கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் “ஜனவரி மாதம் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த அரசியல் கட்சிகள் இணங்கியுள்ளன. தேர்தல் நாளை அறிவிக்க வேண்டியது தேர்தல் ஆணைக்குழுவின் கடமை.
சில அரசியல் கட்சிகளின் கோரிக்கைக்கு அமைய, அம்பகமுவ, நுவரெலிய பிரதேசசபைகள் சனத்தொகை மற்றும் நில அளவீட்டின் அடிப்படையில் பிரிக்கப்படவுள்ளன.
இதுதொடர்பான அமைச்சரவை பத்திரம் வரும் செவ்வாய்க்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். தேர்தல் அறிவிப்புத் தொடர்பான வர்த்தமானி புதன்கிழமை வெளியிடப்படும்.
நான் பந்துகளில் குறுக்கீடு செய்யவில்லை. ஆனால் ஆடுகளத்தை தயார்படுத்துகிறேன். பல்வேறு அரசியல் கட்சிகளும் சமர்ப்பித்த யோசனைகள், பரிந்துரைகளால் இழுபறி ஏற்பட்டது உண்மை.
இப்போது பந்துகளும், ஆடுகளமும் விளையாடுவதற்குத் தயாராக உள்ளன. அது எப்படி என்று நான் தீர்மானிக்க முடியாது.
சில அரசியல்வாதிகள் ஜனவரி 27ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். அது தேர்தல் நாளைத் தீர்மானிக்கும் சட்டபூர்வ அமைப்பான தேர்தல் ஆணைக்குழு அனுமதியின்றி வெளியிடப்பட்ட அறிவிப்பாகும்” எனக் குறிப்பிட்டார்.