கொத்மலை பிரதேச செயலாளர் பகுதிக்குட்பட்ட கொலபத்தனை கொங்காலை பிரிவு தோட்ட மக்கள் 30.10.2017 அன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
குறித்த தோட்டப்பகுதிக்கு செல்லும் 4 கிலோ மீற்றர் பிரதான வீதி பல வருடகாலமாக பாவனைக்குதவாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதால் இப்பிரதான வீதியின் ஊடாக பயணிக்கும் இத்தோட்ட பிரிவை சேர்ந்த 150 குடும்பங்களைச் சார்ந்த மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளதை வெளிக்கொணர்ந்து இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
கொங்காலை பிரிவு ஜனவசம தோட்ட தொழிலாளர்கள் குடும்பமான 150 குடும்பங்களில் வசிக்கும் 500ற்கும் மேற்பட்டவர்கள் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை மேற்படி தோட்டத்தில் முன்னெடுத்தனர்.
பல வருடகாலமாக இந்த வீதியை சீர்திருத்தி தருமாறு இப்பகுதியை சேர்ந்த அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தும் ஒரு தீர்வினை பெற்றுத்தராத நிலையில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
சுமார் 4 கிலோ மீற்றர் தூரம் வரை நடை பயணத்தை மேற்கொண்டு கெட்டபுலா தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்பதற்கென செல்லும் இந்த தோட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் உள்ளிட்ட நாவலப்பிட்டி நகரம் மற்றும் தலவாக்கலை, அட்டன் பிரதேசங்களில் தொழில் புரிபவர்களும் பாரிய அசௌகரியங்களுக்களாகி வருகின்றமையை ஆர்ப்பாட்டத்தின் போது மக்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த பிரதான வீதி பாவனைக்குதவாத நிலையில் காணப்படுவதனால் தத்தமது வீடுகளுக்கு பிரதான நகர் பகுதியிலிருந்து தளபாடங்கள், ஏனைய பொருட்களை வாகனத்தில் கொண்டு வருவதற்கு சிரமமாக உள்ளதாகவும், வீடுகளிலும், குறித்த தோட்டத்திலும் விசேட நிகழ்வுகளின் போது வாகன போக்கவரத்துக்கு பாரிய இடையூறு நிகழ்வதாகவும் ஆர்ப்பாட்டகாரர்கள் மிக மன வருத்தத்துடன் தெரிவித்தனர்.
எனவே தோட்ட நிர்வாகமும் இது தொடர்பில் கவனத்திற் கொள்ளாத பட்சத்தில் நம்பி வாக்களித்த அரசியல்வாதிகள் இத்தோட்டத்தின் நலனில் அக்கறை கொண்டு காலம் தாழ்த்தப்படாத நிலையில் குறித்த வீதியை செப்பனிட்டு தரும்படி ஆர்ப்பாட்டகாரர்கள் கோரிக்கையை முன்வைத்தமை குறிப்பிடதக்கது.