அக்கரைப்பற்று பிரதேசத்தின் அரசியல் பலத்தை சிதைக்கும் நோக்குடன், இப்பிரதேசத்தை இரு கூறுகளாக்கி, இரண்டு தொகுதிகளுக்குள் கொண்டு வந்த சூழ்ச்சிக்கு எல்லை ஆணைக்குழு மூலமாக நியாயம் பெறுவதற்கு கிடைத்து உள்ள வரலாற்று சந்தர்ப்பத்தை அக்கரைப்பற்று மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும் என்று தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகரும், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தின் முன்னணி செயற்பாட்டாளருமான நஸார் ஹாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இவர் விடுத்து உள்ள ஊடக அறிக்கை வருமாறு:-
“அக்கரைப்பற்று பிரதேசத்தின் அரசியல் ரீதியான வாக்குப் பலத்தை சிதைப்பதற்காக, இப்பிரதேசத்தை இரண்டாகக் கூறு போட்டு, ஒரு பகுதியை பொத்துவில் தொகுதிக்குள்ளும், மறு பகுதியை சம்மாந்துறை தொகுதிக்குள்ளும் பங்கு போடுகின்ற சதித் திட்டம் 1976 ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்டது.
இதன் காரணமாகவே தொகுதி வாரித் தேர்தல் முறைமை நடைமுறையில் இருந்தபோது அக்கரைப்பற்றுப் பிரதேசம் அரசியல் ரீதியாகப் பலம் இழந்து காணப்பட்டது.. ஆனால் மாவட்ட அடிப்படையிலான விகிதாசாரத் தேர்தல் முறைமை நடைமுறைக்கு வந்தபோது அக்கரைப்பற்று பிரதேசம் கூறு போடப்பட்டதன் பாதிப்பை அக்கரைப்பற்று மக்கள் பெரிதாக எதிர்கொள்ளவில்லை.
ஆனால் வருகின்ற மாகாண சபைத் தேர்தலை தொகுதியும், விகிதாசாரமும் கலந்த முறைமையில் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதே போல எதிர்காலத்தில் பாராளுமன்ற தேர்தல்கள்கூட இக்கலப்பு முறைமையிலேயே நடத்தப்பட அதிக சாத்தியங்கள் உள்ளன. இந்நிலையில் அக்கரைப்பற்றுப் பிரதேசம் ஆரம்பத்தில் இருந்தபடி ஒரு தொகுதியாக மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும்.
இதற்கு தற்போதைய காலகட்டத்தை நாம் பயன்படுத்திக் கொள்வது அவசியம் ஆனதாகும். தொகுதிகளை நிர்ணயம் செய்வதற்காக, எல்லை நிர்ணய ஆணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அரசாங்கத்துக்கும், இக்குழுவுக்கும் அக்கரைப்பற்று சார்பாக இக்கோரிக்கை முன்வைக்கப்படுதல் வேண்டும்.
அக்கரைப்பற்றிலுள்ள அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், சட்டத்தரணிகள், சமூக அக்கறையாளர்கள் அனைவரும் இவ்விடயத்தில் அனைத்து முரண்பாடுகளையும் மறந்து ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.
இச்சந்தப்பத்தை கை நழுவ விடுவோமானால் எந்தவொரு அரசியல் பலமும் இல்லாத பிரதேசமாக எதிர்கால வரலாறு முழுவதும் அக்கரைப்பற்று இருக்க வேண்டிய துயரம் நேர்ந்து விடும்.