பெருந்தோட்ட மக்களுக்குச் சேவையாற்றக்கூடிய அமைச்சை சாணக்கியத்துடன் பெற்றுக்கொண்டதால் வீடமைப்புத்திட்டத்துக்கான நிதி தொடர்ச்சியாக கிடைத்து வருகின்றது : ஸ்ரீதரன் பெருமிதம்
வரவு – செலவுத்திட்டத்தின் ஊடாக பெருந்தோட்ட மக்களுக்கு வீடமைப்புத் திட்டத்துக்காக தொடர்ச்சியாக நிதியொதுக்கீடு செய்து வருவதானது நல்லாட்சி அரசாங்கம் மலையக மக்கள் மீது கொண்டுள்ள அக்கறை மற்றும் நல்லெண்ணத்தின் வெளிப்பாடு ஆகும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகான சபை உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது முதற்கொண்டு, மலையக மக்களுக்கு அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளும் வகையில் தனியான நிதி கடந்த மூன்று வரவு செலவுத் திட்டங்களில் ஒருக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில் 500 வீடுகள் கட்டப்பட்டு, இந்த ஆண்டு வரை 3000 க்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. கட்டப்பட்ட் வீடுகளுக்கு காணி உறுதிப் பத்திரங்களும் சட்ட ரீதியாக வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு கூடுதலான நிதி ஒதுக்கப்படுவதன் மூலம் எமது அமைச்சர் திகாம்பரத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் வீடுகளைக் கட்டும் இலக்கில் 20ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கக் கூடிய வாய்ப்பு கிட்டியுள்ளது. மேலும், 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட வீடமைப்புத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள2000 மில்லியன் ரூபா நிதிக்கு மேலதிகமாக குடிநீர், பாதை புனரமைப்பு, மலசல கூடம் முதலான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க பல மில்லியன் ரூபா நிதியும் கிடைக்கவுள்ளமை இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் விடயமாகும்.
1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு மலையக மக்களின் சார்பில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மக்களுக்கு நேரடியாக சேவை செய்யக் கூடிய அமைச்சுக்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற சாணக்கியத்துடன் செயற்படவில்லை. எனினும், நல்லாட்சி அரசாங்கத்தில் பெருந்தோட்ட சமூகத்துக்கு சேவை செய்யக் கூடிய ஓர் அமைச்சை அரசியல் சாணக்கியத்துடனும் தீர்க்கதரிசனத்துடனும் அமைச்சர் திகாம்பரம் கேட்டுப் பெற்றுக் கொண்டதன் விளைவாக இன்று கோடிக் கணக்கான நிதியில் மலையகத்தில் பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
அந்த வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணியை பலப்படுத்தி அரசியல் ரீதியில் மேலும் அபிவிருத்திகளை ஏற்படுத்திக் கொள்ள வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிதியும் அங்கீகாரமும் கிடைத்து வருவதற்காக மலையக மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.