஷ் பாண்டே இறந்தார்" என்று போர்க்கால நினைவுகளை மேஜர் ஜெனரல் சிங் மீட்டெடுக்கிறார். மோதல் நடந்த இடங்களை சரியாக அடையாளம் காட்டினார்.
"துப்பாக்கி சூட்டில் கால்களை இழந்த கங்காராம் பிறகு மரணத்தை தழுவினார்".
அப்போது நடைபெற்ற தீவிரமான போரை நினைவுபடுத்தும் விதமாக, ஒரு வீட்டின் வாசலில் தோட்டாக்களினால் துளைக்கப்பட்ட துளைகளைக் கண்டோம்.
யாழ்ப்பாணம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் நாங்கள் பயணித்தபோது வேறு யாருடைய உதவிகளையும் நாங்கள் பெறவில்லை, மேஜர் ஜெனரல் சிங்கின் அபாரமான ஞாபகசக்தியே போதுமானதாக இருந்தது.
அந்த பிராந்தியத்தின் புவியியல் அமைப்பு, இலங்கையில் இருந்து ஆயுதம் ஏந்திய குழுக்கள் மற்றும் அதில் இருந்தவர்களின் பெயர்கள், விடுதலைப்புலிகளின் தலைவர்களுடனான உரையாடல்கள் என அனைத்துமே அவர் மனதில் பசுமையான நினைவுகளாக படிந்திருக்கிறது.
தேவேந்திரம்
Image captionஇந்திய சிப்பாய்களிடமிருந்து தனது சக ஊழியர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதை நினைவுகூர்கிறார் எ. தேவேந்திரம்
தனது முன்னாள் சகாக்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக மேஜர் சிங், அந்தப் பகுதியில் ஏற்பட்டிருந்த புதிய மாற்றங்களை புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் உற்சாகத்துடன் பதிவு செய்து கொண்டார்.
மனித உரிமை மீறல்கள்
ஆனால் இந்திய அமைதிகாக்கும் படையினருக்கு இருண்ட ஒரு பக்கமும் இருந்தது.
அமைதிகாக்கும் படையாக இலங்கைக்கு சென்ற இந்திய ராணுவம், பாலியல் வல்லுறவு, சித்ரவதை, கொலை உட்பட பலவித மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டது.
1987 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் நாளன்று யாழ்ப்பாண மருத்துவமனையில் மிகவும் கொடூரமான சம்பவங்கள் நடைபெற்றதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
முதலில் மருத்துமனையின் உட்புறமிருந்து நான்கு முதல் ஐந்து விடுதலைப்புலிகள் இந்திய துருப்புகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தமிழ் உரிமை ஆர்வலகள் கூறுகின்றனர்.
இது, எதிர்தரப்பினரின் பதில் தாக்குதலை ஈர்ப்பதற்கான வழக்கமான யுக்தியாகும்.
கணேசமூர்த்தி
Image captionதாக்குதலுக்கு பிறகு மருத்துவமனையில் 'தேங்கி நின்ற ரத்தத்தின்' துர்நாற்றம் வீசியதாக மருத்துவர் கணேசமூர்த்தி சொல்கிறார்
இத்தகைய தாக்குதல்களுக்குப் பின்னர் உள்ளூர் மக்களிடையே கலந்துவிட்ட எல்.டி.டி.ஈ கொரில்லாக்களை அடையாளம் காணமுடியாமல் இந்திய துருப்புகள் குழம்பிப்போனதாக இங்கிருக்கும் பலர் கூறுகின்றனர்.
இந்திய அமைதிகாக்கும் படையினர் கடுமையாக துப்பாக்கிச்சூடு நடத்தி பதிலளித்ததாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் உட்பட 60 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த மருத்துவமனை ஊழியர்களின் புகைப்படங்கள் மருத்துவமனை சுவரில் வைக்கப்பட்டுள்ளன.
அந்த சமயத்தில் மருத்துவமனையில் பணிபுரிந்த ஏ.தேவேந்திரம் என்பவரை நாங்கள் சந்தித்தோம்.
"ஒரு அறையில் 24 மணி நேரம் நானும் அடைபட்டிருந்தேன்," என்று சொன்ன தேவேந்திரம், ஒரு குறுகிய நடைபாதையில் இருந்த தான் பதுங்கியிருந்த அறையை அடையாளம் காண்பித்தார்.
"துப்பாக்கிச்சூட்டின் சப்தத்தையும், தண்ணீர் வேண்டும் என்று கேட்ட சக ஊழியர்களின் கூக்குரலையும் என்னால் கேட்க முடிந்தது, ஆனால் அவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த மனிதர்களை நான் பார்த்தேன், அவர்கள் சீக்கியர்கள், தலையில் தலைப்பாகையும், இந்திய ராணுவ சீருடையும் அணிந்திருந்தார்கள்" என்று அவர் கூறினார்.
அன்றைய தாக்குதலில் உயிரிழந்த தனது சகாக்களை பற்றி நினைவுகூர்ந்த தேவேந்திரம், உடைந்துபோய் உணர்ச்சிவசப்பட்டார்.
சடலங்களுடன் மறைந்திருந்தோம்
யாழ்ப்பாண மருத்துவனை
Image captionபலர் கொல்லப்பட்ட யாழ்ப்பாண மருத்துவனை மீதான தாக்குதல் உட்பட பல கடுமையான மனித உரிமை மீறல்கள் செய்ததாக இந்திய படை மீது குற்றம் சாட்டப்பட்டது
இந்த கொடூர சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்கு பின்னர் மருத்துவமனைக்கு சென்றார் மயக்க மருந்துத்துறை மருத்துவர் கணேசமூர்த்தி.
"நான் மருத்துவமனைக்குள் சென்றபோது, அங்கு ரத்தம் தேங்கிப்போயிருந்ததால் துர்நாற்றம் வீசியது" என்று அவர் கூறினார்.
சடலங்களுக்கு கீழ் மறைந்திருந்து உயிர் பிழைத்திருப்பதாக, தப்பிப்பிழைத்த மருத்துவர்களில் சிலர் கணேச மூர்த்தியிடம் சொன்னார்கள். அசைந்தாலோ அல்லது எதாவது சப்தம் வந்தாலோ சுட்டுக்கொல்லப்படும் அபாயம் இருந்ததால் சடலங்களைப் போலவே தாங்களும் இருந்ததாக அவர்கள் சொன்னார்கள்.
மக்களுக்கு உதவ விரும்பிய பிரபல குழந்தை நல மருத்துவர் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக சொல்கிறார் டாக்டர் கணேச மூர்த்தி.
அடுத்த நாள், இந்திய அமைதிகாக்கும் படையைச் சேர்ந்த மருத்துவ அலுவலருடன் சேர்ந்து மருத்துவமனைக்குள் வந்த ஒரு பெண் மருத்துவர், மறைந்திருந்தவர்களை வெளியே வரச்சொல்லி தமிழில் கோரிக்கை வைத்தத்தையும் கணேசமூர்த்தி நினைவுகூர்கிறார்.
இவை அனைத்தையும் ஷியோனன் சிங் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்.
"இந்த சம்பவத்தை பற்றி எனக்குத் தெரியாது. இந்த சம்பவத்தைப் பற்றி தகவல் முடக்கி வைக்கப்பட்டது (உயரதிகாரிகளின் கட்டளைப்படி) மற்றும் மக்களுக்கும் அதைப் பற்றி தெரியாது" என்று மேஜர் ஜெனரல் சிங் கூறினார். இவற்றை கூறும்போது அவர், இந்த துயரச் சம்பவம் நடைபெற்ற மருத்துவமனையின் சுவர்களில் மாட்டப்பட்டிருந்த ஊழியர்களின் புகைப்படத்தின் முன் நின்றிருந்தார்.
"நடந்தது மிகவும் மோசமானது என்று மட்டுமே என்னால் சொல்லமுடியும். இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியபோது அவர்கள் எதிர்தாக்குதல் நடத்தினார்கள், எதிரில் இருந்தவர்கள் யார் என்பதை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. இது துரதிர்ஷ்டமானது என்றாலும், ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இடங்களில் எல்லாம் இதுபோன்றவையும் நடைபெறுகின்றன."
இந்திய அமைதிப்படை
Image captionஇருதரப்பும் நல்ல எதிர்காலத்தை நோக்கிய நம்பிக்கையுடன் மனதை சமாதானப்படுத்திக் கொள்வதற்கான நேரம் இது
ராஜீவ் கொலைக்கு வித்திட்டது
அதன்பிறகு மேலும் 29 மாதங்கள் இலங்கையில் இந்தியத் துருப்புகள் இருந்தாலும், நாட்டிற்கு திரும்புவதற்குள் உள்ளூர் மக்களிடம் இந்திய அமைதிகாக்கும் படையினர் பற்றிய பிம்பம் சிதைந்துபோயிற்று.
"இந்திய ராணுவத்தின் அணுகுமுறையை அனைவரும் மிகவும் மோசமாக உணர்ந்தனர். உலகில் எந்த ராணுவமாக இருந்தாலும் அது ராணுவம்தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்பதை எங்களுக்குக் கற்றுக்கொடுத்தது" என்கிறார் யாழ்ப்பாணம் 'உதயன்' பத்திரிகை ஆசிரியர் டி. பிரேமானந்த்.
இந்திய அமைதி காக்கும் படையின் நடவடிக்கை, அரசியல் மற்றும் ராணுவ நோக்கங்களைக் கருத்தில் கொள்ளவில்லை என்று ஷியோனன் சிங் கூறினார்.
1991-இல் விடுதலைப் புலிகளால் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு வித்திட்டதும் இதுவே.
முப்பது ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இறுதியாக யாழ்ப்பாணத்தில் அமைதி திரும்பியதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருப்பதாக சொல்கிறார் ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷியோனான் சிங்.
ஆனால், யுத்தம் ஏற்படுத்திச் சென்ற காயங்களை, வடுக்களை குணப்படுத்த இலங்கை அரசு மேலும் அதிக நடவடிக்கைகளை எடுக்கும் என்று அவர் நம்புகிறார்.
நன்றி: தமிழ் BBC
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -