எம்.எம்.ஜபீர்-
அம்பாறை மாவட்ட தொலைக்காட்சி செய்தியாளர் அமைப்பின் அங்குரார்ப்பண வைபவம் அம்பாறை மாவட்டத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளரும் கலாபூசணம் மீரா இஸ்ஸடீன் ஏற்பாட்டில் நிந்தவூர் இ.எப்.சி மண்டபத்தில் நேற்று இரவு நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறுபட்ட ஊடக அமைப்புக்கள் அம்பாறை மாவட்டத்தில் செயற்பட்டுவருகின்ற போதிலும் இதுவரையில் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கான அமைப்பு உருவாக்கப்படாத நிலை காணப்பட்டது.
இதனை கருத்தில் கொண்டு தொலைக்காட்சி செய்தியாளர்களை ஒழுங்குபடுத்தி அவர்களுக்கு தேவையான உதவிகளை பெற்றுக்கொடுப்பதன் மூலம் செய்தியாளர்களின் சேவையை விரிவுபடுத்துவதை நோக்காக கொண்டே இவ்அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் கருத்துக்களை வெளியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதன் பின்னர் அமைப்பிற்கான நிருவாக தெரிவும் இடம்பெற்றது.
அமைப்பின் தலைவராக யூ.எல்.எம்.றியாஸ், செயலாளராக ஆர்.தில்லைநாயகம், பொருளாளராக ஏ.எம்.எம்.றியாத், உப தலைவராக எஸ்.எம்.அறூஸ், உபசெயலாளராக எம்.எம்.ஜபீர், ஊடக இணைப்பாளராக ஏ.எஸ்.எம்.முஜாஹித், கணக்கு பரிசோதகர் யு.எல்.எம்.இஸ்ஹாக் ஆலோசகர்களாக சிரேஸ்ட ஊடகவியராளர்களான மீரா எஸ்.இஸ்ஸடீன், எம்.ஏ.பகுர்தீன் உள்ளிட்டோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இறுதியில் அனைவரும் எழுந்து நின்று ஒன்றாக இணைந்து கைகோர்த்து ஒற்றுமையுடன் செயற்படுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டமை சிறப்பம்சமாக அமைந்தது.