அனா-
அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளுராட்சி தேர்தலை நாங்கள் எதிர்பார்க்க முடியும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
ஏறாவூர் பிரதேசத்தில் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சுயதொழிலாளர்களுக்கு உபகரணம் வழங்கு நிகழ்வு ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் நேற்று இரவு நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!
மாகாண சபை தேர்தல் சட்ட மூலத்தின் பிற்பாடு அவசரமாக எல்லை நிர்ணயம் செய்கின்ற பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆறு தொகுதிகளாக மட்டக்களப்பு மாவட்டம் பிரிக்கப்பட இருக்கின்றது.
நான்கு தமிழ் தொகுதிகளும், இரண்டு முஸ்லிம் தொகுதிகளாக கல்குடா, ஏறாவூர், காத்தான்குடி எவ்வாறு பங்கிடப்படுகின்றது என்பது மற்றைய அரசியல்வாதிகளின் அறிக்கையை வைத்துத்தான் எதிர்காலத்தில் இந்த விடயங்களை பார்க்கக் கூடியதாக இருக்கும்.
இப்போது முதலாவதாக வரவுள்ள தேர்தலாக அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளுராட்சி தேர்தலை நாங்கள் எதிர்பார்க்க முடியும். உள்ளுராட்சி தேர்தலில் நல்லவர்களை நீங்கள் தெரிவு செய்தால் தங்கள் பிரதேசத்தில் இவ்வாறான நிகழ்வுகள் அதிகம் இடம்பெறும்.
ஒரு நல்ல அரசியல்வாதியிடம் இனத்துவேசம், ஊர்த்துவேசமும் இருப்பது கிடையாது. இதை யார் ஆக்குகின்றார்கள் என்றால் பிரதேச மக்களின் மனநிலைகளை வைத்துத்தான் அவர்கள் இனத்துவேசம், ஊர்த்துவேசத்தை பேசுகின்றார்கள்.
முன்னைய காலத்தில் இனத்துவேசம், ஊர்த்துவேசம் கிடையாது. ஆனால் தற்போது அந்த தவறுகள் இடம்பெற்று வருகின்றது. அரசியல் என்பது ஊருக்கு தலைவர் தேவை என்ற விடயத்தை பார்ப்பது தவிர்க்க முடியாத விடயமாக போய் உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நல்ல அரசியல் தலைவர்கள் வர வேண்டும் என்று நீங்கள் சிந்திக்க தவறுவீர்கள் என்றால் நல்லவர்கள் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரமாட்டார்கள்.
நல்ல அரசியல் தலைவர்கள் தேவையில்லை என்று நீங்கள் ஒதுங்கிக் கொள்வீர்களாக இருந்தால். இதில் பாதிக்கப்படுபவர்கள் பிராந்தியத்தில் உள்ள மிகவும் கஸ்டப்படும் மக்கள் தான் என்றார்.
பிரதி அமைச்சரின் இணைப்பாளர் எம்.எல்.ஏ.லத்தீப் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஏறாவூர் நகர் உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.றமீஸா உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவலிங்கம் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் ஆறு இலட்சம் நிதி ஒதுக்கீட்டின் இருபத்தியொரு பேருக்கு மேசன் உபகரணமும், பதினாறு பேருக்கு எண்ணெய் தெளிக்கும் கருவியும்;, நூற்றி எண்பத்தி எட்டு பேருக்கு மண்வெட்டியும், கச்சான் என்பன வழங்கி வைக்கப்பட்டது.