இலங்கையுடனான சீனாவினதும், சிங்கப்பூரினதும் சுதந்திரவர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர்; சுங்கத் தீர்வையற்ற கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவில்லாத பொருட்களை இலங்கை இறக்குமதி செய்யமுடியுமென்று உலக வர்த்தக மையத்தின் பிராந்திய வர்த்தக உடன்படிக்கைகள் பிரிவின் தலைவர் டாக்டர். ரோகினி ஆச்சார்ய இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான வர்த்தக திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 'உலக வர்த்தக மையமும், பிராந்திய வர்த்தக உடன்படிக்கைகளும்' என்ற தலைப்பிலான தேசிய செயலமர்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது இலங்கையின் இறக்குமதியில் 51சதவீதப் பொருட்கள் பூச்சிய இறக்குமதி வரிகளை கொண்டுள்ளன. சீனாவும், சிங்கப்பூரும் வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்ட பின்னர், இறக்குமதி வரிகள் 75 சதவீதம் பூச்சியமாகுவதுடன், இலங்கையின் இறக்குமதிப் பொருட்களின் தீர்வையற்ற வரிகளின் கொள்ளளவு அதிகரிப்பதோடு வருடாந்த இறக்குமதியின் வீதமும் உயர்வடையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த செயலமர்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியதாவது, தென்னாசிய நாடுகளில் இலங்கையே முதன்முதலாக சந்தை அடிப்படையிலான பொருளாதார மறுசீரமைப்பை அறிமுகப்படுத்திய பெருமையையும், வரலாற்றுப் புகழையும் பெற்றுள்ளது. இலங்கையின் பல்பக்க வர்த்தக முறைமை, மற்றும் பிராந்திய வர்த்தக உடன்படிக்கைகள் நீண்டகால வரலாற்றை கொண்டவை.
உலக வர்த்தக மையத்தின் உருவாக்கத்தின் பின்னர் பல்பக்க வர்த்தகம், மற்றும் இருபக்க வர்த்தக உடன்படிக்கைகள் எமது நாட்டில் முடுக்கிவிடப்பட்டன.
இலங்கையின் வர்த்தக வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், வர்த்தகத்தில் நிலையான பேறை அடைவதற்கும் சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள் பெரிதும் பங்களிப்பு நல்கியுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.