மீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் முயற்சியினால் மூன்று மாடிக் கட்டடம்



எம்.ரீ. ஹைதர் அலி-

மீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் முயற்சியினால் மூன்று மாடிக் கட்டடத்திற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைக்குட்பட்ட மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் முஸ்தபா அவர்களின் தலைமையிலுள்ள வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ. பைஸல் காசிம் அவர்களை இவ்வைத்தியசாலையின் ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறை தொடர்பாக 2017.07.23ஆந்திகதி - ஞாயிற்றுக்கிழமை நிந்தவூரிலுள்ள அமைச்சரின் காரியாலயத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடினர். அத்துடன் இச்சந்திப்பில் பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் உமர் அலி அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் முஸ்தபா மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் ஆகியோர் இவ்வைத்தியசாலையின் தேவைப்பாடுகளை விரிவாக பிரதி அமைச்சருக்கு தெளிவுபடுத்தியதுடன், அதனைக் கேட்டறிந்த பிரதி அமைச்சர் அன்றைய தினமே இவ்வைத்தியசாலைக்கு திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டு வைத்தியசாலையினை பார்வையிட்டதுடன் தனது முதற்கட்ட நடவடிக்கையாக இவ்வைத்தியசாலைக்கு சகல வசதிகளையும் கொண்ட மூன்று மாடிக் கட்டடம் ஒன்றினை அமைப்பதற்காக தனது அமைச்சினூடாக 2018ஆம் ஆண்டுக்குரிய நிதி ஒதுக்கீட்டிலிருந்து நிதியினை பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதியளித்திருந்தார்.

அத்துடன், இவ்வைத்தியசாலையினை தற்போதைய சூழ்நிலை கருதி தரமுயர்த்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அதற்குரிய ஆவணங்களை மாகாணத்தினூடாக மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அதற்குரிய நடவடிக்கைகளையும் தான் முன்னின்று மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார். 

இவ்விஜயத்தின்போது பிரதி அமைச்சரின் இணைப்பாளர் கபீர் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

அதற்கமைவாக இவ்வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி செயற்படுத்துவதற்குப் பொறுப்பாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களை பிரதி சுகாதார அமைச்சர் கௌரவ. பைஸல் காசிம் அவர்கள் அன்றைய தினம் நிந்தவூரில் நடைபெற்ற சந்திப்பின்போது நியமித்திருந்தார்.

அதற்கமைவாக பிரதி சுகாதார அமைச்சரின் பணிப்புரைக்கமைவாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கட்டடத் திணைக்களத்தின் பொறியியலாளர் கிளக்சன் ஆகியோர் 2017.10.25ஆந்திகதி - புதன்கிழமை (இன்று) வைத்தியசாலைக்கு வருகைதந்து வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் முஸ்தபா மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் ஆகியோரிடம் கலந்தாலோசித்து அமையப்பெறவுள்ள மூன்று மாடிக் கட்டடத்திற்கான இடத்தினையும், அதற்குரிய அளவீடுகளையும் மேற்கொண்டனர். இதன்போது கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் கௌரவ. கே.பீ.எஸ். ஹமீட் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் முஸ்தபா அவர்களின் தலைமையிலுள்ள வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் இவ்வைத்தியசாலைக்குத் தேவையான ஆளணி, மற்றும் வளங்களைப் பெற்றுக்கொள்வதற்காக பெரிதும் அயராது பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை பாராட்டத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -