எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் ஏறாவூர் நகர சபைக்கு முதன்மை வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் பல இடங்களில் தனித்து மரச்சின்னத்தில் போட்டியிடுவதுடன் ஏனைய மாகாணங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருதாகவும் அவர் கூறினார்.
உள்ளுராட்சி மன்றத்தேர்தல் தொடர்பாக ஆதரவாளர்களது கருத்தறிவதற்கென ஏறாவூரில் நேற்று (05) மாலை நடாத்தப்பட்ட விசேட கூட்டத்தில் இக்கருத்துக்களைக் கூறினார்.
இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்துகொண்டு கருத்துத்தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல்ரீதியில் தற்போது ஏற்பட்டுள்ள சவால்களை முறியடிப்பதற்காக பிரதித்தலைவரே போட்டியிடவேண்டுமென ஆதரவாளர்கள் ஏகோபித்த அடிப்படையில் அழுத்தத்துடன் கருத்துத்தெரிவித்தனர். கடந்த 30 வருடகாலத்து அரசியல்வாதிகளது பணிகளைவிட ஐந்து வருடகாலத்தில் சாதனைபடைக்கும் சேவைகளைப் புரிந்துள்ளதாகவும் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறும் காலம் வெகுதொலைவில் உள்ளதனால் அரசியல் இடைவெளியை ஏற்படுத்தக்கூடாது என்றும் ஆதரவாளர்கள் குறிப்பிட்டனர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் பதவி பட்டங்களைப் பெற்றுக்கொள்வதற்காக புதிதாக இணைந்து சிலர் கட்சி ஆதரவாளர்களைப் பிளவுபடுத்துவதாகவும் இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இதனால் வட்டார ரீதியில் நன்மதிப்புள்ள, படித்த, பண்புள்ள, மொழி மற்றும் பேச்சுவன்மையுள்ளவர்களைத் தெரிவுசெய்து களமிறக்கவேண்டுமெனவும் ஆதரவாளர்கள் கேட்டுக்கொண்டனர்.
இங்கு ஹாபிஸ் நஸீர் அஹமட் மேலும் கருத்துவெளியிடுகையில் -- ஆதரவாளர்களது கோரிக்கையை ஏற்று தேர்தலில் போட்டியிடுவதுடன் கிழக்கு மாகாண சபையை இலஞ்சம் ஊழலற்று செயல்திறன்மிக்க சபையாக நடாத்தியதைப்போன்று ஏறாவூர் நகர சபையையும் ஏனைய உள்ளுராட்சி மன்றங்களுக்கு முன்மாதிரியானதாக நடாத்துவதற்கு உறுதிபூணுவதாகவும் தெரிவித்தார்.
ஏறாவூர் நகர சபையை சிறுபிள்ளைத்தனமாக கொந்துறாத்துக்காரர்களுக்கு தாரைவார்க்க தயாரில்லை என்றும் குறிப்பிட்டார். அதேபோன்று ஓட்டமாவடி காத்தான்குடி உள்ளுராட்சி மன்றங்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றுவதற்கும் மட்டக்களப்பு , ஆரையம்பதி மற்றும் செங்கலடி உள்ளுராட்சி மன்றங்களில் கட்சியின் உறுப்புரிமையைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் கூறினார்.
அம்பாறை மாவட்டத்திலே அதிகமான இடங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்ற விடயம் தொடர்பாக கௌரவ தலைவர் ரவூப் ஹக்கீம் சிந்தித்துக்கொண்டிருக்கிறார். இறுதி முடிவு எடுக்கும் விடயத்தை கௌரவ தலைவர் அவர்களின் கைகளில் ஒப்படைத்துள்ளோம். எதுஎவ்வாறிருப்பினும் கிழக்கு மாகாணத்தில் சகல இடங்களிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிகபடியான ஆசனங்களைப் பெறுவதற்கு என்னுடைய முழுப் பங்களிப்பும் வழங்கப்படும்.