க.கிஷாந்தன்-
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டிரதன் செம்புவத்தை தோட்ட தேயிலை மலையை முறையாக பராமரிக்குமாறு தோட்ட நிர்வாகத்திடம் கோரி, அத்தோட்ட தொழிலாளர்கள் 24.10.2017 அன்று தோட்ட காரியாலயத்திற்கு முன்பு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
வட்டவளை பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஸ்டிரதன் செம்புவத்தை தேயிலை மலை சில வருட காலமாக பராமரிக்காமல் காடாக காணப்படுகின்றதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை தேயிலை செடிகளில் விஷ பூச்சிகள், பாம்புகள் காணப்படுவதால் இத்தோட்ட தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் தொழிலுக்கு செல்ல முடியாத அச்சத்தில் உள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களின் நலன் கருதியும் தேயிலை செடியின் பாராமரிப்பை முறையாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் தோட்டத்தில் மேற்கொள்ளப்படாத அபிவிருத்தி வேலைகளை தோட்ட நிர்வாகம் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், காட்டு மிருகங்கள் மற்றும் குளவித் தொல்லைகள் போன்றவற்றிலிருந்து தொழிலாளர்களை தோட்ட நிர்வாகம் பாதுகாக்க வேண்டும் எனவும் வேண்டுக்கோள் விடுத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டு சுமார் 50ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தமை குறிப்பிடதக்கது.