வடகிழக்கு இணைப்பும் முஸ்லிம் காங்கிரஸ் மீதான பழியும்

எம்.என்.எம் யஸீர் அறபாத் ஓட்டமாவடி-


மகாலத்தில் முஸ்லிம் அரசியலில் அதிகமாகப் பேசப்படும் விடயமாக நாங்கள் வடகிழக்கு இணைப்பைப் பற்றிப் பார்க்கலாம்.

இலங்கை இனப்பிரச்சனைக்கான தீர்வாக இந்தியாவால் முன்மொழியப்பட்ட தீர்வு யோசனை மாகாண சபை முறைமையாகும். 1987ம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்,ஜெயவர்தானாவுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இதன் பிரகாரம் 1987ம் ஆண்டில் 42ம் இலக்க மாகாண சபைச்சட்டம் இயற்றப்பட்டதுடன், அரசியலமைப்பில் 13 ஆம் திருத்தமும் செய்யப்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாணம் இணைந்த மாகாண சபையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஒரு வருடத்தின் பின்னர் கிழக்கு மாகாண மக்களிடம் பொது வாக்கடுப்பு நடத்தப்பட்டு அதன் முடிவின் பிரகாரமே நிரந்தரமாக இணைக்க வேண்டுமெனும் நிபந்தனையுடேனேயே தற்காலிகமாக வட கிழக்கு இணைக்கப்பட்டது. அதே வேளை, பொது வாக்கெடுப்பு நடத்தாமல் ஒத்திவைக்கும் அதிகாரம் இலங்கை அரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

1988ம் ஆண்டு வடகிழக்கு மாகாண சபைத்தேர்தல் நடை பெற்றது. இதில் இந்தியாவின் ஆதரவில் போட்டியிட்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வெற்றி பெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக வீட்டிருந்தது.

1990ல் இந்தியா அமைதிகாக்கும் படையினர் புறப்படும் தறுவாயில் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஜப் பெருமாள் ஈழ அரசுப்பிரகடனத்தை அறிவித்து விட்டுச்சென்றார். இதன் காரணமாக, ஜே.ஆர். சபையைக் கலைத்து அரசின் நேரடி ஆட்சிக்குக்கீழ் வடகிழக்கு மாகாண சபையைக் கொண்டு வந்தார்.

அதே போல் வடகிழக்கு இணைப்பு தொடர்பான கிழக்கில் பொது வாக்கெடுப்பை ஒத்திவைக்கும் அதிகாரம் அரச தலைவருக்கு வழங்கப்பட்டிருந்ததால், இதனைப் பயன்படுத்தி ஒவ்வொரு வருடமும் ஒத்தி வைத்து தற்காலிக இணைப்பை தொடர்ந்தார்கள்.

வடகிழக்கு இணைப்பிற்கெதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த சிங்கள தேசியவாத அமைப்புப்கள் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்தும் வெளிக்காட்டி வந்தார்கள். இதன் தொடரில் 2006ல் மக்கள் விடுதலை முன்னணி உயர் நீதிமன்றத்தில் வடகிழக்கு இணைப்பிற்கெதிராக வழக்கொன்றைத் தொடுத்தது. இதனை ஆராய்ந்த உயர்நீதி மன்றம் இணைப்பு செல்லுபடியற்றதென்று தீர்ப்பு வழங்கியது.

இதனடிப்படையில், 2007ம் அண்டு வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டது. கிழக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் 2008ம் ஆண்டு நடைபெற்றது.
இந்த மாகாண சபை முறைமை இனப்பிரச்சனைக்குத் தீர்வாக முன்வைத்தாலும் அவை வெற்றியளிக்கவில்லை என்பதே உண்மை.

இந்த வடகிழக்கு இணைப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்ட சமூகமாக கிழக்கு முஸ்லிம் சமூகம் காணப்பட்டது. கிழக்கில் பெருமளவில் வாழும் முஸ்லிம்கள் வடகிழக்கு இணைத்ததனால் 17 சதவீதமானவர்களாக ஆக்கப்பட்டார்கள். இந்த இணைப்பு தொடர்பாகவோ ஆரம்பத்தில் முஸ்லிம் சமூகத்திடம் அபிப்பிராயம் கோரப்படவுமில்லை. தற்போது அதனைப்பிரிக்கும் போதும் முஸ்லிம் சமூகத்திடம் அபிப்பிராயம் கோரப்படவுமில்லை.

இவ்வாறு முஸ்லிம் சமூகத்தைப் புறக்கணித்து இந்தியாவின் அழுத்தத்தினால் வடகிழக்கு மாகாணம் இணைப்பு ஒப்பந்தம் கைச்சாத்தாதனைத் தொடர்பில் மர்ஹும்.எம்.எச்.எம்.அஷ்ரஃப் "முஸ்லிம் சமூகத்தின் மீது எழுதப்பட்ட ஒரு அடிமைச்சாசனம்" என்று குறிப்பிட்டார்.

இந்த கூற்றினூடாக இதன் தாத்பரியத்தை உணரலாம். இதன் பின்னர் இந்த அடிமைச்சாசனத்திலிருந்து முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாப்பதற்கான தனது போராட்டத்தை ஆரம்பித்தார். தமிழர் தரப்பு முஸ்லிம்களையும் சேர்த்து தமிழ் பேசும் மக்கள் என்ற வரையரைக்குள் உள்ளடக்கிப் பேசிய போது, தலைவர் அஷ்ரஃப் அவர்கள் முஸ்லிம் சமூகம் தனித்துவமான சமூகம். அதற்கு தனித்துவமான உரிமைகளுண்டு என்று உறக்கப்பேசி எல்லோரையும் விழிப்படையச் செய்தார். இந்த சமூக இலக்குகளை நோக்கியே முஸ்லிம் காங்கிரஸ் பயணித்தது.

வடகிழக்கு இணைப்புத்தான் தமிழர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடமுடியுமென்றால் அதற்கு நிபந்தனையுடனான ஆதரவை வழங்குவதற்கும் அஷ்ரஃப் தயாராக இருந்தார் என்பதையும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்தைப்பார்க்கலாம்.

"நிபந்தனையோடு வடக்கு, கிழக்கு இணைப்புக்கு குரல் கொடுக்கும் கடைசி முஸ்லிம் தலைவர் நானாகத்தான் இருக்க முடியும். இதன் பின்னர் எனது சமூகம் கிழக்கைப் பிரிக்கக் கோரும்" என்று கூறியிருந்ததாகவும் ஒரு தகவலுண்டு. அது மாத்திரமின்றி, அண்ணன் அமிர்தலிங்கம் பெற்றுத்தராத தமிழ் ஈழத்தை தம்பி அஷ்ரஃப் பெற்றுத்தருவேன் என்ற கருத்தும் முஸ்லிம்கள் என்றும் தமிழர்களின் அபிலாஷைகளுக்கு குறுக்கே நிற்பவர்களல்ல. தமிழர்கள் வடகிழக்கு இணைந்திருப்பதனூடகவே தங்களின் அபிலாஷைகளை அடைய முடியுமென்று நம்புகிறார்கள்.
இவ்வாறு வடகிழக்கு இணைவதில் பெரும்பான்மையாக இருக்கும் சிங்கள தேசிய அமைப்புக்கள் இதனை எதிர்க்கிறார்கள். இதனால் அரசாங்கங்களின் செயற்பாடுகள் தமிழ், முஸ்லிம் இரண்டு சமூகங்களையும் மோதவிடுவதாகவே காணப்பட்டது.

வடகிழக்கு இணைப்பு மேற்கொள்ளப்பட்டு ஒரு வருடத்தின் பின் கிழக்கில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால், அதன் விளைவால் கிழக்கு இரத்தக்கலரியாக மாற்றப்பட்டிருக்கும். எனவே தான், பேரினவாதிகளின் சதிகளுக்குள் முஸ்லிம்கள் சிக்கிக் கொள்ளாது இருப்பதற்காகவும், தமிழர்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும் போது, முஸ்லிம்களும் தனி இனம் அவர்களின் அபிலாஷைகளும் நிறைவேற்றப்படவேண்டியது தான் என்று தமிழர் தரப்பும் ஏற்றுக் கொள்ளுமளவுக்கான செயற்பாடுகளை முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டது. வடகிழக்கு இணைப்பில் மர்ஹும் அஷ்ரஃப்பின் நிலைப்பாடு அன்று இவ்வாறு தான் இருந்தது.

"முஸ்லிம் சமூகத்தினதும் சிங்கள சமூகத்தினதும் அரசியல் பங்கையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியதன் பின்னர் வடக்கு, கிழக்கு இணைப்பை நிரந்தரமாகச் செய்வதனாலயே தமிழ் சகோதரர்களின் துன்பங்களுக்கு நிரந்தரமான பரிகாரத்தைக் காணமுடியுமென்பதே முஸ்லிம் காங்கிரஸின் தெளிவான நிலையாகும்.

தற்போது வடகிழக்கு இணைப்பு தொடர்பான பேச்சு சூடுபிடித்ததற்கு காரணம்!

ஆரம்ப காலங்களில் முஸ்லிம்களும் தமிழர்களும் பிட்டும் தெங்காய் பூவுமாக வாழ்ந்தார்கள். வடகிழக்கு இணைப்பின் பின்னரான நடைபெற்ற கசப்பான அனுபவங்களால் அந்த உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டிருக்கிறது. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது தொடக்கம் கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்களில் நடைபெற்ற படுகொலைகள் எனப்பல காரணங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

இதனைச்சீர் செய்யுமுகமாக வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்தல், கிழக்கில் காணப்படும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையிலான காணிப்பிரச்சனையில் தீர்வைப் பெற்றுக் கொள்வதில் விட்டுக் கொடுப்புகளை மேற்கொண்டு நல்ல சமிஞ்சைகளை ஏற்படுத்தாது, மீண்டும் வடக்கு, கிழக்கை இணைப்பதற்கு கிழக்கு முஸ்லிம்களிடம் ஆதரவைக் கோருகிறார்கள்.

கடந்த கால கசப்பான சம்பவங்களால் பாதிக்கப்பட்டிருந்த சமூகம் நிகழ்காலத்திலும் தமிழர் தரப்பு தங்களின் உரிமை சார்ந்த விடயங்களில் இனவாதமாகச் செயற்படும் போது, வடக்கு, கிழக்கு தற்போது பிரிந்திருக்கும் போதே இந்நிலைமையென்றால், மீண்டும் சேர்ந்தால் இன்னும் நிலைமை மோசமாகிவிடும்.

இதுவரை தமிழர் தரப்பு சாதகமான சமிஞ்சைகளைச் செயற்பாடுகளில் காட்டாத போது, எந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களுடன் இணைவது என்ற கேள்விகளும் எழாமலில்லை. இவைகளில் நியாயங்களுமுண்டு.

வடகிழக்கு இணைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை தமிழர்களை அதிகமாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கியுள்ளது. இதனைப் பெரும்பாண்மைச் சிங்கள சமூகமும் எதிர்க்கிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களும் இணைப்பு தற்போதைக்கு சாத்தியமில்லை. என்றோ ஒரு நாள் இரு இனங்களும் ஒற்றுமைப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் சாத்தியப்படலாம்.அதற்கு சாதகமான வாக்கியம் அரசியலமைப்பில் இடம்பெற வேண்டுமென்ற அடிப்படையில் இவ்வாறான முன்மொழிவை செய்துள்ளதாகத் தெரிவிக்கிறார்.

இதே வேளை, கடந்த, தற்கால தமிழர் தரப்பினால் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தீர்வு காணப்படாத சூழ்நிலையில், இணைப்பு நடந்தால் தங்களின் நிலைமை என்னவாகுமென்ற அச்சத்திலிருந்த கிழக்கு முஸ்லிம்களின் அச்சத்தை மேலும் அதிகரிக்கச்செய்து, இந்த விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸையும் கோர்த்து விட்டு குளிர்காய சிலர் முற்படுகிறார்கள்.

இணைப்பு தற்போதைக்கு சாத்தியமில்லை. சிங்கள தேசியவாதிகள் ஒரு போதும் உடன்படமாட்டார்கள். அவர்களின் அனுமதியின்றி அரசாங்கத்தாலும் இதணை நடைமுறைப்படுத்த முடியாதென்ற விடயங்களைத் தெரிந்தும் இவைகளை சிலர் முன்வைத்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஆதரவு என்றும் அப்படியில்லையென்றால், பகிரங்கமாக வடகிழக்கு இணைப்புக்கெதிரான கருத்துகளைக் கூற வேண்டுமென வலியுறுத்துகிறார்கள். முஸ்லிம் காங்கிரஸின் தலைமை குறுகிய அரசியல் இலாபங்களுக்காகச் செயற்பட முடியாது.

அதே இடத்தில் முஸ்லிம்களின் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும். வடகிழக்கிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இரு சமூகங்களும் ஒன்றிணைந்து தான் தீர்வைக் காண வேண்டும். தமிழர்களுக்கு தீர்வு வழங்கும் போது, முஸ்லிம்களின் பங்கை சரியாகக் கேட்டுப்பெற வேண்டும்.

இதன் போது தமிழர் தரப்பும் அதற்கு ஆதரவு வழங்க வேண்டுமென்ற நோக்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ச்சியாகப் பேசி வருகிறது. இவ்வாறான தொடர்பு தலைவர் அஷ்ரஃப் அவர்களின் காலத்திலிருந்து இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறான தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் முஸ்லிம் காங்கிரஸிற்குமிடையலான நல்லுறவில் விரிசலை ஏற்படுத்திவிட்டால், முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தடைப்படும். அவ்வாறு தடைப்படாமல், இந்த உறவு தொடரும் பட்சத்தில் பிரச்சினைகளுக்கு தீர்வை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொடுத்தால் பின்னர் ஒரு போதும் முஸ்லிம் சமூகத்திடமிருந்து முஸ்லிம் காங்கிரஸை அப்புறப்படுத்த முடியாமல் போய் விடுமென்ற காரணத்திற்காகவும், தற்போது முஸ்லிம் காங்கிரஸ் இணைப்புத் தொடர்பில் தெளிவாகப் பேசாததைப் பயன்படுத்தி வடகிழக்கு இணைப்பிற்கு தலைவர் ரவூப் ஹக்கீம் அதரவு என்று காட்டுவதனூடாக மக்களை விட்டும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை ஓரங்கட்டி எதிர்வரும் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காகவும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைமை சாத்தியமில்லாத விடயத்தைப்பேசி முஸ்லிம்கள், தமிழர்களின் அபிலாஷைகளுக்கு எதிரானவர்கள் எனக்காட்டி முஸ்லிம்களை நிரந்தர எதிரிகளாகக் காட்டவும், அதே போல் இதனை தங்களின் நெருக்கடிக்குச் சாதகமாக அரசாங்கம் காட்டி தமிழர்களின் அபிலாஷைகளைத் தட்டிக்கழிக்கவும், இதனால் முஸ்லிம் சமூகம் பல்வேறு வீணான பிரச்சனைகளையும் சந்திப்பதைத் தடுக்கவும், எதிர்காலத்தில் இனங்களுக்கிடையிலான உறவு பலமடையச் செய்யவும்,
தேசிய நல்லிணக்கத்தினைக் கட்டுயெழுப்புவதிலும் முஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்றடுப்பதிலும் கட்சித்தலைமை சாணக்கியாமாகச் செயற்படுகிறது.

அதே இடத்தில், அன்று இவ்வாறான பிரச்சனை வரும் போது, பெரும்பான்மையினரின் சூழ்ச்சியில் மாட்டிக் கொள்ளாது, எப்படி அஷ்ரஃப் அவர்கள் காய் நகர்த்தினார் என்பதை நான் மேலே சொன்ன சம்பவங்களை வாசிக்கும் போது தெளிவாக உணரலாம். தற்போதும் அவ்வாறான நிலைமையே ஏற்பட்டிருக்கிறது.

எனவே, அன்று தலைவர் அஷ்ரஃப் கைக்கொண்ட வழிமுறையை தனது தலைவரின் நிழலில் நின்று ரவூப் ஹக்கீம் அவர்கள் அணுகுகிறார்கள் என்பதை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். எனவே, முஸ்லிம்களின் விடயங்களில் மிகவும் கவனமாகவும், நிதானமாகவும் செயற்பட வேண்டிய தார்மீகப் பொறுப்பு முஸ்லிம்களின் பெருவாரியான ஆதரவைப் பெற்ற கட்சி என்ற அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸுக்கும் அதன் தலைமைக்கும் உண்டு.

முஸ்லிம் சமூகத்தில் பீதியை ஏற்படுத்தி, அவர்களின் நிம்மதிகளுக்கு குந்தகம் ஏற்படுத்தாதும், முஸ்லிம்களை தமிழர்களின் எதிரிகளாகக் காட்டி, பாதகமான விளைவுகளை ஏற்படுத்தாது, உங்களின் குறுகிய அரசியல் செயற்பாடுகளை நிறுத்தி விட்டு, எல்லோரும் ஒன்றுபட்டுச் செயற்படுமாறும், இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கும் அரசியல்வாதிகளை கேட்டுக்கொள்வதோடு, ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன் " உங்களுக்கு முன் சென்ற தலைவர்கள் சமூகத்தின் நலனுக்காகப் பாடுபட்டு பல விடயங்களைச் சாதித்துக்காட்டி மக்களின் பிரார்த்தனைக்குரியவர்களாக மறைந்தார்கள்.

நீங்கள் அவர்களைப் போல் சாதிக்காது விட்டாலும், அவர்கள் பெற்றுத்தந்ததை இழக்கச்செய்து சமூகம் உங்களுக்கெதிராகப் பிரார்த்திக்கும் நிலையில் மறைந்து விடார்தீர்கள். பகை மறந்து குறுகிய அரசியலை மறந்து சமூகத்தின் விடிவிற்காய் ஒன்றுபட்டு உழையுங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -