தேசிய சுனாமி வேலைத் திட்டத்தின் மூலம் முன்னெச்சரிக்கைக் கோபுரங்கள் ஒரே தடவையில் பரீட்சிக்கப்படும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 2.12 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் ஏழு முன்னெச்சரிக்கைக் கோபுரங்களும் ஒரே தடவையில் பரீட்சிக்கப்பட்டு அப்பிரதேசங்களிலுள்ள மக்களையும் அனர்த்தத்துக்குத் தயார்படுத்தும் நோக்குடனான நிகழ்வு இடம்பெற்றது.
அந்த வகையில் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்குடாவில் அமைக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கைக் கோபுரத்தில் பரீட்சிக்கப்பட்டது.
முதலாவது எச்சரிக்கை சரியாக 2.12 மணியளவிலும், இரண்டாவது எச்சரிக்கை சரியாக 2.14க்கும் விடுக்கப்பட்டது.
கோறளைப்பற்று பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.நிரூபா பிருந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.சுரேஸ்குமார், கிராம சேவை உத்தியோகத்தர் க.கிருஸ்ணகாந்த், செயலக உத்தியோகத்தர்கள், வை.எம்.சி.ஏ உறுப்பினர்கள், வாழைச்சேனை பொதுச் சுகாதார பணிமணை உத்தியோகத்தர்கள், கல்குடா பொலிஸ் உத்தியோகத்தர்கள், கடற்படையினர், இராணுவத்தினர், பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது முன்னெச்சரிக்கைக் கோபுரத்தில் எச்சரிக்கை தொடர்பாக விடுக்கப்பட்ட செய்தியை கேள்வியுற்ற மக்கள் கல்குடா நாமகள் வித்தியாலயத்தில் உள்ள முகாமில் தஞ்சமடைந்தனர். இவர்களுக்கான முதலுதவி, மீட்புப் பணி, முகாமைத்துவம் உட்பட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை கோபுரங்கள் அமைக்கப்பட்டு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கோட்டைக்கல்லாறு, மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காத்தான்குடி, மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கல்லடி, ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள களுவன்கேணி, கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கல்குடா, கோரணைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஊரியன்கட்டு ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றது.