மட்டு நகரில் நடைபெறும் தீய சக்திகளின் செயற்பாட்டினை கட்டுப்படுத்த கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்யுமாறு பொறியியலாளர் ஷிப்லி பாறுக் வேண்டுகோள்
மட்டக்களப்பு கிரான் வராந்த சந்தையில் ‘இங்கே முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத்தடை’ என்ற பதாதைகள் கட்டடப்பட்டிருந்ததைப்போன்று 2017.10.30ஆந்திகதி - திங்கட்கிழமை இன்றையதினமும் களுவாஞ்சிக்குடி பிரதேசத்திலும் இதேபோன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகள் கட்டடப்பட்டிருந்தன.
அதேபோன்று, கொக்குவில் பிரதேசத்திலும் இடம்பெறும் வாராந்த சந்தையிலும் முஸ்லிம் சமூகத்தினர் வியாபாரம் செய்வதனைத் தடுப்பதற்கான முயற்சிகள் இன்று மேற்கொள்ளப்பட்டன. இருந்தபோதும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரை தொலைபேசியினூடாக தொடர்புகொண்டு அப்பகுதியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாவன்னம் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கமைவாக பொலிஸாரின் தலையீட்டினால் அவர்களின் முயற்சி தோற்கடிக்கப்பட்டது.
இவ்வாறான செயற்பாடுகளினால் இரு இனங்களுக்குமிடையில் இனக்கலவரம் ஒன்றினை தோற்றுவிக்க சில தீய சக்திகள் முயற்சிக்கின்றமை திட்டவட்டமாக தெளிவாகின்றது.
இவர்களின் செயற்பாட்டினால் பாதிக்கப்படுவது, இரு இனங்களையும் சேர்ந்த அன்றாடம் கூழித் தொழில் மற்றும் வீதியோரங்களில் வாராந்த சந்தைகளில் பொருட்களை விற்பனை செய்யும் அப்பாவி வியாபாரிகளாகும்.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தினை பயன்படுத்துவதற்கு இடமளிக்க வேண்டாமென்றும் இது விடயமாக தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுநலனில் அக்கறை கொண்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் அனைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களிடம் தொலைபேசியினூடாக தெரியப்படுத்தினர்.
இது விடயமாக உடனடி கவனம் செலுத்திய முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான யோகேஸ்வரன், முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் மட்டு மாவட்ட சிவில் அமைப்புக்களின் தலைவர் மாமங்கராஜா ஆகியோருடன் தொலைபேசியினூடாக தொடர்புகொண்டு இவ்விடயங்களை தெளிவுபடுத்தினார்.
அதற்கமைவாக இரு இனங்களையும் சார்ந்த சிவில் அமைப்புக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலைய சந்தியில் பஸ் தரிப்பு நிலையம் அமைக்கப்படுவது தொடர்பாக அப்பகுதியிலுள்ள தமிழ் – முஸ்லிம் ஆட்டோ சாரதிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள முறுகள் நிலைமை மற்றும் கிரான், களுவாஞ்சிக்குடி மற்றும் கொக்குவில் போன்ற பிரதேசங்களில் வியாபாரம் மேற்கொள்ளும் வியாபாரிகளுக்கு சில தீய சக்திகளால் மேற்கொள்ளப்படும் துண்டுப் பிரசுரங்கள் தொடர்பாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்வது சம்மந்தமாக தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ள அவசரமாக கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
இதற்கமைவாக மிக விரைவில் இவ்விடயங்களை ஆராய்ந்து இவ்வாறான செயற்பாடுகளின் பின்னனியிலுள்ளவர்களை இனங்கண்டு அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய சகல விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.