ராஷி முகம்மட் ஜாபிர்-
நீங்கள் உச்சரித்த அதே கலிமாவை உச்சாடனம் செய்த, நீங்கள் சுஜூது செய்யும் அதே இறைவனை சுஜூது செய்யும் ஒரு ஏழைச் சகோதரனாக உங்களிடம் சில விடயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.உங்கள் இரு ஊரும் இரண்டுபட்டால் பறையடித்துக் கூத்தாடப் போவது யாரென்றும் உங்களுக்குத் தெரியும்.எனது ஊர் என்ற உணர்வுக்கு மேல் எமது சமூகம்,எமது முஸ்லீம்கள், எமது நிலம் என்ற பார்வை இல்லாதுவிட்டால் இன்றல்ல இன்னொரு நாள் நீங்கள் சுவாசித்துத் திரிந்த காற்றும்,சுற்றித்திரிந்த மண்ணும் உங்களுக்கு அந்நியமாய்ப் போகும். பார்த்து நடந்து கொள்ளுங்கள்.
உங்கள் இரண்டு ஊர்களுக்குமிடையில் அமைதி வேண்டுமாக இருந்தால்,அண்டைவீட்டார்கள் நீங்கள் வேலிக்கு மேலால் பகிரும் கறிகளில் சுவை இருக்கவேண்டும் என்றிருந்தால் சாய்ந்தமருதுக்கு ஒரு பிரதேச சபை கொடுக்கப்படவேண்டும் என்பதுதான் தீர்வு.அது கொடுக்கப்படாவிட்டால் இது ஜென்ம வெஞ்சினமாக மாறிவிடும்.மீண்டும் கூத்தாடிதான் கூவி மகிழப்போகிறான்.
கல்முனை இரண்டாகப் பிரிந்து போனால் சாய்ந்தமருதுக்கு ஒரு பிரதேசபை கிடைக்கும். ஆனால் அந்த நாள்தான் கல்முனையின் வரலாற்றில் அடிக்கப்படும் சாவு மணியாக இருக்கும்.அத்தோடு கல்முனை என்ற முஸ்லீம்களின் அடையாளம் அழிந்து போகும்.அது இன்று நடக்காது.நாளை நடக்காது.ஆனால் நடந்தேயாகும்.அதுதான் கூத்தாடிக்கும் தேவை.ஸ்பெய்ன் முஸ்லிம் நாடு.அது இன்று முஸ்லிம் நாடென்ற அடையாளம் இல்லாமல் ஆகிவிட்டது.அதற்கு நீண்டநாள் எடுத்தது.ஆனால் அது நடந்து விட்டது.
அதுதான் கல்முனைக்கும் நடக்கும். அண்டை வீட்டுச் சகோதரனின் கபனைக் கழற்றி உங்கள் வீட்டு மண மகனுக்கு தலைப்பாகை கட்டும் கல்நெஞ்சக்காரர்கள் அல்ல சாய்ந்தமருது மக்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.யார் குற்றினாலும் அரிசானால் சரி என்று நினைத்துக்கொண்டு நீங்கள் குற்ற நினைக்கும் உலக்கை உங்கள் அண்டைவீட்டு சகோதரனின் மண்டையைச் சுக்கு நூறாக்கக் கூடாது.
சாய்ந்தமருதுக்கும் பிரதேச சபை வேண்டும்.அதே நேரம் கல்முனையும் பாதிக்கப்படக்கூடாது.
அதற்கு வழி கல்முனை மாநகர சபையை நான்காகப் பிரிப்பது. நான் காகப் பிரிக்கச் சொல்வது சாய்ந்தமருதுக்கான பிரதேச சபைக் கோரிக்கையை மலினப்படுத்துவதற்காகத்தான் கல்முனை மக்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று சாய்ந்தமருது மக்கள் கூறுகிறார்கள்.
இல்லை.நாங்கள் சத்தியமாக மலினப்படுத்த நினைக்கவில்லை.எங்களுக்குப் பாதிப்பில்லாதவாறு பிரித்துக்கொடுங்கள் என்று கல்முனை மக்கள் கூறுகிறார்கள்.
பிரியவே வேண்டும் என்று சாய்ந்தமருது மக்களும் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று கல்முனை மக்களும் இருக்கும்போது இரண்டு ஊர்களுக்கும் வாசியான பிரிப்பில் இரண்டு ஊர்களும் உடன்பட்டுக் கொள்வதில் எது உங்களைத் தடுக்கிறது.
நான்காகப் பிரிக்கும் கோஷத்தை இரண்டு ஊர்களும் ஒன்றாகச் சேர்ந்து முன்வையுங்கள். கூத்தாடிகளிடம் இருந்து எல்லைப் பிரச்சினை வந்தால் இரண்டு ஊரும் ஒன்றாகச் சேர்ந்து பேசித்தீருங்கள்.இருவரும் பிரிந்திருப்பது கூத்தாடிக்குத்தான் கொண்டாட்டம்.
சாய்ந்தமருதுக்குப் பிரதேச சபை வேண்டும்.ஆனால் அது நான்காகப் பிரிய வேண்டும் என்பதை இரண்டு ஊர்மக்களும் ஒன்றாகக் கேளுங்கள்.அதில் எல்லைப் பிரச்சினை வந்தால் இரண்டு ஊரும் ஒரு தரப்பில் இருந்து ஏனையவர்களோடு பேசுங்கள்.
சாய்ந்தமருத்துக்குப் பிரதேச சபை கிடைக்க வேண்டும் என்பதில் இரு ஊர்களும் உடன்பட்டுக்கொண்டு ஆனால் எப்படிப்பிரிக்கவேண்டும் என்பதில் நீங்கள் கீரியும் பாம்புமாக இருந்து கொண்டிருப்பதில் கொண்டாடப் போவது கூத்தாடிதான்.இழக்கப்போவது கிழக்கிலங்கையின் முஸ்லிம் என்ற எமது மண்ணின் அடையாளத்தைத்தான்.
ஒன்றாக இணையுங்கள்.ஒன்றாகப் போராடுங்கள்.ஒன்றாகக் கடையடையுங்கள்.ஒன்றாகக் கூட்டம் போடுங்கள்.ஒன்றாகச் சேர்ந்து நில்லுங்க்கள். அதைத் தவிர இதை வெல்வதற்கு வேறு வழியில்லை.
மீண்டும் சொல்கிறேன். எனது ஊர் சாய்ந்தமருதும் அல்ல.கல்முனையும் அல்ல.