திருகோணமலை உப்புவௌி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் வீடுகள்- படகுகள் மற்றும் தொழில் அபிவிருத்திக்காக உதவிகளை வழங்கப்போவதாகவும் அதற்காக வேண்டி முன் கூட்டியே பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்டு வந்த மூன்று பேரையும் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (02) திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.
ஏசியா பவுண்டேசன் நிதியுதவியுடன் ஆனந்தபுரி பகுதியை அபிவிருத்தி பாதையில் இட்டுச்செல்லவுள்ளதாக மூன்று பேர் வருகை தந்து அக்கிராமத்தில் ஒருவரிடம் 40 ஆயிரம் ரூபாய் வீதம் பண மோசடி செய்ததாக தெரிவித்து திருகோணமலை விஷேட குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தனர்.
அம்முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை இச்சந்தேக நபர்களை கைது செய்து உப்புவௌி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களுக்கும் எதிராக 09 முறைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் இம்முறைப்பாடுகள் பணம் மோசடி செய்தமைக்காகவே போடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஹுனுப்பிடிய-நாஹேனவத்தை பகுதியைச்சேர்ந்த டி.எஸ்.யோகராஷா (42வயது) ராகம,பேரலந்த பகுதியைச்சேர்ந்த ஆர்.எம்.சின்னையா (44வயது) மற்றும் தம்புள்ளை,கல்பெடிய வீதி,சம்பத் வத்த பகுதியைச்சேர்ந்த வீ.ஏ.ஏ.நிரோஷன திலக் பண்டார (35வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.