மாகாணங்களுக்கான அதிகாரங்கள் வழங்கப்படுவதனால் நாடு பிரிந்து செல்லும் அபாயமுள்ளதாக இன்று சிலர் மக்களை குழப்பமடையச் செய்யும் பொய்யான கருத்துக்களை பரப்பி வருவதாக கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.
மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்குவது தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள கருத்தாடல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்தார்,
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மாகாணங்களுக்கான அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் தௌிவாக குறிப்பிடப்பட்டுள்ளது,அந்த சட்டம் நாட்டின் மேன்மை மிகு இறைமையாக கருதப்படும் அரசியல்யாப்பிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது,
அவ்வாறாயின் நாட்டின் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு விடயத்தை இவர்கள் எதிர்க்கின்றார்கள் என்றால் இவர்கள் இந்த நாட்டின் உயர்ந்த சட்டத்தை அவமதிக்கின்றார்கள் என்றே அர்த்தம் கொள்ள வேண்டியதாக உள்ளது .
தற்போது மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதை எதிர்ப்பவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் அரசியலில் ஈடுபடுபவர்களாகவே காணப்படுகின்றனர்.
அவர் கடந்த தேர்தல் மேடைகளில் நாம் 13ஆம் திருத்தத்தை விட அதிக அதிகாரங்களை வழங்குவோம் என முழங்கியிருந்தார்,அப்போதெல்லாம் அவர்களுக்கு மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்குவதில் பிரச்சினையிருக்கவில்லை,தற்போது தான் அவர்களுக்கு அது பிரச்சினையாகியுள்ளது,
அது மாத்திரமன்றி பாராளுமன்றத்துக்கு குண்டு வைப்போம் என வன்முறையை தூண்டும் விதமாக கருத்துக்களை வௌியிடுவோரே இன்று மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதை எதிர்ப்பதுதான் வேடிக்கையாகவுள்ளது,
இந்த நாட்டிற்குள் அனைத்து இனங்களும் சமமமாக சகல உரிமைகளையும் வளங்களையும் சமமாக அனுபவிக்கும் விதமான தீர்வொன்று வழங்கப்பட வேண்டுமானால் அவற்றுக்கெல்லாம் அச்சாணியாக அதிகாரப் பகிர்வு அவசியமாகும்,
ஆகவே அதிகாரப் பகிர்வு இன்றிய எந்த ஒரு தீர்வும் சிறுபான்மை சமூகத்துக்கு நன்மை பயக்காது என்பதை பெரும்பான்மை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.