ஊரைப் பிரிக்கும் பள்ளிவாயல் தேர்தல்கள் – முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ் ஜவாஹிர்சாலி

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-


ண்ணியமிக்க உலமாக்களே!
முஸ்லிம் கலாச்சார விவகார அமைச்சர் அவர்களே!
முஸ்லிம் அமைச்சர்களே!
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகளே!
மொத்தத்தில் இலங்கை வாழ் முஸ்லிம் சகோதரர்களே!

அன்பு ஸலாத்துடன் உங்கள் சிந்தனைக்கு…….!அண்மைக்காலமாக இலங்கையிலுள்ள பள்ளிவாயல்களுக்கு நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களை நியமிப்பதற்கான தேர்தல்கள் நடைபெறுவதை நாங்கள் அறிவோம்.
ஒவ்வொரு பிரதேசத்திலும் இவ்வாறான தேர்தல் வரும்போதுதான், நமது மூதாதையர்கள் கட்டிக்காத்த பண்பாடுகள், ஊர் ஒற்றுமை, விழுமியங்கள், சகோதரத்தவம் எல்லாமே நம் நினைவுக்கு வரும், வருகின்றது, வந்தது.

பள்ளிவாயல்களின் நிர்வாகிகள் எப்படி இருப்பார்கள்? எப்படி இருக்க வேண்டும் என்று ஜும்ஆக்களிலே பயான் பண்ணும் உலமாக்கள். இவ்வாறான பிழையான தேர்தல்கள் ஊர்களில் நடப்பதைப் பார்த்து பேசாமல் மௌனமாக இருப்பதுவும் ஆச்சரியமே! பள்ளிவாயல்களுக்கு நம்பிக்கையாளர்களை தெரிவதன் மிகமுக்கிய நோக்கம் பள்ளிவாயலை பரிபாலிப்பதுடன் சமூகத்தைப் பரிபாலிப்பதே. அதாவது ஊரில் ஒற்றுமையை உண்டாக்கி, சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வினைக் கண்டு, ஊரின் தேவைகளை பூர்த்தி செய்தல், மார்க்க கடமைகளுக்கு வழிகாட்டுதல் உட்பட சமூகம் தீர்வைத் தேடும் அனைத்திற்கும் தலைமைத்துவம் மூலம் வழிகாட்டுவதே.

ஆனால் இவ்வாறான தேர்தல்கள் பள்ளிவாயல் நிர்வாகத் தெரிவில் வருவது நம்பிக்கையாளர்களை தெரிந்து ஊர் ஒற்றுமையை உண்டாக்க முன்பே இருந்த பிரிவினையை நிரந்தர பகைமையாக ஆக்கி விடும் நிலையை உண்டாக்கப்போகின்றது. ஏதோ புத்திசாலித் தனமாக நினைத்து முஸ்லிம் சமய விவகார அமைச்சு கண்டுபிடித்த, உலகில் எங்குமே இல்லாத, விருப்பு வாக்கு முறையில் உதாரணத்துக்காகப் பேசப்படும் அவுஸ்திரேலியர்களுக்குக் கூட தெரிந்திராத விருப்பு வாக்கு முறைதான் ஊர் ஒற்றுமையை உண்டாக்க வேண்டிய பள்ளிவாயல்களை ஊரைப் பிரிக்கும் இடங்களாக மாற்றப் பார்க்கின்றது. இவ்வாறு தேர்தல்களை நடாத்தவதற்கு திணைக்களம் கூறும் காரணம் “ காலாகாலமாக பள்ளிவாயல் நிர்வாகத் தெரிவில் ஏற்படும் குழப்பத்தை தவிர்த்தல், அதன் மூலம் சண்டியர்களின் சாணக்கியத்தையும், சாணக்கியர்களின் சண்டித்தனத்தையும் இல்லாமல் செய்து ஜனநாயக ரீதியில் மக்களின் தெரிவில் நிர்வாகத்தினை அமைப்பது” என்பதுதான்.

சரி ஜனநாயக ரிதியில் அமைக்க வேண்டும் என்பது நல்ல நோக்கம்தான். ஆனால் திணைக்களம் தெரிவு செய்துள்ள விருப்பு வாக்கு முறையில் எங்கே ஜனநாயகம் வரப்போகின்றது?

உதாரணத்திற்கு எதிர்வரும் 28ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயல் நிர்வாகத் தெரிவுக்கான தேர்தலை எடுத்துக்கொள்வோம். இங்கு 17 பேர்கள் தெரிவுசெய்யப்படல் வேண்டும். 83 பேர் போட்டியிடுகிறார்கள். இவர்கள் இந்நிர்வாகத்தில் இணைந்து ஊருக்கு நன்மை செய்யவேண்டுமென விண்ணப்பித்தவர்கள் இப்போது விண்ணப்பித்தவர்கள் எல்லோரும் போட்டியாளர்களாக மாற்றமடைந்துவிட்டார்கள். தனித்தனி விண்ணப்பமாக இருந்தாலும் தற்போது 17 பேர்களைக்கொண்ட இரண்டு குழுக்களாக இருந்து மூன்று குழுக்களாக மாற்றமடைந்துள்ளது. வாக்கிற்காகப் பிரச்சாரங்களும் நடைபெறுகின்றன. வெவ்வேறு அரசியற் கட்சிகளைச் சேர்ந்த குழுக்கள் என்றும் பேசப்படுகின்றது. என்றாலும் இக்குழக்களில் பெயர் குறிப்பிடப்படாத பலர் இருக்கின்றார்கள். ஏன், இதற்கு விண்ணப்பித்தோம் என்று அங்கலாய்ப்பவர்களையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

இனி இத்தேர்தல் முறை சரியா, பிழையா என்பதை நாங்களே ஆராய்ந்து முடிவெடுப்போம்.

விருப்புவாக்கு முறை பிழையானது, அதன் மூலம் பிரிவு உண்டாகின்றது என்ற கருத்தையும் காட்டித்தான் எமது நாட்டிலே உத்தேச புதிய அரசியலமைப்பிலும், உள்ளுராட்சி திருத்தச் சட்டமூலத்திலும் விருப்புவாக்கு முறை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. அதுவும் சுமார் 40 ஆண்டு காலமாக நாட்டில் அமுலில் இருந்த ஒருவருக்கு மூன்று விருப்பு வாக்குகள் அளிக்கும் முறையையே இல்லாமல் செய்துள்ளது.

ஆனால் பள்ளிவாயல் தேர்தலில் 17 பெரைத் தெரிவுசெய்ய ஒருவர் 17 விருப்பு வாக்குகளை அளிக்கலாமாம். இந்தக் காலத்தில் எந்த அறிவாளி இதைக் கண்டுபித்தாரோ தெரியாது. எங்குமே இல்லாதது. ஜனநாயகமானது என்று ஏற்றுக்கொண்ட மூன்று விருப்புவாக்கு முறையையே பாராளுமன்றம் இல்லாமல் செய்திருக்கும் வேளையில் 17 விருப்பு வாக்குகளை அளிக்கும் முறைக்கு சம்மதிக்கும் நாங்கள் எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்?

இங்கே என்ன நடக்கலாம் என்பதைப் பார்ப்போம்.

இங்கு 17 பேரைக்கொண்ட இரு குழுக்கள் போட்டியிடுகின்றன என்றும் 1000 பேர் வாக்களிக்கிறார்கள் என்றும் வைத்தக்கொள்வோம். இதில் 501 பேர் குழு  இற்கு வாக்களிக்க எஞ்சிய 499 பேர் குழு  இற்கு வாக்களித்தால் குழு  இலுள்ள 17 பேருமே பள்ளிவாயல் நிர்வாகிகளாவர். அதாவது 50மூ மேற்பட்ட வாக்குகளை பெற்ற குழுவிலுள்ள அனைவரும் நிர்வாகிகளாக ஏனையவர்கள் தோற்கடிக்கப்படுகின்றார்கள். எந்தக் குழு வென்றாலும் சரி எங்கே, இங்கே ஜனநாயகம் இருக்கப் போகின்றது? இதுவே மூன்று குழுக்களாக மாறும் போது எந்தக் குழு கூடிய சதவீத வாக்குகளை பெறுகிறதோ அந்தக் குழுவே நிர்வாகிகளாகும். இதிலென்ன பிழையிருக்கின்றது என்று சிலர் யோசிக்கலாம். இதற்காகப் பின்வரும் உதாரணத்தைப் பார்ப்போம்.

கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மடடக்களப்பு மாவட்டத்தை எடுத்துக்கொள்வோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவர். பளளிவாயல் தேர்தல் போல விகிதாசாரமற்ற ஒருவருக்கு 5 விருப்பு வாக்குகள் என வைத்தக்கொண்டால் இங்கு இலங்கை தமிழரசுக் கட்சி 127185 (53.25மூ) வாக்குகளைப் பெற்றதனால் 5 பேருமே அக்கட்சிக்கு வாக்களித்தவர்களால் தெரிவுசெய்யப்பட்டிருப்பர். அப்படி நடந்திருந்தால் கௌரவ அமைச்சர் அமீரலி அவர்களும் இல்லை. கௌரவ அலிசாஹிர் மௌலானா அவர்களும் இல்லை. இப்போது இத்தேர்தல் முறையில் உள்ள குளறுபடிகள் புரிந்திருக்கும். வெற்றி பெற்ற 17 பேரை விடச் சிறந்தவர்கள், பொருத்தமானவர்கள் இருந்தும் தெரிவுசெய்ய முடியாத நிலையை இம்முறை ஆக்கியிருக்கின்றது.

மூன்று வாக்குகள் என்றாவது இருந்திருந்தால் ஜமாஅத்தார்கள் பொருத்தமானவர்கள் எனக் கருதும் மூன்று பேருக்கு வாக்களிக்கலாம். அப்படி ஒரு நிலையில் 1000 பேர் வாக்களித்தால் 3000 விருப்பு வாக்குகளில் அதிகம் பெறும் முதல் 17 பெர் தெரிவாவர். எனவே ஊர் மக்களால் குழப்பமற்ற நிலையில் நிர்வாகத் nதிரவை மேற்கொள்ள முடியாதென்றால், சிறந்த ஜனநாயகம் கொண்ட ஒரு தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படல் வேண்டும்.

தேர்தலுக்குப் பொறு;பபாக வரும் அதிகாரிகளே, நாட்டில் ஒவ்வொரு பிழையான காரணங்களைக் காட்டியே அரசாங்கம் மக்களின் வாக்குரிமைக்கு மதிப்பளிக்காது தேர்தல்களை பிற்போட முடியுமென்றால் சரியான தேர்தல் முறையொன்றை தயாரிக்கும் வரை இத்தேர்தல்களைப் பிற்போடுவதிலே எந்தப் பாதிப்பும் இல்லை. அதற்காக உங்களுக்கு ஒரு காரணத்தையும் கூறுகின்றேன். நிர்வாகத்தில் பங்கெடுக்க தனித்தனி விண்ணப்பங்களே கோரினீர்கள். 17 பேருக்கு அதிகம் என்பதனால்தான் தேர்தல் நடாத்தப்படப்போகின்றது. இவ்வாறான நிலையில் குழுக்களாக துண்டுப் பிரசுரங்கள் மூலம் வாக்குத் தேடுவதை வைத்தே நீங்கள் இத்தேர்தலை பிற்போடலாம். அதன் பின் இத்தேர்தல் முறை பற்றி பல்வேறுபட்டவர்களிடமும் கருத்துக் கணிப்பைச் செய்யுங்கள்.

மக்கள் பள்ளிவாயல் நிர்வாகிகளுக்காகச் சரியான தெரிவை செய்ய வேண்டும். கட்சி பேதமின்றி, வட்டார பேதமன்றி, இஸ்லாமிய இயக்க பேதமின்றி ஊர் என்ற ரீதியில் நிர்வாகம் தெரிவுசெய்யப்படும்.

எனவே ஊர் முக்கியஸ்தர்கள் கூடி, வேட்பாளர்கள் உட்பட ஊர் ஜமாஅத்தார்களோடு, அரசியல் தலைமைகளும், உலமாக்களும் சிந்தித்து இவ்வாறான தேர்தல் நடாத்தப்படுவதனைத் தவிருங்கள். அப்போதுதான் அரசியல்வாதிகளைப் போல வீதிகளிலும், முகநூல்களிலும் பள்ளிவாயல் நிர்வாகிகளாக வரவேண்டியவர்கள் வலம்வரமாட்டார்கள். தாமதித்தால் ஊர் எப்போதும் பிரிந்தே இருக்கும். மீண்டும் சேர பல வருடங்கள் நமது சந்ததிகள் காத்திருக்க வேண்டிவரும்.

எல்லாம் அறிந்தவன் “அல்லாஹ்”. எனக்குள் உருவாக்கிய உணர்வோடு இதை எழுதினேன். ஏற்பதும், மறுப்பதும் உங்கள் பொறுப்பு.

அல்ஹம்துலில்லாஹ்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -